Wednesday, May 12, 2010

இயல் - 11

                             நெஞ்சில்     புகைந்த    நெருப்பு


"சாமியும்    இல்லை    சாதியும்    இல்லை
பூமியில்    எல்லாம்    பொதுஎனப்    பேசும்
மடையர்    ஊரில்    மலிந்து    விட்டனர்;
கடையராம்    சேரிக்    கயவரும்    கூடக்
கற்க    லாயினர்;    ஆதலால்    உலகம்                5
முற்றும்    கெட்டது;    முன்னாள்    போலவர்
கையைக்    கட்டி    வாயைப்    பொத்தி
மெய்யும்    ஒடுங்கி,    மிக்கவே    நடுங்கி
நின்ற    நிலைமை    சென்று    விட்டதே;
இன்று    சேரியர்    என்னையும்    எதிர்க்கத்               10
துணிந்து    விட்டனர்;    தொலைப்பேன்"    என்று
நினைந்து    வந்த    நிலக்கிழார்    முன்னே
மாரி    யப்பனின்    வழியினன்    ஒருவன்
நேர்எதிர்    வந்து    நிமிர்ந்து    சென்றனன்
"என்னடா    கொழுப்போ?    இந்த    ஊரின்               15
பண்ணையார்    வருகிறேன்    பணிவில்    லாமல்
செல்கிறா    யேடா    சேரிக்    கெல்லாம்
பொல்லாக்    காலம்    புகுந்து    விட்டதோ?"
என்று    பெருமாள்    இரைய,    எதிரே
சென்றவன்    நின்று    திரும்பிப்    பார்த்தனன்;           20
பார்வையின்    கடுமையைப்    பகைமை    உணர்வை
நேரில்    கண்டு    நிலைமையை    உணர்ந்த
நிலக்கிழார்    அங்கு    நிற்கவே    இல்லை;
வலக்கால்    முந்தி    இடக்கால்    முந்திஎன
விரைந்து    நடந்து    வீட்டின்    உள்ளே               25
நுழைந்ததும்    கதவை    நொடித்துச்    சாத்தினர்;
சேரிக்    காரனை    எண்ணிச்    சினத்துடன்
கூரிய    கடுஞ்சினம்    கொண்ட    வேளையில்,
வீட்டுப்    பணிசெயும்    வேலைக்    காரி
தோட்டத்    திருந்து    வீட்டினுள்    நுழையச்               30
சினத்தை    மறைத்துச்    சிரிப்பைக்    குழைத்து
"நினைத்தேன்    உன்னை    நேரில்    வந்தாய்
இங்கே    எல்லா    இடத்தும்    தேடினேன்
எங்கே    ராணி?"    என்றார்;    "நூலகம்
செல்வதாய்ச்    சொல்லிச்    சென்றது;    திரும்பிட               35
வில்லை    இன்னும்;    வேலையை    முடித்தேன்;
அவ்விடம்    சென்றுநும்    அருமை    மகளை
இவ்விடம்    அழைத்து    வரவோ?    என்று
கேட்டுநின்    றாளைப்    பார்த்து    நின்றார்.
"வாட்டம்    இலாத    மாநிற    மேனியள்               40
முப்பது    வயதாம் !    அப்படிச்    சொல்வது
தப்பே    இருபதைத்    தாண்டி    வயதைச்  
சொல்வது    பிழையெனும்    தோற்றம்;    இவளை
வெல்வ(து)    எப்படி?    வெல்வேன்;    ஆயினும்
சாதி    யொன்று    தடையாய்    உளதே;               45
சாதியில்    வள்ளி    தாழ்ந்தவள்;    அவளை
முருகனே    யானை    முகனின்    துணையால்
திருமணம்    செய்தனன்;    திருமணம்    இன்றி
மறைவாய்    இவளை    வைத்துக்    கொண்டால்
குறைதான்    என்ன?    குறிப்பால்    இன்றுஎன்               50 ஆசை    காட்டினால்    அவளும்    இசையலாம்;
ஓசை    இலாமல்    ஒப்புதல்    பெறலாம்
இருபதில்    கணவனாய்    ஒருவனை    ஏற்றபின்
அறுபது    நாளில்    அறுத்து    நிற்பவள்;
அவட்கும்    ஆசை    இருக்கும்    அன்றோ?               55
முயற்சி    செய்வேன்    முடிப்பேன்"    என்றே
உளத்தில்    எண்ணி    உரியவ    ளிடத்துக்
கிளத்துவ(து)    எப்படி    எனக்கிறு    கிறுத்து
நிலைத்த    பார்வையை    அவள்மேல்    நிறுத்தி
மலைப்பு    நீங்கி    வாயைத்    திறந்து               60
பேச    முனைந்த    வேளையில்,    வீட்டு
வாசலில்    வந்தனள்    மகளாம்    அரசி;  
சாதித்    தாழ்வையும்    தகுதி    உயர்வையும்
மோதி    மறைத்த    மோகப்    பேரலை,
மகளைக்    கண்டதும்    மடிந்து    வற்றி               65
அகத்தில்    சினஅலை    ஆஅர்த்(து)    எழுந்ததால்,
"அடங்கா    தவளே!    அப்பன்    சொற்கு
மடங்கா    தவளே!    அந்த    மடையனைக்
காணவோ    சென்றாய்?    கற்றதன்    செருக்கோ?
நாண    மிலையோ    நாயே     சொல்" என,           70
"எந்தையே!    கடுமொழி    ஏனோ?    தாங்கள்
வெந்திட    யான்செய்    வினைதான்    என்னோ?
நூலகம்    சென்றுநன்    னூல்களைக்    கற்பதும்
நாளிதழ்    பார்த்து3ல்    லறிவை    வளர்ப்பதும்
கூடாச்    செயல்எனக்    கூறுதல்    தகுமோ;               75
மாடென    வீட்டில்    மடிந்து    கிடக்கவோ
கல்வி    அளித்தெனைக்    கைதூக்கி    விட்டீர்
சொல்லுக"    என்றவள்    தொடுத்தது    கேட்டுக்
கற்றதால்    உற்றதென்?    கருத்தில்    லாமல்
பெற்றவன்    எனக்கெதிர்    பேசி    நிற்கிறாய்               80
இனியும்    படித்தால்    என்ன    ஆகும்?
பணிவு    பறக்கும்    துணிவே    பிறக்கும்
தகுதிச்    சிறப்பையும்    சாதிச்    சிறப்பையும்
பகுதி    பகுதியாய்    பாழடித்    திடுவாய்
மானம்    அழிந்து    மதிப்புக்    குறைந்த               85
ஈனப்    பிறவியாய்    எனைஆக்    கிடுவாய்
ஒன்று    சொல்கிறேன்    உறுதியாய்ச்    சொல்கிறேன்
இன்றே    சென்றென்    தங்கை    மகனை
அழைத்து    வருவேன்;    அவன்உன்    கழுத்தை
வளைத்துத்    தாலியை    மாட்டச்    செய்வேன்;               90
எங்கும்    அதுவரை    ஏகிடேல்;    வீட்டில்
தங்குக    மீறிடின்    பொங்கி    எழுவேன்"
என்று    பெருமாள்    கொன்றது    போல
