வளர்க தமிழ்உணர்வு வெல்க தமிழ்த்தேசியம்
பேராசிரியர் அறிவரசன் தமிழ் உணர்வாளர்கள் - ஒருங்கிணைப்புக்குழு
இன உணர்வுள்ள தமிழ் உறவுகளுக்கு, வணக்கம். 'தமிழ்த் தேசியம்' என்னும் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள தமிழ் உணர்வாளர்களையும் தமிழ்த் தேசிய அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்னும் உயரிய குறிக்கோளுடனும் அந்த குறிக்கோள் நிறைவேற நீங்கள் துணை நிற்க வேண்டும் என்னும் கோரிக்கையுடனும் இந்த மடல் உங்களிடம் சேர்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் ஈடுபாடுள்ள கட்சிகள், இந்திய நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றத்திலும் எந்த வழியிலாவது இடங்களைப் பெற முயல்கின்றன. வாய்ப்பு நேர்ந்தால் மாநிலத்தின் ஆட்சி பீடத்தில் அமரத் துடிக்கின்றன. தில்லியில் அமைக்கப்படும் கூட்டணி அரசு எதுவாயினும் அதில் பங்கேற்று அமைச்சரவையில் இடம்பெறப் போராடுகின்றன. சுருங்கச் சொன்னால் ஆட்சி அதிகாரப் பதவிகளைப் பெறுவது ஒன்றையே கொள்கையாக்க் கொண்டுள்ளன. இத்தகைய கட்சிகள் தமிழின உரிமைகளை வென்றெடுக்க, என்றும் துணைநிற்க மாட்டா எனபது தெளிவு.
தமிழ்த்தேசிய அமைப்பு எனத் தம்மைக் காட்டிக் கொள்கிற சில கட்சிகள், நேரடியாகத் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும், தமிழின உணர்வாளர்களை அடக்கி, ஒடுக்க முனைகின்ற அரசியல் கட்சிகளுக்குச் சார்பாகத் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடத் தயங்குவதில்லை. இத்தகைய அமைப்புகளையும் தமிழ் உணர்வாளர்கள் நம்பியிருக்க முடியாது.
தமிழ்த் தேசியத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு செயற்படுகின்ற அமைப்புகள், தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வெளிப்படையாகக் காட்டுகின்றன. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுக்கின்றன. தமிழ்த்தேச விடுதலை, தமிழீழ விடுதலை என்னும் கொள்கைகளில் அவை தமக்குள் ஒத்துப் போகின்றன.
பல வகையிலும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ள தமிழ்த்தேசிய அமைப்புகள், 'தமிழின விடுதலை' என்னும் ஒற்றைக் கொள்கையின் அடிப்படையில் ஒரு கூட்டமைப்பாகச் செயற்பட வேண்டும். ஒவ்வொரு தமிழ்த் அமைப்பும் வெவ்வேறு காலங்களில் வேறு வேறு இடங்களில் உரிமைக்குரல் கொடுக்கும் போது, ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருப்போர், அந்தக் குரலைப் பொருட்படுத்தாமல் புறக்கணிக்கின்றனர்.
தமிழ்த் தேசிய அமைப்பகள், ஒத்த கொள்கையில் கூட, ஒருங்கிணைந்து கூட்டாகச் செயற்படாமல் தனித்தனியே நிற்பதை இன உணர்வுடைய தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய அமைப்புகள், ஒரு பொதுக்கொள்கையின் அடிப்படையில் கூட்டமைப்பு ஒன்றை இதுவரை அமைத்துக்கொள்ளாமல் இருப்பது குறித்து, இன உணர்வாளர்கள் கவலைப்படுகின்றனர். அத்தகைய கூட்டமைப்பு உடனே உருவாக்கப்பட வேண்டும் என்னும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 22 தமிழர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் வெவ்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், 'தமிழீழ விடுதலை' என்னும் ஒற்றைக் கொள்கையின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் செயற்பட்டதை நாம் அறிவோம்.
தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகளும் 'தமிழர் வாழ்வுரிமைக்காகப் போராடுதல்' என்னும் ஒற்றைக் கொள்கையின் அடிப்படையில் ஒரு கூட்டமைப்பாகச் செயற்படமுடியும். அவ்வாறு செயற்பட்டால், அந்தக் கூட்டமைப்பின் வலுவைக் கண்டு, அமைப்புச் சாராமல் தமிழ்நாடெங்கணும் பரவலாக ச் சிதறிக் கிடக்கின்ற தமிழ் உணர்வாளர் அனைவரும் அந்தக் கூட்டமைப்புடன் தங்களை இணைத்துக் கொண்டு கூட்டமைப்பின் வலிமைக்கு மேலும் வலிமை சேர்ப்பார்கள். வலிமை நிறைந்த கூட்டமைப்பின் குரலுக்கு ஆட்சியாளர்கள் வளைந்து கொடுப்பார்கள்.
