நெஞ்சில் புகைந்த நெருப்பு
"சாமியும் இல்லை சாதியும் இல்லை
பூமியில் எல்லாம் பொதுஎனப் பேசும்
மடையர் ஊரில் மலிந்து விட்டனர்;
கடையராம் சேரிக் கயவரும் கூடக்
கற்க லாயினர்; ஆதலால் உலகம் 5
முற்றும் கெட்டது; முன்னாள் போலவர்
கையைக் கட்டி வாயைப் பொத்தி
மெய்யும் ஒடுங்கி, மிக்கவே நடுங்கி
நின்ற நிலைமை சென்று விட்டதே;
இன்று சேரியர் என்னையும் எதிர்க்கத் 10
துணிந்து விட்டனர்; தொலைப்பேன்" என்று
நினைந்து வந்த நிலக்கிழார் முன்னே
மாரி யப்பனின் வழியினன் ஒருவன்
நேர்எதிர் வந்து நிமிர்ந்து சென்றனன்
"என்னடா கொழுப்போ? இந்த ஊரின் 15
பண்ணையார் வருகிறேன் பணிவில் லாமல்
செல்கிறா யேடா சேரிக் கெல்லாம்
பொல்லாக் காலம் புகுந்து விட்டதோ?"
என்று பெருமாள் இரைய, எதிரே
சென்றவன் நின்று திரும்பிப் பார்த்தனன்; 20
பார்வையின் கடுமையைப் பகைமை உணர்வை
நேரில் கண்டு நிலைமையை உணர்ந்த
நிலக்கிழார் அங்கு நிற்கவே இல்லை;
வலக்கால் முந்தி இடக்கால் முந்திஎன
விரைந்து நடந்து வீட்டின் உள்ளே 25
நுழைந்ததும் கதவை நொடித்துச் சாத்தினர்;
சேரிக் காரனை எண்ணிச் சினத்துடன்
கூரிய கடுஞ்சினம் கொண்ட வேளையில்,
வீட்டுப் பணிசெயும் வேலைக் காரி
தோட்டத் திருந்து வீட்டினுள் நுழையச் 30
சினத்தை மறைத்துச் சிரிப்பைக் குழைத்து
"நினைத்தேன் உன்னை நேரில் வந்தாய்
இங்கே எல்லா இடத்தும் தேடினேன்
எங்கே ராணி?" என்றார்; "நூலகம்
செல்வதாய்ச் சொல்லிச் சென்றது; திரும்பிட 35
வில்லை இன்னும்; வேலையை முடித்தேன்;
அவ்விடம் சென்றுநும் அருமை மகளை
இவ்விடம் அழைத்து வரவோ? என்று
கேட்டுநின் றாளைப் பார்த்து நின்றார்.
"வாட்டம் இலாத மாநிற மேனியள் 40
முப்பது வயதாம் ! அப்படிச் சொல்வது
தப்பே இருபதைத் தாண்டி வயதைச்
சொல்வது பிழையெனும் தோற்றம்; இவளை
வெல்வ(து) எப்படி? வெல்வேன்; ஆயினும்
சாதி யொன்று தடையாய் உளதே; 45
சாதியில் வள்ளி தாழ்ந்தவள்; அவளை
முருகனே யானை முகனின் துணையால்
திருமணம் செய்தனன்; திருமணம் இன்றி
மறைவாய் இவளை வைத்துக் கொண்டால்
குறைதான் என்ன? குறிப்பால் இன்றுஎன் 50 ஆசை காட்டினால் அவளும் இசையலாம்;
ஓசை இலாமல் ஒப்புதல் பெறலாம்
இருபதில் கணவனாய் ஒருவனை ஏற்றபின்
அறுபது நாளில் அறுத்து நிற்பவள்;
அவட்கும் ஆசை இருக்கும் அன்றோ? 55
முயற்சி செய்வேன் முடிப்பேன்" என்றே
உளத்தில் எண்ணி உரியவ ளிடத்துக்
கிளத்துவ(து) எப்படி எனக்கிறு கிறுத்து
நிலைத்த பார்வையை அவள்மேல் நிறுத்தி
மலைப்பு நீங்கி வாயைத் திறந்து 60
பேச முனைந்த வேளையில், வீட்டு
வாசலில் வந்தனள் மகளாம் அரசி;
சாதித் தாழ்வையும் தகுதி உயர்வையும்
மோதி மறைத்த மோகப் பேரலை,
மகளைக் கண்டதும் மடிந்து வற்றி 65
அகத்தில் சினஅலை ஆஅர்த்(து) எழுந்ததால்,
"அடங்கா தவளே! அப்பன் சொற்கு
மடங்கா தவளே! அந்த மடையனைக்
காணவோ சென்றாய்? கற்றதன் செருக்கோ?