நின்று    சொன்ன    நெடுமொழி    கேட்டு,
மெய்யெலாம்    நடுங்க    விதிர்ப்புற்(று);    அரசி                   95
செய்வ(து)    என்எனத்    திகைத்திட,    "அய்யா !
என்று    வாசலில்    எழுந்த    குரலை
நன்றே    அறிந்தவள்    ஆதலால்,    அரசி,
வந்தவர்    மாறனார்    என்று    மகிழ்ந்தும்
அந்தநே    ரத்தில்    வந்ததற்(கு)    இரங்கியும்              100
சென்றனள்;    வாசலில்    சிரித்த    முகத்துடன்
நின்ற    தலைவரை    நேர்உற    வணங்கி
இல்லினுள்    அழைத்(து) ஓர்    இருக்கையைக்    காட்டி
உள்ளே    சென்று    தந்தைக்(கு)    உரைத்தனள்;
திருமாறன்    எனும்    பெயரைக்    கேட்டும்              105
ஒருமகள்    காட்டும்    ஊக்கம்    கண்டும்
பெரியார்    கொள்கை    பேசு    வோர்என
அறிந்தவ    ராகி,    ஆர்வம்    இலாமல்
வந்து    மாறனார்    வணக்கம்    ஏற்று,
"வந்த(து)என்?    மகளைப்    பார்க்கவோ"    என்ற                  110
பெருமாள்    தம்மின்    பேதைமை    உணர்ந்து
"பெரியராம்    தங்களைப்    பார்த்துப்    பேசவே
வந்தேன்"    என்ற    மாறனார்    தமக்கும்
தந்தை    யார்க்கும்    சுவைநீர்    தந்து
நின்ற    அரசியை    நோக்கிப்    பெருமாள்,              115
"சென்றுன்    கடமைகள் செய்"என்(று)    அனுப்பினர்.
மாறனார்,    அரசியின்    மாண்புகள்    தம்மைக்
கூறிப்    புகழ்ந்திடக்    கொண்ட    எரிச்சலால்,
"இதற்கோ    வந்தீர்?    இவளின்    மதியால்
எதிர்க்கிறாள்    என்னை    இதுவோ    மாண்பு?"              120
என்றனர்    பெருமாள்    "எதனால்    எதிர்க்கிறாள்?
நன்றெனில்    சொல்க"    என மாறனார்    நயந்திட,
"சொல்வதிற்    கில்லை    சொல்க    நீவீர்என்
இல்லம்    வந்ததேன்?"    என்றெதிர்    வினவ,
"அய்ய !    அமர்க -    ஆறுக    சினமே              125
மெய்யாய்    நும்நலம்    விரும்பியே    வந்தேன்
நும்மகள்    அறிவின்    நுட்பமும்    திட்பமும்
செம்மையாய்    அறிவேன்    சிறப்புடன்    அவள்தான்
வாழ்ந்திட    விழைகுவன்;    மற்றுஅவள்    காதலால்
சூழ்ந்தன    பகையும்    தொல்லையும்    என்று              130
சிலர்சொலக்    கேட்டுத்    தெளிந்ததை    சொல்லி
நலஞ்செய    விரும்பியே    நானிங்கு    வந்தேன்
என்ன    குழப்பம்    என்னிடம்    சொல்க" எனச்
"சொன்னால்    குழப்பம்    தொலைத்திடக்    கூடுமோ?
சொல்கிறேன்    எனமகள்    தொடுதக(வு)    இலாத              135
புல்லிய    ராம்கீழ்ப்    புலையருள்    ஒருவனைக்
காதலன்    என்கிறாள்    கணவன்    என்கிறாள்
சாதியில்    உயர்வு    தாழ்விலை    என்கிறாள்
பன்றி    யுடன்பசு    ஒன்றிட    லாமோ?
என்றும்    காக்கை    யுடன்குயில்    இணையுமோ?          140
நரியைப்    பரிதான்    நாடுமோ    உயர்ந்த  
கரிதான்    கழுதையைக்    காத    லிக்குமோ?
என்மகள்    அந்த    இழிந்த    பிறவியைத்  
தன்துணை    என்றால்    சாதிஎன்    னாவது?
சொல்க" எனப்    பெருமாள்    துடிப்புடன்    கேட்க,              145
"நல்ல(து)    அய்ய! நான்    சொல்வது    கேளிர்!
பன்றியும்    பசுவும்    ஒன்றுவ    தில்லை
என்றும்    காக்கை    குயில்இணை(வு)    இல்லை;
நரியைப்    பரிதான்    நாடுவ    தில்லை
கரியும்    கழுதையைக்    காதலிக்    காது                  150
முற்றிலும்    உண்மைநீர்    மொழிந்த    எல்லாம்
கற்றவர்    ஏற்கும்    கருத்தே;    ஆயினும்
பன்றியும்    பன்றியும்    பசுவும்    பசுவும்
ஒன்றுதல்    உண்டாம்    உயர்வுதாழ்(வு)    இல்லை
மக்களில்    மட்டும்    உயர்வும்    தாழ்வும்              155
தக்கதோ?    சாற்றுக    சாதிதான்    பிறப்பால்
பேசுதல்    முறையோ?    பேணுதல்    முறையோ?
ஆசு    போற்றுதல்    அறிவோ?    அறமோ?
சேரியின்    உள்ளும்இத்    தெருவின்    அகத்தும்
ஊரிலும்    உலகிலும்    உலவிடும்    மக்கள்              160
அனைவரும்    ஓரினம்    அன்றோ?     செய்யும்
வினையால்    அன்றோ    வேற்றுமை    விளைவது?
நும்மகள்    அரசியும்    அவள்சொலும்    அன்பனும்
நன்கனம்    கற்றவர்;    நலம்செய்    கல்வியால்
ஒருகுலம்    அன்றோ?    ஒன்றுதல்    தீதோ?              165
இருவரும்    வாழ்வில்    இணைந்திட    இசைதலே
அவர்க்கும்    நுமக்கும்    ஆக்கம்    தருவதாம்
எவர்க்கும்    அஞ்சேல்    என்உரை    ஏற்பீர்"
என்று    மாறனார்    எடுத்து    மொழிந்திட,
"நன்று     நன்றுநும்    ஆடகம்    நன்று              170
தீது    செய்யும்அச்    சேரிப்    பயல்உமைத்
தூது    போம்எனத்    துரத்தினன்    கொல்" எனப்
பெருமாள்    சினந்து    பேசலும்    வந்த
அருமையள்    அரசி,    "அப்பா!    இவர்சீர்
அறியா    மையினால்    சிறுமை    செய்கிறீர்              175
அறிவிப்    பேன்" என,    "அறிவேன்    அறிவேன்
இல்லை    சாதி    என்றது    மேயிவர்
பொல்லா    தார்எனப்    புரிந்து    கொண்டேன்
உள்ளே    போநீ;    உம்மைத்    தானே!
தள்ளிக்    கதவைச்    சாத்து    முன்னர்ப்              180
போம்" எனச்    சொல்லப்    புலம்பிய    அரசியைத்
தாய்என    நோக்கித்    தண்டமிழ்    மாறனார்
அகன்றனர்    அவ்விடம்;    நெஞ்சில்
புகைந்த    நெருப்புடன்    புரட்சியை    நினைந்தே     

