Tuesday, May 11, 2010

இயல் - 10

                         தீநெறி காட்டிய சிறுமை


போற்றத்    தக்க    நாக    ரிகங்கள்
ஆற்றங்    கரைகளில்    அரும்பின    என்பர்
பூவிரி    எழிலுடன்    பொங்கிப்    பரந்த
காவிரி    யாற்றின்    கரையிலும்    மேலைக்
கல்லிற்    பிறந்து    கடலிற்    கல்ந்திடச்               5
செல்லா    வையை    சேர்ந்த    கரையிலும்
பொதிகையிற்    பிறந்து    பொலிவுடன்    ஓடி
மதியொளி    முத்து    மணக்கும்    கடலில்
போஒய்ப்    புணரும்    பொருநை    என்னும்
தாவில்    தாமிர    பரணிக்    கரையிலும்          10
தமிழ்நா    கரிகம்    தழைத்ததாம்;    ஆங்கே
உமிழ்நா    கரிகம்    உடையராய்    வந்தோர்
வேத    மென்றும்    சாத்திர    மென்றும்
நீதி    யென்றும்    நியமம்    என்றும்
பலபட    மொழிந்த    பசப்புரை    கேட்டு              15
நலமுளோர்    அவரென    நவைத்தமிழ்    வேந்தர்
விழுமிய    பரிசுகள்    விரும்பி    வழங்கினர்;
கழனிகள்    பெற்றும்    ஆற்றங்    கரைகளில்
பிரம    தேயமாய்ப்    பெற்ற    ஊர்களின்
உரிமை    பெற்றும்    ஊறுசெய்    ஆரியர்              20
வாழத்    தொடங்கினர்;    வாடைத்    தொல்லை
சூழத்    தொடங்கித்    தொடர்ந்து    வந்தது;
பிராமணர்    சூத்திரர்    என்னும்    பிரிவுகள்
வராத     நாட்டில்    வந்து    நிலைத்தன;
பூரியர்    பிராமண    ராகத்    தங்களைக்               25
கூறிக்    கொண்டனர்;    குலைந்த    தமிழரைச்
சூத்திரர்    என்றும்    தொடத்தகார்    என்றும்
ஆக்கினர்;    தமிழரும்    அறியா(து)    ஏற்றனர்;
வீழ்ந்த    தமிழர்    விழிப்புறா    வண்ணம்
பாழ்மதக்    கொள்கையைப்    பரப்பி    வந்தனர்;               30
அறிவை    இழந்து    மானமும்    இழந்து
சிறுமை    யுற்ற    தமிழர்    தொடர்ந்து
பன்னூ    றாண்டுகள்    பாழ்பட்    டிருந்த
பின்னர்    இங்குப்    பெரியார்    தோன்றி
அகவிருள்    நீங்கிட    அறிவொளி    பாய்ச்சினர்;           35
இகழ்நிலை    நீங்கிட,    ஈடிலாப்    புதுநெறி
வகுத்துத்    தமிழர்க்கு    மானமும்    அறிவும்
புகட்டிய    தாலொரு    புரட்சி    எழுந்தது.
புரட்சியின்    பொருளும்    போக்கும்    அறியா(து)
இருட்டில்    வாழ்சில    முரட்டுத்    தமிழர்               40
பெரியார்    நெறியைப்    பிழைநெறி    என்றனர்;
பெரியோர்    பிராமணர்;    பிரம்மன்    படைப்பில்
உயர்ந்தோர்;    கடவுட்(கு)    ஒப்பாம்    அவர் என
மயங்கி    யிருந்தனர்;    மாற்றார்    மகிழ்ந்தனர்.
தமிழகம்    இத்தகு    தடுமாற்    றத்துடன்               45
அமைதி    இழந்தே    அலமந்த    காலை,
நாவ    லூராம்    நன்செய்    யூரை
மேவி    மாலைபோல்    விளங்கிய    நாவல்
ஆற்றங்    கரையின்    அருகில்    நீண்டு
மேற்குக்    கிழக்காய்    விளங்கிய    வீதியில்               50
வந்த    ஆரியர்    வழியினர்    யாமென
எந்தக்    காலமும்    எண்ணியும்,    இறந்த
வடமொழி    வேதமே    ஓதியும்    கடமையாய்க்
கடமுட    மந்திரம்    காலையும்    மாலையும்
பொருளில்    லாமற்    புலம்பியும்    நாளும்               55
மருள்சேர்    நெறிகளை    மற்றவர்க்    குரைத்தும்
சிலரா    யிருந்து    பலராந்    தமிழர்
உலைதற்    கேற்ப    ஊமை    நாடகம்
ஆடுநர்    தம்முள்    அனந்தரா    மன்எனும்
கேடுசெய்    குநராம்    கீழவர்    தம்மை               60
ஞாலத்    திற்கே    நல்வழி    காட்டும்
மேலவர்    என்றும்    விதியால்    உயர்ந்த
சாதிய    ரென்றும்    தகுதி    நிரைந்த