1983-ஆம் ஆண்டு, இலங்கைச் சிங்களர், ஈழத் தமிழர்க்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கொன்று குவிக்கப்பட்டதை அறிந்து மனம் கலங்கிய தமிழ்நாட்டு மக்கள், கட்சி எல்லைகளைக் கடந்து கிளர்ந்தெழுந்தனர். ஈழத் தமிழர்க்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். அந்தக் காலக்கட்டத்தில் தமிழ்த் தேசிய அமைப்புகள் தனித்தனியே பிரிந்து நின்றதால், அன்றைய எழுச்சி காலப் போக்கில் அடங்கிவிட்டது.
சீனா, பாகித்தான் முதலிய நாடுகள் வழங்கிய படைக் கருவிகளுடனும் இந்தியாவின் முழுமையான ஆதரவுடனும் வழிகாட்டுதலுடனும் இலங்கைச் சிங்கள அரசு, ஈழத்தமிழர்களை முற்றாக அழித்து விட வேண்டும் எனும் இலக்குடன் நான்காம் ஈழப்போரை நடத்தியது. 2009-ஆம் ஆண்டு கிளிநொச்சியுள் நுழைந்த சிங்களப் படையினர், தொடர்ந்து தமிழீழத்தின் பல நகரங்களை வல்வளைப்புச் செய்தனர். உலக அளவில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளைஏயும், நச்சுக் குண்டுகளையும் வீசித் தமிழ் உறவுகளைக் கொன்றுகுவித்ததை அறிந்தபோது பதறினோம். ஈழத் தமிழ் உறவுகளைக் காக்க வேண்டும், அதற்கான முயற்சிகளில் தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்ட்மென விரும்பினோம். அந்த நிலையிலும் தலைவர்கள் தனித்தனியே நின்றனர். கூட்டாகச் செயற்படாமையால், தமிழர்களை ஏமாற்றிய தமிழ்நாடு அரசுக்கோ, சிங்களப் பேரினவாத அரசுக்குத் துணையாக நின்ற இந்திய அரசுக்கோ வலுவாக அழுத்தம் கொடுக்க முடியவில்லை.
ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டாலும் அண்டை மாநில அரசுகளால் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கேற்ற வலுவுள்ள ஒரு தமிழ்த்தேசக் கூட்டமைப்புத் தேவை. தனித்தனியே நின்று தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன்?
தமிழின உணர்வுடன் நெஞ்சம் கன்ன்று நின்று கொண்டு இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களின் தவிப்பைப் போக்க வேண்டும். அதற்குத் தமிழ்த் தேசக் கூட்டமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
இனநலத்தை முன்னிறுத்திப் பிறநலங்களைப் பின்னுக்குத் தள்ளித் தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்கள், தமிழ்த்தேசக் கூட்டமைப்பை உடனே கட்டமைக்க வேண்டும். தமிழ் உணர்வாளர்களின் தணியாத வேட்கை இதுதான்.
பதவியில் அமர்வதையும் பணம் சுருட்டுவதையுமே கொள்கையாகக் கொண்டு தமிழர் உரிமைகளைக் காக்கத் தவறிய கட்சிகளைப் புறந்தள்ள வேண்டும். விரைவில் வரவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தமிழ் உணர்வுடன் செயற்படும் கட்சிகளின் புதியகூட்டணியை உருவாக்க வேண்டும். இந்தச் சீரிய பணியை நிறைவேற்றுவதற்காகவும் தமிழ்த் தேசக் கூட்டமைப்புத் தேவை என்பதை வலியுறுத்துகிறோம்.
தமிழின உணர்வாளர்களே!!! தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்களுக்கு உங்கள் வேட்கையை வெளிப்படுத்துங்கள்.
தமிழ் உணர்வுடன் உங்கள்
அறிவரசன்
குறிப்பு ; தமிழ்தேசக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்காகவே 'தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைப்புக்குமு' அமைக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு உருவானதும் இந்தக் குழு, அக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும்.
Friday, March 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கடிதமுகவரி தரவும்.பேசிமுகவரி தரவும் . இணையத்தில் மட்டும் பேசுவது விலையாட்டாகத்தான் முடியும்.
தொடர்புக்கு,
கை பேசி என் 09894192146
Post a Comment