Tuesday, May 11, 2010

இயல் - 10

                         தீநெறி காட்டிய சிறுமை


போற்றத்    தக்க    நாக    ரிகங்கள்
ஆற்றங்    கரைகளில்    அரும்பின    என்பர்
பூவிரி    எழிலுடன்    பொங்கிப்    பரந்த
காவிரி    யாற்றின்    கரையிலும்    மேலைக்
கல்லிற்    பிறந்து    கடலிற்    கல்ந்திடச்               5
செல்லா    வையை    சேர்ந்த    கரையிலும்
பொதிகையிற்    பிறந்து    பொலிவுடன்    ஓடி
மதியொளி    முத்து    மணக்கும்    கடலில்
போஒய்ப்    புணரும்    பொருநை    என்னும்
தாவில்    தாமிர    பரணிக்    கரையிலும்          10
தமிழ்நா    கரிகம்    தழைத்ததாம்;    ஆங்கே
உமிழ்நா    கரிகம்    உடையராய்    வந்தோர்
வேத    மென்றும்    சாத்திர    மென்றும்
நீதி    யென்றும்    நியமம்    என்றும்
பலபட    மொழிந்த    பசப்புரை    கேட்டு              15
நலமுளோர்    அவரென    நவைத்தமிழ்    வேந்தர்
விழுமிய    பரிசுகள்    விரும்பி    வழங்கினர்;
கழனிகள்    பெற்றும்    ஆற்றங்    கரைகளில்
பிரம    தேயமாய்ப்    பெற்ற    ஊர்களின்
உரிமை    பெற்றும்    ஊறுசெய்    ஆரியர்              20
வாழத்    தொடங்கினர்;    வாடைத்    தொல்லை
சூழத்    தொடங்கித்    தொடர்ந்து    வந்தது;
பிராமணர்    சூத்திரர்    என்னும்    பிரிவுகள்
வராத     நாட்டில்    வந்து    நிலைத்தன;
பூரியர்    பிராமண    ராகத்    தங்களைக்               25
கூறிக்    கொண்டனர்;    குலைந்த    தமிழரைச்
சூத்திரர்    என்றும்    தொடத்தகார்    என்றும்
ஆக்கினர்;    தமிழரும்    அறியா(து)    ஏற்றனர்;
வீழ்ந்த    தமிழர்    விழிப்புறா    வண்ணம்
பாழ்மதக்    கொள்கையைப்    பரப்பி    வந்தனர்;               30
அறிவை    இழந்து    மானமும்    இழந்து
சிறுமை    யுற்ற    தமிழர்    தொடர்ந்து
பன்னூ    றாண்டுகள்    பாழ்பட்    டிருந்த
பின்னர்    இங்குப்    பெரியார்    தோன்றி
அகவிருள்    நீங்கிட    அறிவொளி    பாய்ச்சினர்;           35
இகழ்நிலை    நீங்கிட,    ஈடிலாப்    புதுநெறி
வகுத்துத்    தமிழர்க்கு    மானமும்    அறிவும்
புகட்டிய    தாலொரு    புரட்சி    எழுந்தது.
புரட்சியின்    பொருளும்    போக்கும்    அறியா(து)
இருட்டில்    வாழ்சில    முரட்டுத்    தமிழர்               40
பெரியார்    நெறியைப்    பிழைநெறி    என்றனர்;
பெரியோர்    பிராமணர்;    பிரம்மன்    படைப்பில்
உயர்ந்தோர்;    கடவுட்(கு)    ஒப்பாம்    அவர் என
மயங்கி    யிருந்தனர்;    மாற்றார்    மகிழ்ந்தனர்.
தமிழகம்    இத்தகு    தடுமாற்    றத்துடன்               45
அமைதி    இழந்தே    அலமந்த    காலை,
நாவ    லூராம்    நன்செய்    யூரை
மேவி    மாலைபோல்    விளங்கிய    நாவல்
ஆற்றங்    கரையின்    அருகில்    நீண்டு
மேற்குக்    கிழக்காய்    விளங்கிய    வீதியில்               50
வந்த    ஆரியர்    வழியினர்    யாமென
எந்தக்    காலமும்    எண்ணியும்,    இறந்த
வடமொழி    வேதமே    ஓதியும்    கடமையாய்க்
கடமுட    மந்திரம்    காலையும்    மாலையும்
பொருளில்    லாமற்    புலம்பியும்    நாளும்               55
மருள்சேர்    நெறிகளை    மற்றவர்க்    குரைத்தும்
சிலரா    யிருந்து    பலராந்    தமிழர்
உலைதற்    கேற்ப    ஊமை    நாடகம்
ஆடுநர்    தம்முள்    அனந்தரா    மன்எனும்
கேடுசெய்    குநராம்    கீழவர்    தம்மை               60
ஞாலத்    திற்கே    நல்வழி    காட்டும்
மேலவர்    என்றும்    விதியால்    உயர்ந்த
சாதிய    ரென்றும்    தகுதி    நிரைந்த
