Friday, May 7, 2010

இயல் - 9

                                   அறிவியக்கத்தின்  ஆதரவு


ஆரியப்    படையைப்    போரினில்    கடந்து
சீரிய    செழியன்    செங்கோல்    ஓச்சிய
பண்டைப்    பெருமை    பாழ்படும்    வண்ணம்
மண்டி    வந்துநம்    மாண்பெலாம்    குலைத்த
ஆரியம்,    இன்றும்    ஆணவம்    காட்டலால்                5
சீரினை    இழப்பினும்,    சிறுமை    உறாத
மதுரை    நகரில்    வதிந்து,    தமிழரைச்
சிதறா(து)    ஒன்றாய்த்    திரட்டு    கின்ற
அறிவியக்    கத்தின்    தலைவராய்    அமைந்து,
பெரியார்    கொள்கையைப்    பெசி,    நாட்டினில்            10
புகழொடு    தோன்றி    யாவரும்    போற்றத்
திகழ்திரு    மாறனார்,    பெருமாள்    விளைத்த
சிக்கலைத்    தீர்க்கத்    தக்கதோர்    வழியைப்
பக்குவ    மாகப்    பகர்வர்    என்று
மாரி    யப்பன்    மாறனார்    வாழிடம்            15
சேர்ந்த    காலை,    திரண்ட    கருத்துடைப்
பாடலை    இசையுடன்    பாடி,    அறிவினை
நாடிவந்    தவர்க்கு    நல்கி    யிருந்தனர்.
   
           (வேறு)
"எங்கெங்குக்    காணினும்    சாதியடா -     அந்த
இருட்டினி    லேபல    மோதலடா -     மக்கள்
பொங்கி    எழுவதும்    சாதியினால் -     கெட்ட
போரிட்    டழிவதும்    சாதியினால் -    இதை
எங்கே    எவரிடம்    சொல்லியழ -    சாதி
இல்லாத    ஓரிடம்    இல்லையடா -    தம்பி
இங்குள    சாதிகள்    அழிப்பதற்கே -    ஓர்
இயக்கம்    தனியாக    வேண்டுமடா.
பிறப்பால்    வருமாம்    சாதியெலாம் -    அதில்
பெரிதும்    ஏற்றத்    தாழ்வுகளாம் -    ஒருவன்
சிறப்பாய்க்    கற்றுத்    தேர்ந்தாலும் -    பொருட்
செல்வம்    சேர்த்தே    வாழ்ந்தாலும் -    அவன்
பிறப்பால்    தாழ்ந்தவன்    என்றபடி -    இங்குப்
பேசப்    பட்டால்    தாழ்ந்தவனாம் -    இந்த
சிறப்பிலாச்    சாதி    அமைப்பழிக்கத் - தம்பி
தேவை    தனியோர்    இயக்கமடா
பார்ப்பான்    பிள்ளை    பார்ப்பானாம் -    அவன்
பண்பிலான்    ஆயினும்    உயர்ந்தவனாம் -உடல்
வேர்க்க    உழைக்கும்    ஒருவர் மகன் -    கற்று
விளங்கினும்    பிறப்பால்    தாழ்ந்தவனாம் -    என
ஆக்கிய    வன்அந்த    ஆண்டவனாம் -    அதனை
அறவல்ல    என்பவன்    நாத்திகனாம் -    இந்தப்
பாழ்த்த    விதியினை    மாய்ப்பதற்கே -    தம்பி
பாரில்ஓர்    இயக்கம்    வேண்டுமடா."
                   (வேறு)

