Wednesday, May 5, 2010

இயல் - 7 சேரியின் சீற்றம்

தொல்பழங்    காலத்    தூய்தமி    ழகத்தில்
இல்லை    சாதியும்    மதங்களும்    என்பர்
இயல்நெறி    வழாத    இன்றமிழ்    நாட்டில்
அயலா    ருடனே    அஙையும்    நுழைந்தன
மறமும்    காதலும்    வாழ்வெனச்    சொல்லும்         5
அறநெறி    கண்ட    அருந்தமிழ்    மக்கள்
வந்தஆ    ரியரால்    மயக்கப்    பெற்றனர்
செந்தமிழ்    நெறியினை    விளம்பிய    நெறியின்
தீதெலாம்    ஏற்றுச்    சிறுமை    உற்றனர்        10
சிறுமையும்    தெய்வச்    செயலென    அறிவின்
வறுமையால்    நம்பினர்    மாற்றார்    மகிழ்ந்தே
எதுசொன்    னாலும்    ஏற்பர்    தமிழர்
இதுமிக    நன்றென    எண்ணி,    உழைப்பால்
மிக்கவர்    தாழ்ந்தோர்;    மேலோர்    பிறர்என        15
மக்களை    முரண்பட    வரிசைப்    படுத்தியும்
தாழ்நிலை    முன்னை    ஊழ்வினைப்    பயனால்
வாழ்வினில்    அமையும்    மறுமையில்    மேனிலை
விழைபவர்    இம்மையில்    வினைப்பயன்    நுகர்ந்தே
உழல்வது    விதியென    உரைத்தும்    உழைப்போர்        20
தொட்டால்    தீட்டுத்    தொற்றும்    பிறர்க்கெனும்
ஒட்டாக்    கொள்கையை,    ஊறுசெய்    நெறியைத்
தீண்டா    மையெனும்    தீமையை    விதைத்தும்
ஆண்ட    தமிழரை    அடிமை    யாக்கினர்
பள்ளர்    எனவும்    பறையர்    எனவும்        25
கள்ளராம்    ஆரியர்    காட்டிய    திறத்தால்
ஊரின்    புறத்தே    ஒதுக்கப்    பட்டுச்
சீரினை    இழந்தனர்;    நாவலூர்க்    கண்ணும்
ஊரின்    கிழக்கே    உழைப்பவர்    வாழும்
சேரி    யிருந்த்தச்    சேரியில்    நுழைந்து        30
பெருநிலக்    கிழாராம்    பெருமாள்,    மாரியின்
சிறுமனை    யிருந்த    மறுகினில்    நின்று
மாரியின்    தந்தையை    வருகெனக்    கூஉய்ச்
சீறிடும்    அரவெனச்    சினந்து    பேசினர்
"ஏடா    புலையா!    என்னை     எதிர்த்திடக்        35
கூடுமோ    உன்மகன்?    கூறடா    அவனைக்
கண்டால்    வெட்டித்    துண்ட    மாக்குவேன்
கொண்டுவா    அந்தக்    கொடியனை"    என்னலும்
"அய்ய!    என்மகன்    அடாத    செய்ததாய்ப்
பொய்சொல    வேண்டா;    பொறுமையாய்    என்னிடம்        40
உண்மையில்    நடந்ததை    உரைக்க"    என"நாயே!
என்னையே    எதிர்க்கும்    எண்ணமோ?    உன்மகன்
வந்தால்    என்னிடம்    வரச்சொல்    தண்டனை
தந்தால்    திருந்தவன்    தறுதலை"    என்றே
கடுமொழி    கூறிய    கொடுமையர்    திகைத்திடத்        45
திடுமென    வந்து    சேர்ந்த    மாரியன்
"பெரியீர்!    இங்குப்    பேசிய    தெல்லாம்
அறியச்    சொல்வீர்    அறிவேன்    யான்" என,
"வாடா    உன்தலை    வாங்கவே    வந்தேன்
ஏடா!    மூடா!    என்மகள்    இராணியை        50
எனக்கெதி    ராகத்    திருப்பிட    எண்ணமோ?
உனக்குன்    உயிர்மேல்    ஆசை    யுளதேல்
ஊரின்    நீங்கி    ஓடிப்    போய்விடு
சேரிப்    பயலே    திமிரா    உனக்கு?" எனப்