வேதிய    ரென்றும்    மிகவே    நம்பிப்
பெருநிலக்    கிழாராம்    பெருமாள்    வழமைபோல்           65
ஒருநாள்    கண்டுரை    யாடச்    சென்றனர்
"பெருமாள் !வா"    வெனப்    பெருநிலக்    கிழாரை
ஒருமையில்    விளித்துச்    சிறுமையர்    அனந்தன்
"சேம்மோ?    ஏதும்    சேதியும்    உண்டோ?
ஆமெனில்    சொல்" என,    அரசியின்    உள்ளம்               70
அறிந்த்தும்,    சேரியை    அடைந்த்தும்,    ஆங்கே
நடந்ததும்    சொல்லி,    "நல்லோ ரே!    இவ்
வூரில்    பணத்தால்    உயர்ந்தவன்    சாதியில்
சேரியர்    தம்மினும்    சிறந்தவன்    எனினும்
இன்றென்    மகளால்    இழிவு    நேருமோ               75
என்றே    அஞ்சுவன்    ஏற்பன    சொல்க" எனக்
குடுமியைத்    தட்டிக்    குழைவாய்    முடித்துக்
கடுமையாய்க்    கவலைப்    படுவதாய்க்    காட்டிக்
கள்ளச்    சிரிப்பைக்    கடைவாய்    இடுக்கில்
மெல்ல    அடக்கி    மேனியின்    குறுக்கே               80
கிடந்த    நூலை    அனந்த    ராமன்
தொடர்ந்தே    இழுத்துச்    சொல்லத்    தொடங்கினர்;
"உன்மகள்    ராணிக்(கு)    உயர்படிப்    பெல்லாம்
என்ன    தேவை?    என்றேன்    அன்றே;
ஊர்ப்பணக்    காரன்    என்னும்    உயர்வால்               85
கேட்க    வில்லை    கேடு    வந்தது;
மாதர்    சங்கம் உன்    மகள்    தொடங்கிய
போதே    இந்தப்    பொல்லாங்    கெல்லாம்
நேரும்    என்று    நினைத்தேன்    நேர்ந்தது
யாரென்    பேச்சை    ஏற்கிறார்"    என்னலும்               90
"சாமி !    எங்கள்    சாதியைச்    சேர்ந்த
பூமி    நாதன்    பொண்கள்    இருவரை
மேல்படிப்    பிற்கு    வெளியூர்    அனுப்பினன்;
தாழ்விலை    அவர்களால்;    தகுதியோ    டுள்ளனர்
எனக்குப்    பிறந்த    இவளால்    மட்டும்               95
நினைப்பருஞ்    சிறுமை    நேர்வதற்(கு)    அவள்தன்
படிப்போ    காரணம்?    பாவியென்    னுள்ளம்
துடிக்கச்    செய்வதேன்?    சொல்லுக"    என்னலும்
"காரணம்    எதுவோ    காரியம்    முக்கியம்
தோரணை    யிலாமல்    சுப்பனோ    குப்பனோ              100
நீலி    அவளின்    கழுத்தில்    உடனே
தாலி    கட்டிடத்    தக்கதைச்    செய்வாய்;
ஜாதகப்    பொருத்தம்    தக்கதே    ஆயினும்
பாதகம்    இலையதைப்    பார்த்திட    வேண்டாம்
பாரம்    ஈஸ்வரன்    பக்கம்    வைத்துத்              105
தாரம்    ஆக்குக    தாமதம்    வேண்டாம்
வீட்டைத்    தாண்டும்    மாட்டைத்    தொழுவில்
மாட்டித்    தீனியை    வைத்தால்    தலையை
ஆட்டித்    தின்றபின்    அடங்கி    நிற்கும்உன்
வீட்டுப்    பொண்ணும்    விளைபரு    வத்தால்              110
தன்னிலை    மறந்து    சரச    மாடினள்
பொன்விலங்    கொன்றைப்    பூட்டி    வைப்பதே
சேமம்    வேறு    செய்யெண்    ணாதே
ஆமாம்    சொன்னதை    அப்படி    யேசெய்
என்றும்    உனக்கே    ஈஸ்வர    கிருபை              115
உண்டு" என    அனந்த    ராமன்    உரைத்தலும்,
"குறிச்சியில்    என்றன்    கூடப்    பிறந்த
ஒருத்தி    மகனுளன்    ஒருநான்கு    குறுக்கம்
நிலத்துக்    குரியவன்    ராணியை    நினைத்து
புலம்பித்    திரிகிறான்    போகிறேன்    இன்றே              120
அடுத்தநன்    னாளில்    அவர்தம்    திருமணம்
முடித்து    வைப்பேன்"    என்றலும்    இராமன்
"பேஷாய்ச்    சொன்னாய்    பெருமாள்    போய்வா
ஆசை    பலிக்கஎன்    ஆசிர்    வாதம்
என்றும் உண்டு"    எனப்    பெருமாள்                      125
"நன்றுசா    மி" யென    நடந்தனர்    விரைந்தே.