வேதிய    ரென்றும்    மிகவே    நம்பிப்
பெருநிலக்    கிழாராம்    பெருமாள்    வழமைபோல்           65
ஒருநாள்    கண்டுரை    யாடச்    சென்றனர்
"பெருமாள் !வா"    வெனப்    பெருநிலக்    கிழாரை
ஒருமையில்    விளித்துச்    சிறுமையர்    அனந்தன்
"சேம்மோ?    ஏதும்    சேதியும்    உண்டோ?
ஆமெனில்    சொல்" என,    அரசியின்    உள்ளம்               70
அறிந்த்தும்,    சேரியை    அடைந்த்தும்,    ஆங்கே
நடந்ததும்    சொல்லி,    "நல்லோ ரே!    இவ்
வூரில்    பணத்தால்    உயர்ந்தவன்    சாதியில்
சேரியர்    தம்மினும்    சிறந்தவன்    எனினும்
இன்றென்    மகளால்    இழிவு    நேருமோ               75
என்றே    அஞ்சுவன்    ஏற்பன    சொல்க" எனக்
குடுமியைத்    தட்டிக்    குழைவாய்    முடித்துக்
கடுமையாய்க்    கவலைப்    படுவதாய்க்    காட்டிக்
கள்ளச்    சிரிப்பைக்    கடைவாய்    இடுக்கில்
மெல்ல    அடக்கி    மேனியின்    குறுக்கே               80
கிடந்த    நூலை    அனந்த    ராமன்
தொடர்ந்தே    இழுத்துச்    சொல்லத்    தொடங்கினர்;
"உன்மகள்    ராணிக்(கு)    உயர்படிப்    பெல்லாம்
என்ன    தேவை?    என்றேன்    அன்றே;
ஊர்ப்பணக்    காரன்    என்னும்    உயர்வால்               85
கேட்க    வில்லை    கேடு    வந்தது;
மாதர்    சங்கம் உன்    மகள்    தொடங்கிய
போதே    இந்தப்    பொல்லாங்    கெல்லாம்
நேரும்    என்று    நினைத்தேன்    நேர்ந்தது
யாரென்    பேச்சை    ஏற்கிறார்"    என்னலும்               90
"சாமி !    எங்கள்    சாதியைச்    சேர்ந்த
பூமி    நாதன்    பொண்கள்    இருவரை
மேல்படிப்    பிற்கு    வெளியூர்    அனுப்பினன்;
தாழ்விலை    அவர்களால்;    தகுதியோ    டுள்ளனர்
எனக்குப்    பிறந்த    இவளால்    மட்டும்               95
நினைப்பருஞ்    சிறுமை    நேர்வதற்(கு)    அவள்தன்
படிப்போ    காரணம்?    பாவியென்    னுள்ளம்
துடிக்கச்    செய்வதேன்?    சொல்லுக"    என்னலும்
"காரணம்    எதுவோ    காரியம்    முக்கியம்
தோரணை    யிலாமல்    சுப்பனோ    குப்பனோ              100
நீலி    அவளின்    கழுத்தில்    உடனே
தாலி    கட்டிடத்    தக்கதைச்    செய்வாய்;
ஜாதகப்    பொருத்தம்    தக்கதே    ஆயினும்
பாதகம்    இலையதைப்    பார்த்திட    வேண்டாம்
பாரம்    ஈஸ்வரன்    பக்கம்    வைத்துத்              105
தாரம்    ஆக்குக    தாமதம்    வேண்டாம்
வீட்டைத்    தாண்டும்    மாட்டைத்    தொழுவில்
மாட்டித்    தீனியை    வைத்தால்    தலையை
ஆட்டித்    தின்றபின்    அடங்கி    நிற்கும்உன்
வீட்டுப்    பொண்ணும்    விளைபரு    வத்தால்              110
தன்னிலை    மறந்து    சரச    மாடினள்
பொன்விலங்    கொன்றைப்    பூட்டி    வைப்பதே
சேமம்    வேறு    செய்யெண்    ணாதே
ஆமாம்    சொன்னதை    அப்படி    யேசெய்
என்றும்    உனக்கே    ஈஸ்வர    கிருபை              115
உண்டு" என    அனந்த    ராமன்    உரைத்தலும்,
"குறிச்சியில்    என்றன்    கூடப்    பிறந்த
ஒருத்தி    மகனுளன்    ஒருநான்கு    குறுக்கம்
நிலத்துக்    குரியவன்    ராணியை    நினைத்து
புலம்பித்    திரிகிறான்    போகிறேன்    இன்றே              120
அடுத்தநன்    னாளில்    அவர்தம்    திருமணம்
முடித்து    வைப்பேன்"    என்றலும்    இராமன்
"பேஷாய்ச்    சொன்னாய்    பெருமாள்    போய்வா
ஆசை    பலிக்கஎன்    ஆசிர்    வாதம்
என்றும் உண்டு"    எனப்    பெருமாள்                      125
"நன்றுசா    மி" யென    நடந்தனர்    விரைந்தே.

No comments:

Post a Comment