Friday, December 11, 2009

எனினும் அவரே எம்தலைவர்


இளமையில் தமிழக இளைஞர்கள் உளத்தில்
இனஉணர் வதனை எழுப்பியவர்
வளர்ந்தபின் தமது வாழ்வியல் நலங்களை
வளர்ப்பதில் திறமை காட்டுபவர்

எல்லா மக்களும் பகுத்தறி வோடு
இருந்திட வேண்டும் எனஉரைப்பார்
இல்லத் துள்ளோர் பகுத்தறி வின்றி
இருப்பதை ஏற்றுக் கொண்டிடுவார்

ஒருநாள் எனக்கு இந்த நிறந்தான்
உகந்தது என்பார் ஆம்என்போம்
மறுநாள் தொடங்கி அந்த நிறத்தில்
வாங்கிய சால்வை அணிவிப்போம்

மதவா தத்தை எதிர்ப்போம் என்றதை
வகையாய் மறந்து தேர்தலிலே
மதவா திகளை மதித்துக் கூட்டணி
வைப்பார் நாங்கள் மதித்திடுவோம்

என்றும் ஊழலை எதிர்ப்போம் என்பார்
எனினும் ஊழல் கட்சியுடன்
ஒன்றாய்க் கூட்டணி என்பார் அந்த
ஊழலோ டிணைந்து உழைத்திடுவோம்

நானே எல்லாம் என்பார் நாங்கள்
நாவால் ஆமாம் ஆம்என்போம்
தேனாய்ப் பேசிப் பேசியே எங்களைத்
திசைமா றாமல் நிறுத்திடுவார்

காக்கைக் கூட்டம் புகழ்வதைக் கேட்டுக்
களிப்பில் மிதப்பார் இதுஒன்றே
போக்கென வந்து புறம்பேசு வோர்க்குப்
புகலிடம் தந்து போற்றிடுவார்

உலகத் தமிழர் தலைவர் என்போம்
உள்ளூர்த் தமிழரை ஏமாற்றும்
கலையில் தேர்ந்தவர் எனினும் அதனைக்
கண்டுகொள் ளாமல் தவிர்த்திடுவோம்

தொப்புள் கொடியாம் உறவுகள் இழப்பால்
துடித்திடும் போதும் அரசியலில்
எப்படிக் காய்களை நகர்த்தலாம் என்பதை
எண்ணியே நாளும் செயல்படுவார்

ஒன்றே கொள்கை குடும்ப உறவுகள்
ஓங்கிச் செழிக்க உழைப்பதுதான்
என்றே வாழ்வார் என்பதை அறிவோம்
எனினும் அவரே எம்தலைவர் !!