Friday, May 7, 2010

இயல் - 9

                                   அறிவியக்கத்தின்  ஆதரவு


ஆரியப்    படையைப்    போரினில்    கடந்து
சீரிய    செழியன்    செங்கோல்    ஓச்சிய
பண்டைப்    பெருமை    பாழ்படும்    வண்ணம்
மண்டி    வந்துநம்    மாண்பெலாம்    குலைத்த
ஆரியம்,    இன்றும்    ஆணவம்    காட்டலால்                5
சீரினை    இழப்பினும்,    சிறுமை    உறாத
மதுரை    நகரில்    வதிந்து,    தமிழரைச்
சிதறா(து)    ஒன்றாய்த்    திரட்டு    கின்ற
அறிவியக்    கத்தின்    தலைவராய்    அமைந்து,
பெரியார்    கொள்கையைப்    பெசி,    நாட்டினில்            10
புகழொடு    தோன்றி    யாவரும்    போற்றத்
திகழ்திரு    மாறனார்,    பெருமாள்    விளைத்த
சிக்கலைத்    தீர்க்கத்    தக்கதோர்    வழியைப்
பக்குவ    மாகப்    பகர்வர்    என்று
மாரி    யப்பன்    மாறனார்    வாழிடம்            15
சேர்ந்த    காலை,    திரண்ட    கருத்துடைப்
பாடலை    இசையுடன்    பாடி,    அறிவினை
நாடிவந்    தவர்க்கு    நல்கி    யிருந்தனர்.
   
           (வேறு)
"எங்கெங்குக்    காணினும்    சாதியடா -     அந்த
இருட்டினி    லேபல    மோதலடா -     மக்கள்
பொங்கி    எழுவதும்    சாதியினால் -     கெட்ட
போரிட்    டழிவதும்    சாதியினால் -    இதை
எங்கே    எவரிடம்    சொல்லியழ -    சாதி
இல்லாத    ஓரிடம்    இல்லையடா -    தம்பி
இங்குள    சாதிகள்    அழிப்பதற்கே -    ஓர்
இயக்கம்    தனியாக    வேண்டுமடா.
பிறப்பால்    வருமாம்    சாதியெலாம் -    அதில்
பெரிதும்    ஏற்றத்    தாழ்வுகளாம் -    ஒருவன்
சிறப்பாய்க்    கற்றுத்    தேர்ந்தாலும் -    பொருட்
செல்வம்    சேர்த்தே    வாழ்ந்தாலும் -    அவன்
பிறப்பால்    தாழ்ந்தவன்    என்றபடி -    இங்குப்
பேசப்    பட்டால்    தாழ்ந்தவனாம் -    இந்த
சிறப்பிலாச்    சாதி    அமைப்பழிக்கத் - தம்பி
தேவை    தனியோர்    இயக்கமடா
பார்ப்பான்    பிள்ளை    பார்ப்பானாம் -    அவன்
பண்பிலான்    ஆயினும்    உயர்ந்தவனாம் -உடல்
வேர்க்க    உழைக்கும்    ஒருவர் மகன் -    கற்று
விளங்கினும்    பிறப்பால்    தாழ்ந்தவனாம் -    என
ஆக்கிய    வன்அந்த    ஆண்டவனாம் -    அதனை
அறவல்ல    என்பவன்    நாத்திகனாம் -    இந்தப்
பாழ்த்த    விதியினை    மாய்ப்பதற்கே -    தம்பி
பாரில்ஓர்    இயக்கம்    வேண்டுமடா."
                   (வேறு)

