Tuesday, October 12, 2010

மீனவத் தமிழனுக்கு விடியல் வருமோ?
(பேராசிரியர் அறிவரசன்)


ஆழ்கடலில் மீன்பிடிக்க அருந்தமிழர் படகில்
அலைகின்றார்; அடைகரையில் அவர்பெண்டு பிள்ளை
வாழ்கின்றார்; கடல்சென்ற மறத்தமிழர் திரும்பி
வந்தாலே வாழ்வுண்டு எனநம்பு கின்றார்;
வீழ்கின்றார் எந்தமிழ் மீனவர்கள் தீய
வெறிகொண்டு திரிகின்ற சிங்களரால்; இங்கே
ஆழ்கின்றார் துயர்கடலில் குடும்பத்தார் நாளும்
அழுகின்றார் அவர்கண்ணீர் ஆழ்கடலைச் சேரும்.



பலநூறு மீனவர்கள் கொலைசெய்யப் பட்டார்;
பாவியராம் சிங்களர்தாம் ஈவிரக்க மின்றி
வலையறுத்தும் மீன்பறித்தும் படகுகளை உடைத்தும்
வருத்தமுறச் செய்கின்றார்; வாழவழி யின்றி
நிலைகுலைந்து நிற்கின்ற மீனவரைக் காக்கும்
நினைப்பின்றித் தில்லியிலும் சென்னையிலும் ஆள்வோர்
தலைதிருப்பி நிற்கின்றார்; கொடுமையிலும் கொடுமை


தனியினமோ கரையோர மீனவர்கள்? அவரும்
தமிழனமே என்பதைநாம் மறந்துவிட லாமோ?
இனுணர்வுத் தமிழரெல்லாம், மீனவரை வருத்தும்
இடர்களைய ஒருங்கிணைந்து கிளர்ந்திடவேண் டாமோ?
மனிதநேய மில்லாத வன்முறைச்சிங் களரால்
வாடுகின்ற மீனவராம் தமிழர்களைக் காக்க
இனிமேலும் தயங்காமல் எழுந்துகளம் காண்போம்
இனஉணர்வுக் கிலக்கணத்தை எழுதிடுவோம் வாரீர்!!!
வாழத் துடிக்கும் ஈழத்தமிழர்
(பேராசிரியர் அறிவரசன்)


இன்னும் சிங்களக் கொடியரின் உள்ளம்
இரங்கிட வில்லை நெடுநாளாய்
வன்னிமு காமில் பல்லா யிரம்பேர்
வருத்தும் பசியால் வாடுகிறார்
துன்பமே செய்யும் நோய்களை உடனே
துடைத்திட மருத்துவம் ஏதுமின்றி
இன்னலால் வாடி இளைக்கிறார் அவர்தம்
இடரினைக் களைய எழுந்திடுவோம்



வெளியே செல்லென முகாமி லிருந்து
விரட்டப் பட்டோர் தங்குவதற்கு
வழியே இன்றி வாழிடம் இன்றி
வாட்டும் பசியுடன் மரத்தடியில்
விழியில் கொட்டும் நீருடன் வாழ்வை
வெறுத்து நிற்கிறார் அவர்வாழ
வழிசெய் வதுநம் கடமை அன்றோ
வள்ளல்க ளாவோம் தோழர்களே!


வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடிய வள்ளலார் வழியினிலே
நீடிய பசியால் நெடியதீப் பிணிகளால்
நினைப்பருந் துயரால் நிலைகுலைந்து
வாடியே நிற்கும் ஈழத் தமிழரின்
வாட்டம் போக்கிடத் தோழர்களே!
நாடியே வருக இயன்றவா றெல்லாம்
நல்லன செய்து நலஞ்சேர்ப்போம்


வாழத் துடிக்கும் ஈழத் தமிழர்
வாட்டம் போக்கிட முயலாமல்
நீளப் பேசிக் காலம் போக்கி
நிற்கிறோம் வறிதே; உறவுகளாம்
ஈழத் தமிழரின் இன்னலை அறிந்தபின்
என்னுளம் கலங்கி அழுகின்றேன்
தோழர்க ளே!அவர் துயரினைக் களையத்
தொடங்குவோம் பணியைத் தொடர்ந்திடுவோம்

நலிந்து வாடும் நந்தமிழ் உறவுகள்?

நலிந்து வாடும் நந்தமிழ் உறவுகள்?
(பேராசிரியர் அறிவரசன்)


என்னதான் தவறு செய்தனர் தமிழர்?
எங்கள் உரிமை வேண்டுமெனச்
சொன்னது தவறோ? தொல்லைதாங் காமல்
துடித்தெழுந் ததுவும் தவறாமோ?
வன்முறை யாளராம் சிங்களர் கொடுமையால்
மாண்புசேர் ஈழத் தமிழரெலாம்
பன்னலம் இழந்து படுதுயர் உழந்து
பாழ்பட நிற்கிறார் ஈழத்தில்



கைகளை இழந்தும் கால்களை இழந்தும்
கண்களை இழந்தும் காப்பதற்கு
மெய்வகை உறவோர் யாருமில் லாமல்
வீழ்ந்து கிடக்கிறார்; உயிர்வாழச்
செய்வகை ஈதெனத் தெரியா தவராய்த்
திகைத்துச் சாவை எதிர்நோக்கி
அய்யகோ நந்தமிழ் உறவுகள் அங்கே
அழுது புலம்பித் தவிக்கின்றார்


கல்வி இருந்தும் கைத்திறம் இருந்தும்
கடுமையாய் உழைக்க மனமிருந்தும்
அல்லற் படுந்தமிழ் ஈழத் தார்க்கென
ஆரும் இல்லை வேலைதர
பல்வகைத் திறமையும் பாழ்பட, அவர்தாம்
பசியினைத் தணிக்கக் கடும்வெயிலில்
கல்லுடைக் கின்றார் அதுவும் இன்றிக்
கழிக்கின்றார் பலநாள் கவலையிலே


அல்லற் படுவோர் தம்மைக் காக்க
அணிதிரண் டெழுவோம்; ஈழத்தில்
தொல்லைப் படுவோர்க் குதவிட இன்றே
துடிப்புடன் எழுவோம்; துயர்க்கடலில்
தள்ளப் பட்டநம் உறவுகள் வாழத்
தயக்கம் இன்றி உதவிடுவோம்
நல்லறம் மாந்த நேயமே வாழ்வில்
நலிந்தோர்க் குதவுதல் கடமையன்றோ?