பாடி    முடித்தவர்    பார்த்தனர்    மாரியை
கூடிய    அன்பொடும்    குளிர்ந்த    முகத்தொடும்            20
"மாரி    யப்ப    வருக"    என்றனர்.
ஊரினில்    உள்ளவ,ஃ    நலங்களை    உசாவினர்;
விழைவுடன்    அறிவினை    வேண்டி    வந்த
இளையரை    "இன்றினிச்    சென்று    வருக" என
அனுப்பிய    பின்னர்,    அகத்தினில்    கனிவுடன்            25
இனிப்புநீர்    வழங்கி    இனியன்    மாரியை
விருப்புடன்    நோக்கி,    "வேறு    செய்தி
இருப்பின்    சொல்க"    என இன்முகம்    காட்டினர்
"அய்ய!    தங்கள்    அறிவுரை    பெறவே
மெய்யாய்    வந்தேன்;    விளம்புவன்;    அன்று            30
தமிழர்    திருநாள்    நிறைந்தபின்    தாங்கள்
அமைவாய்    என்னிடம்    அரசிபால்    காதல்
உளதோ    என்றீர்    மறுத்தேன்    மறுநாள்
விளைபெருங்    காதலை    விளம்பிய    அரசியின்
உறுதியைக்    கண்டும்    உலகுஒப்    பாது            35
மறந்திடு(க)    என்று    வகைபட    உரைத்தேன்,
அரசியின்    காதலை    அறிந்(து)    அவள் தந்தை
ஒருநாள்    வந்துநீ    ஊர்விட்    டோடுக
இன்றேல்    உன்னைக்    கொன்றிடு    வேன்எனக்
குன்றிய    உளமொடு    கூறிச்    சென்றனர்            40
உண்மை    யறிந்த    உற்றார்    பலரும்
திண்ணமாய்    என்பின்    திரண்டனர்"    என்று
மாரி    யப்பன்    மாறனார்க்    கியம்பிச்
"சீரிய    செம்மால்    செய்வ(து)என்?    சொல்க" எனக்
"குழப்பம்    எதற்காம்?    கொண்ட    காதலை            45
இழக்க    அரசி    இசைவளோ?"    என்று
மாறனார்    வினவலும்,    "மாட்டாள்;    என்னிடம்
வேறுள    எவரையும்    விரும்பிடேன்    என்றும்
வாழ்ந்தால்    இருவரும்    வாழ்வோம்    என்றும்
ஆழ்ந்த    காதலை    அறிவித்    தாள்" என,            50
"இந்த    நிலையில்    எதற்கு    தயக்கம்?
அந்த    பெண்ணுளம்    அறிந்தனை    யன்றோ?
அவளையே    துணையென    ஆக்கிக்    கொள்வதில்
தவறிலை;    குழப்பம்    தவிர்க்க"    என மாறனார்
சொல்லவும்,    மாரி    தொடர்ந்து    மொழிந்தனன்            55
"நல்லவள்    அரசி;    நானும்    அவளை
விரும்புவன்;    ஆயினும்    வீணர்    எமக்குத்   
தருந்துயர்    எண்ணியே    தயங்கினேன்"    என்று
மாரி    யப்பன்    வருந்தி    உரைக்கவும்
"கூரறி    வாளனும்    கொள்கை    அரசியும்            60
ஒருவரை    யொருவர்    விரும்புதல்    ஒன்றே
பெரிய    தகுதியாம்;    பேதையர்    உரைக்கும்
தகுதியாம்    சாதி    மதமெலாம்    சாய்த்திடும்
மிகுதியே    உனக்கு    வேண்டத்    தகுவதாம்;
இருவ    ரிடத்தும்    உறுதி    யிருப்பின்            65
அறிவியக்    கத்தார்    அனைவரும்    துணையாய்   
இன்று    தீய    நெறியினர்    தம்மை
வென்று    காட்டுவோம்"    என்ற    மாறனார்,
"வருவேன்    நாவலூர்    இருநாட்    கழிந்தபின்
பெருநிலக்    கிழாரைக்    கண்டு    பேசுவேன்            70
தீய    சாதிப்    பிடிப்பினை    விடுத்துத்
தூயநல்    வாழ்க்கை    தொடங்கிட    அரசிக்(கு)
ஆதர    வாக    அமைக    என்பேன்
காதலை    மறுத்துக்    கடுஞ்சொல்    உரைத்தால்
சூளுரை    செய்து    துணையாய்    இருந்துனை            75
வாழ    வைப்பேன்    நீயும்    அரசியும்
சாதி    சமயச்    சழக்கெலாம்    தவிர்த்துத்
தீதில்    லாத    செம்மை    உலகைப்
படைத்து    புகழுடன்    வாழ்க்கை
நடத்திடக்    காண்பேன்."    என்றனர்    நயந்தே            80

No comments:

Post a Comment