பாடி    முடித்தவர்    பார்த்தனர்    மாரியை
கூடிய    அன்பொடும்    குளிர்ந்த    முகத்தொடும்            20
"மாரி    யப்ப    வருக"    என்றனர்.
ஊரினில்    உள்ளவ,ஃ    நலங்களை    உசாவினர்;
விழைவுடன்    அறிவினை    வேண்டி    வந்த
இளையரை    "இன்றினிச்    சென்று    வருக" என
அனுப்பிய    பின்னர்,    அகத்தினில்    கனிவுடன்            25
இனிப்புநீர்    வழங்கி    இனியன்    மாரியை
விருப்புடன்    நோக்கி,    "வேறு    செய்தி
இருப்பின்    சொல்க"    என இன்முகம்    காட்டினர்
"அய்ய!    தங்கள்    அறிவுரை    பெறவே
மெய்யாய்    வந்தேன்;    விளம்புவன்;    அன்று            30
தமிழர்    திருநாள்    நிறைந்தபின்    தாங்கள்
அமைவாய்    என்னிடம்    அரசிபால்    காதல்
உளதோ    என்றீர்    மறுத்தேன்    மறுநாள்
விளைபெருங்    காதலை    விளம்பிய    அரசியின்
உறுதியைக்    கண்டும்    உலகுஒப்    பாது            35
மறந்திடு(க)    என்று    வகைபட    உரைத்தேன்,
அரசியின்    காதலை    அறிந்(து)    அவள் தந்தை
ஒருநாள்    வந்துநீ    ஊர்விட்    டோடுக
இன்றேல்    உன்னைக்    கொன்றிடு    வேன்எனக்
குன்றிய    உளமொடு    கூறிச்    சென்றனர்            40
உண்மை    யறிந்த    உற்றார்    பலரும்
திண்ணமாய்    என்பின்    திரண்டனர்"    என்று
மாரி    யப்பன்    மாறனார்க்    கியம்பிச்
"சீரிய    செம்மால்    செய்வ(து)என்?    சொல்க" எனக்
"குழப்பம்    எதற்காம்?    கொண்ட    காதலை            45
இழக்க    அரசி    இசைவளோ?"    என்று
மாறனார்    வினவலும்,    "மாட்டாள்;    என்னிடம்
வேறுள    எவரையும்    விரும்பிடேன்    என்றும்
வாழ்ந்தால்    இருவரும்    வாழ்வோம்    என்றும்
ஆழ்ந்த    காதலை    அறிவித்    தாள்" என,            50
"இந்த    நிலையில்    எதற்கு    தயக்கம்?
அந்த    பெண்ணுளம்    அறிந்தனை    யன்றோ?
அவளையே    துணையென    ஆக்கிக்    கொள்வதில்
தவறிலை;    குழப்பம்    தவிர்க்க"    என மாறனார்
சொல்லவும்,    மாரி    தொடர்ந்து    மொழிந்தனன்            55
"நல்லவள்    அரசி;    நானும்    அவளை
விரும்புவன்;    ஆயினும்    வீணர்    எமக்குத்   
தருந்துயர்    எண்ணியே    தயங்கினேன்"    என்று
மாரி    யப்பன்    வருந்தி    உரைக்கவும்
"கூரறி    வாளனும்    கொள்கை    அரசியும்            60
ஒருவரை    யொருவர்    விரும்புதல்    ஒன்றே
பெரிய    தகுதியாம்;    பேதையர்    உரைக்கும்
தகுதியாம்    சாதி    மதமெலாம்    சாய்த்திடும்
மிகுதியே    உனக்கு    வேண்டத்    தகுவதாம்;
இருவ    ரிடத்தும்    உறுதி    யிருப்பின்            65
அறிவியக்    கத்தார்    அனைவரும்    துணையாய்   
இன்று    தீய    நெறியினர்    தம்மை
வென்று    காட்டுவோம்"    என்ற    மாறனார்,
"வருவேன்    நாவலூர்    இருநாட்    கழிந்தபின்
பெருநிலக்    கிழாரைக்    கண்டு    பேசுவேன்            70
தீய    சாதிப்    பிடிப்பினை    விடுத்துத்
தூயநல்    வாழ்க்கை    தொடங்கிட    அரசிக்(கு)
ஆதர    வாக    அமைக    என்பேன்
காதலை    மறுத்துக்    கடுஞ்சொல்    உரைத்தால்
சூளுரை    செய்து    துணையாய்    இருந்துனை            75
வாழ    வைப்பேன்    நீயும்    அரசியும்
சாதி    சமயச்    சழக்கெலாம்    தவிர்த்துத்
தீதில்    லாத    செம்மை    உலகைப்
படைத்து    புகழுடன்    வாழ்க்கை
நடத்திடக்    காண்பேன்."    என்றனர்    நயந்தே            80