"பெருநிலக்    கிழாரே!    பொறுமையாய்    உழைப்பைத்        55
தருகிற    நாங்கள்    தன்மா    னத்துடன்
சேர்ந்து    வாழிடம்    சேரிதான்    மக்கள்
சேர்ந்துவா    ழிடமெலாம்    சேரிதாம்    நும்போல்
நிலக்கிழார்    வாழிடம்    நிலக்கிழார்ச்    சேரியாம்
புலத்துறை    யினர்தெரு    புலவர்    சேரியாம்        60
பார்ப்பனர்    வாழிடம்    பார்ப்பனச்    சேரியே
ஏற்பர்    அறிவுளோர்    எனவே    எனைநீர்
சேரியன்    என்றதால்    சினம்வர    விலை" என
மாரியன்    கூறி     மறுத்தபின்    "எனையிவ்
வூரின்    நீங்கி    ஓடிப    போவெனக்        65
கூறிய     தென்ன?    கூறுக"    என்னலும்
"ஏன்என    விளக்கம்    என்னையா    கேட்கிறாய்?
ஆணை    யிடுகிறேன்    அடிமையே!    உனக்கு" என,
"உடலை    வருத்தி    உழைப்பினை    நல்குதல்
கடனாம்    என்று    கருதி    நாங்கள்        70
காட்டில்    கழனியில்    கால்வைத்    திடாமல்
வீட்டில்    இருந்தால்    விளையுமோ?    எங்கள்
உழைப்பில்    லாமலோ    உயர்ந்தீர்?    நாளும்
உழைப்பவர்    நாங்கள்!    உழைப்பைச்    சுரண்டி
ஏற்றம்    பெறுபவர்    நீங்கள்!    இதற்குநும்        75
மாற்றம்    என்ன?    மறுத்திடு    வீரோ?
ஆண்டான்    அடிமை    என்னும்    நிலைமை
மாண்டு    மறைந்ததை    மறந்தீர்    போலும்
என்னைக்    குறித்து    நும்மகள்    ஏதும்
சொன்னதும்    உண்டோ?    சொன்னதை    மறைத்துநீர்        80
இங்கு    வந்தே    என்னையும்    பிறரையும்
பொங்கு    சினத்துடன்    புன்மை    பேசுதல்
நன்றோ?    எண்ணுக;    நானுமக்    கெதிராய்
என்றும்    நில்லேன்    என்னொடும்    நும்மகள்
பேசிப்    பழகுதல்    மாசெனக்    கருதினால்        85
கூசுதல்    இன்றிக்    கூறுக    மகளிடம்
பின்னரும்    நும்மகள்    பிழையிலை    என்றே
என்னை    நாடினால்    என்பிழை    யின்று" எனக்
கூறலும்    மாரியைக்    குறித்து    நிலக்கிழார்
கூறினர்    வஞ்சினம்    கொடுஞ்சொல்    வீசினர்        90
"எனவலி    யறியாய்    எதிர்த்து    நிற்கிறாய்
மின்னலைத்    தொடர்ந்து    விண்ணில்    முழங்கும்
இடியெனத்    தாக்கி    இல்லா    தொழிப்பேன்
அடிமை    நாயே    அறிவாய்"    என்று
தன்னிலை    இழந்து    தருக்குடன்    பெருமாள்        95
சொன்னது    கேட்டுத்    தூயவன்    மாரி
பொறுமை    காட்டியும்    பொறாஅ    ராகி
வறுமைய    ரேனும்    மானம்    உடையராய்ச்
சுற்றிலும்    நின்ற    உற்றார்    உறவினர்
முற்றுகை    யிட்டெதிர்    முழங்கி    நிலக்கிழார்ப்       100
பற்றிய    வுடனே    பாய்ந்து    விலக்கிக்
குற்றம்    நிகழ்திடக்    கூடா    தென்று
சூழ்ந்து    பற்றிய    சுற்றத்    தாரைத்
தாழ்ந்து    வேண்டித்    தவிப்புடன்    நின்ற
செருக்கினர்    தம்மைச்    செல்கென           105
விடுத்தனன்    நிலக்கிழார்    விரைந்தனர்    வெறுத்தே

No comments:

Post a Comment