Thursday, May 6, 2010

இயல் - 8 தெரிந்து தெளிதல்

சேரியின்    நடுவிலோர்    மாரி    கோயில்
மாரி    கோயிலின்    வடபால்    ஓங்கித்
தழைத்த    வேம்பு    தருநிழல்    ஆங்கண்
உழைத்துக்    களைத்தவர்    ஒன்று    கூடி
நாட்டு    நடப்பின்    நன்மையும்    தீமையும்            5
மேட்டுக்    குடியினர்    விளைக்கும்    கொடுமையும்
ஒருவருக்    கொருவர்    உரைக்கக்    கேட்டும்
ஒருவர்    முகத்தை    ஒருவர்    பார்த்தும்
இருந்த    வேளையில்    இளைஞன்    ஒருவன்
நெருங்கி    வந்து    "நிலக்கிழார்    தெருவில்ஓர்            10
தேநீர்    விடுதிஉள்    செல்ல    விரும்பினேன்
போ நீ    வெளியே    புலையா;     உள்ளே
வந்தால்    உதைப்போம்    என்றனர்;    ஊமையாய்
வந்தேன்"    என்றான்;    வயதில்    முதிர்ந்த
பெரியவர்    ஒருவர்    பேச    லுற்றார்            15
"தெரியுமா    சேதி    திங்கட்    கிழமை
பேரியூர்    செல்லப்    பேருந்(து)    ஏறி
ஓரிடத்(து)    அமர்ந்தேன்;    உயர்சா    தியர்எனை,
ஏ!ஏ!     புலையா    எழுந்துநில்    எம்முன்
ஓ!ஓ!    அமர்ந்து    வருவையோ    என்றனர்;            20
உந்து    வண்டி    உயர்சா    தியர்க்கெனத்
தந்த    வண்டியோ    சாற்றுக    என்றேன்;
இழிந்தநீ    எம்மை    எதிர்த்தோ    பேசினை
ஒழிந்துபோ    என்றெனை    ஊர்ப்புறத்(து)    இறக்கினர்
ஏலா    மையுடன்    எஞ்சிய    தொலைவைக்            25
காலால்    நடந்தே    கடந்தேன்"    என்றார்
பெரியவர்    கூற்றைக்    கேட்டதும்    இளையர்
எரியெனக்    கனன்றனர்;    இன்னொரு    பெரியவர்
"கேண்மின்    இந்தக்    கேட்டினை    ஒருநாள்
ஆண்துணை    இன்றிதம்    அய்யணன்    மகள்தான்            30
கரும்பு    வயலின்    வரம்பினில்    புல்லொடு
திரும்பி    வருகையில்    பெருங்குடிப்    பிறந்தவோர்
வெறும்பயல்    அவளை    விரட்டிச்    சென்று
கரும்புக்    காட்டினுள்    கைப்பிடித்(து)    இழுத்தஇக்
கொடுமை    நிலைப்பதோ    கூறுவீர்"    என்றனர்            35
"கொடுமையே;    அதுபோல்    நம்குடிப்    பிறந்த
மாரி,    நிலக்கிழார்    மகளை    வளைக்கப்
போரில்    இறங்குதல்    பொருத்தமோ    சொல்வீர்"
என்றொரு    பெரியவர்    எதிர்வினாத்    தொடுக்க
நன்றே    எனவும்    நாசமே    எனவும்            40
சூறு    பட்ட(து)    அக்கூட்டம்;    இதனால்
வேறு    பட்டனர்    சேரியர்    என்னும்
கேட்டினை    அஞ்சிய    கிழவர்    ஒருவர்
கூட்டத்(து)    இடைவளர்    குழப்பம்    அடக்கி
மாரியை    அழைத்து    வருகவென    ஏவினர்;            45
மாரியும்    தந்தையும்    வந்தனர்;    மாரியைப்
பெரியவர்    வினவினர்;    "பெருநிலக்    கிழார்தம்
வருகையின்    நோக்கமும்    வந்துனைச்    சினந்ததும்
ஏன்என    எமக்(கு)உரை"    என்றலும்    மாரி
"யான்உரைக்    கின்றேன்    யாவும்    உண்மை            50
நிலக்கிழார்    மகளும்    நிறையக்    கற்றவள்
குலத்தின்    செருக்கோ    குன்றாச்    செல்வச்
செழிப்பின்    செருக்கோ    சிறிதும்    இலாதாள்
உழைப்பின்    பெருமை    உணர்ந்தவள்    ஊரில்ஓர்
மன்றம்    கண்டு    வளர்ப்பவள்    என்பதை            55
நன்றே    அறிவீர்    நங்கை    அவள்எனை
மணப்பேன்    என்றனள்    மறுத்தேன்    உலகம்
இணக்கம்    தராதென    இயம்பினேன்    அவளோ
துணையெனில்    நீயிரே    துணையாம்    வேறு
நினைவிலை    என்றனள்;    நிலக்கிழா    ரிடமும்             60
உறுதியாய்    உரைத்தனள்    போலும்;    அதனால்
பெருநிலக்    கிழார்எனைப்    பேசினர்;    ஊரின்
நீங்குக    என்றும்    நீங்கா    விடின்உயிர்
வாங்குவேன்    என்றும்    வஞ்சினம்    கூறினர்;
என்பால்    பிழையோ?    இயம்புக    பெரியீர்!            65
அன்பால்    என்னை    அடைய    விரும்பும்
பெண்பால்    பிழையோ?    பெருநிலக்    கிழாரின்
பண்பில்    பிழையோ?    பகர்ந்திடு    வீர்எனச்
சொன்ன    மாரியின்    தூய்மையை    உணர்ந்தே,
"உன்னையும்    அந்தப்    பெண்ணையும்    எங்கட்(கு)            70
என்ன    நேரினும்    இணைத்து    வைப்போம்
சொன்ன    உறுதியில்    சோர்ந்திடோம்    தூயவர்
உன்னை    ஊர்விட்(டு)    ஓடச்    சொன்னவர்
கண்முன்    இருவரும்    கணவன்    மனைவியாய்
வாழச்    செய்து    மற்றவர்    செருக்கெலாம்            75
வீழச்    செய்வோம்"    என்றனர்    வீறுடன்;
இளையரும்    முதியரும்    எழுச்சிப்    பெற்றுக்
கலைந்து    சென்றனர்;    ஆயிரம்    கண்ணுடை
மாரி    யம்மை    வறிதே
சேரிக்    கோயிலுள்    சிறையிருந்    தனளே.            80
                       

Wednesday, May 5, 2010

இயல் - 7 சேரியின் சீற்றம்

தொல்பழங்    காலத்    தூய்தமி    ழகத்தில்
இல்லை    சாதியும்    மதங்களும்    என்பர்
இயல்நெறி    வழாத    இன்றமிழ்    நாட்டில்
அயலா    ருடனே    அஙையும்    நுழைந்தன
மறமும்    காதலும்    வாழ்வெனச்    சொல்லும்         5
அறநெறி    கண்ட    அருந்தமிழ்    மக்கள்
வந்தஆ    ரியரால்    மயக்கப்    பெற்றனர்
செந்தமிழ்    நெறியினை    விளம்பிய    நெறியின்
தீதெலாம்    ஏற்றுச்    சிறுமை    உற்றனர்        10
சிறுமையும்    தெய்வச்    செயலென    அறிவின்
வறுமையால்    நம்பினர்    மாற்றார்    மகிழ்ந்தே
எதுசொன்    னாலும்    ஏற்பர்    தமிழர்
இதுமிக    நன்றென    எண்ணி,    உழைப்பால்
மிக்கவர்    தாழ்ந்தோர்;    மேலோர்    பிறர்என        15
மக்களை    முரண்பட    வரிசைப்    படுத்தியும்
தாழ்நிலை    முன்னை    ஊழ்வினைப்    பயனால்
வாழ்வினில்    அமையும்    மறுமையில்    மேனிலை
விழைபவர்    இம்மையில்    வினைப்பயன்    நுகர்ந்தே
உழல்வது    விதியென    உரைத்தும்    உழைப்போர்        20
தொட்டால்    தீட்டுத்    தொற்றும்    பிறர்க்கெனும்
ஒட்டாக்    கொள்கையை,    ஊறுசெய்    நெறியைத்
தீண்டா    மையெனும்    தீமையை    விதைத்தும்
ஆண்ட    தமிழரை    அடிமை    யாக்கினர்
பள்ளர்    எனவும்    பறையர்    எனவும்        25
கள்ளராம்    ஆரியர்    காட்டிய    திறத்தால்
ஊரின்    புறத்தே    ஒதுக்கப்    பட்டுச்
சீரினை    இழந்தனர்;    நாவலூர்க்    கண்ணும்
ஊரின்    கிழக்கே    உழைப்பவர்    வாழும்
சேரி    யிருந்த்தச்    சேரியில்    நுழைந்து        30
பெருநிலக்    கிழாராம்    பெருமாள்,    மாரியின்
சிறுமனை    யிருந்த    மறுகினில்    நின்று
மாரியின்    தந்தையை    வருகெனக்    கூஉய்ச்
சீறிடும்    அரவெனச்    சினந்து    பேசினர்
"ஏடா    புலையா!    என்னை     எதிர்த்திடக்        35
கூடுமோ    உன்மகன்?    கூறடா    அவனைக்
கண்டால்    வெட்டித்    துண்ட    மாக்குவேன்
கொண்டுவா    அந்தக்    கொடியனை"    என்னலும்
"அய்ய!    என்மகன்    அடாத    செய்ததாய்ப்
பொய்சொல    வேண்டா;    பொறுமையாய்    என்னிடம்        40
உண்மையில்    நடந்ததை    உரைக்க"    என"நாயே!
என்னையே    எதிர்க்கும்    எண்ணமோ?    உன்மகன்
வந்தால்    என்னிடம்    வரச்சொல்    தண்டனை
தந்தால்    திருந்தவன்    தறுதலை"    என்றே
கடுமொழி    கூறிய    கொடுமையர்    திகைத்திடத்        45
திடுமென    வந்து    சேர்ந்த    மாரியன்
"பெரியீர்!    இங்குப்    பேசிய    தெல்லாம்
அறியச்    சொல்வீர்    அறிவேன்    யான்" என,
"வாடா    உன்தலை    வாங்கவே    வந்தேன்
ஏடா!    மூடா!    என்மகள்    இராணியை        50
எனக்கெதி    ராகத்    திருப்பிட    எண்ணமோ?
உனக்குன்    உயிர்மேல்    ஆசை    யுளதேல்
ஊரின்    நீங்கி    ஓடிப்    போய்விடு
சேரிப்    பயலே    திமிரா    உனக்கு?" எனப்
"பெருநிலக்    கிழாரே!    பொறுமையாய்    உழைப்பைத்        55
தருகிற    நாங்கள்    தன்மா    னத்துடன்
சேர்ந்து    வாழிடம்    சேரிதான்    மக்கள்
சேர்ந்துவா    ழிடமெலாம்    சேரிதாம்    நும்போல்
நிலக்கிழார்    வாழிடம்    நிலக்கிழார்ச்    சேரியாம்
புலத்துறை    யினர்தெரு    புலவர்    சேரியாம்        60
பார்ப்பனர்    வாழிடம்    பார்ப்பனச்    சேரியே
ஏற்பர்    அறிவுளோர்    எனவே    எனைநீர்
சேரியன்    என்றதால்    சினம்வர    விலை" என
மாரியன்    கூறி     மறுத்தபின்    "எனையிவ்
வூரின்    நீங்கி    ஓடிப    போவெனக்        65
கூறிய     தென்ன?    கூறுக"    என்னலும்
"ஏன்என    விளக்கம்    என்னையா    கேட்கிறாய்?
ஆணை    யிடுகிறேன்    அடிமையே!    உனக்கு" என,
"உடலை    வருத்தி    உழைப்பினை    நல்குதல்
கடனாம்    என்று    கருதி    நாங்கள்        70
காட்டில்    கழனியில்    கால்வைத்    திடாமல்
வீட்டில்    இருந்தால்    விளையுமோ?    எங்கள்
உழைப்பில்    லாமலோ    உயர்ந்தீர்?    நாளும்
உழைப்பவர்    நாங்கள்!    உழைப்பைச்    சுரண்டி
ஏற்றம்    பெறுபவர்    நீங்கள்!    இதற்குநும்        75
மாற்றம்    என்ன?    மறுத்திடு    வீரோ?
ஆண்டான்    அடிமை    என்னும்    நிலைமை
மாண்டு    மறைந்ததை    மறந்தீர்    போலும்
என்னைக்    குறித்து    நும்மகள்    ஏதும்
சொன்னதும்    உண்டோ?    சொன்னதை    மறைத்துநீர்        80
இங்கு    வந்தே    என்னையும்    பிறரையும்
பொங்கு    சினத்துடன்    புன்மை    பேசுதல்
நன்றோ?    எண்ணுக;    நானுமக்    கெதிராய்
என்றும்    நில்லேன்    என்னொடும்    நும்மகள்
பேசிப்    பழகுதல்    மாசெனக்    கருதினால்        85
கூசுதல்    இன்றிக்    கூறுக    மகளிடம்
பின்னரும்    நும்மகள்    பிழையிலை    என்றே
என்னை    நாடினால்    என்பிழை    யின்று" எனக்
கூறலும்    மாரியைக்    குறித்து    நிலக்கிழார்
கூறினர்    வஞ்சினம்    கொடுஞ்சொல்    வீசினர்        90
"எனவலி    யறியாய்    எதிர்த்து    நிற்கிறாய்
மின்னலைத்    தொடர்ந்து    விண்ணில்    முழங்கும்
இடியெனத்    தாக்கி    இல்லா    தொழிப்பேன்
அடிமை    நாயே    அறிவாய்"    என்று
தன்னிலை    இழந்து    தருக்குடன்    பெருமாள்        95
சொன்னது    கேட்டுத்    தூயவன்    மாரி
பொறுமை    காட்டியும்    பொறாஅ    ராகி
வறுமைய    ரேனும்    மானம்    உடையராய்ச்
சுற்றிலும்    நின்ற    உற்றார்    உறவினர்
முற்றுகை    யிட்டெதிர்    முழங்கி    நிலக்கிழார்ப்       100
பற்றிய    வுடனே    பாய்ந்து    விலக்கிக்
குற்றம்    நிகழ்திடக்    கூடா    தென்று
சூழ்ந்து    பற்றிய    சுற்றத்    தாரைத்
தாழ்ந்து    வேண்டித்    தவிப்புடன்    நின்ற
செருக்கினர்    தம்மைச்    செல்கென           105
விடுத்தனன்    நிலக்கிழார்    விரைந்தனர்    வெறுத்தே