நாண மிலையோ நாயே சொல்" என, 70
"எந்தையே! கடுமொழி ஏனோ? தாங்கள்
வெந்திட யான்செய் வினைதான் என்னோ?
நூலகம் சென்றுநன் னூல்களைக் கற்பதும்
நாளிதழ் பார்த்து3ல் லறிவை வளர்ப்பதும்
கூடாச் செயல்எனக் கூறுதல் தகுமோ; 75
மாடென வீட்டில் மடிந்து கிடக்கவோ
கல்வி அளித்தெனைக் கைதூக்கி விட்டீர்
சொல்லுக" என்றவள் தொடுத்தது கேட்டுக்
கற்றதால் உற்றதென்? கருத்தில் லாமல்
பெற்றவன் எனக்கெதிர் பேசி நிற்கிறாய் 80
இனியும் படித்தால் என்ன ஆகும்?
பணிவு பறக்கும் துணிவே பிறக்கும்
தகுதிச் சிறப்பையும் சாதிச் சிறப்பையும்
பகுதி பகுதியாய் பாழடித் திடுவாய்
மானம் அழிந்து மதிப்புக் குறைந்த 85
ஈனப் பிறவியாய் எனைஆக் கிடுவாய்
ஒன்று சொல்கிறேன் உறுதியாய்ச் சொல்கிறேன்
இன்றே சென்றென் தங்கை மகனை
அழைத்து வருவேன்; அவன்உன் கழுத்தை
வளைத்துத் தாலியை மாட்டச் செய்வேன்; 90
எங்கும் அதுவரை ஏகிடேல்; வீட்டில்
தங்குக மீறிடின் பொங்கி எழுவேன்"
என்று பெருமாள் கொன்றது போல
நின்று சொன்ன நெடுமொழி கேட்டு,
மெய்யெலாம் நடுங்க விதிர்ப்புற்(று); அரசி 95
செய்வ(து) என்எனத் திகைத்திட, "அய்யா !
என்று வாசலில் எழுந்த குரலை
நன்றே அறிந்தவள் ஆதலால், அரசி,
வந்தவர் மாறனார் என்று மகிழ்ந்தும்
அந்தநே ரத்தில் வந்ததற்(கு) இரங்கியும் 100
சென்றனள்; வாசலில் சிரித்த முகத்துடன்
நின்ற தலைவரை நேர்உற வணங்கி
இல்லினுள் அழைத்(து) ஓர் இருக்கையைக் காட்டி
உள்ளே சென்று தந்தைக்(கு) உரைத்தனள்;
திருமாறன் எனும் பெயரைக் கேட்டும் 105
ஒருமகள் காட்டும் ஊக்கம் கண்டும்
பெரியார் கொள்கை பேசு வோர்என
அறிந்தவ ராகி, ஆர்வம் இலாமல்
வந்து மாறனார் வணக்கம் ஏற்று,
"வந்த(து)என்? மகளைப் பார்க்கவோ" என்ற 110
பெருமாள் தம்மின் பேதைமை உணர்ந்து
"பெரியராம் தங்களைப் பார்த்துப் பேசவே
வந்தேன்" என்ற மாறனார் தமக்கும்
தந்தை யார்க்கும் சுவைநீர் தந்து
நின்ற அரசியை நோக்கிப் பெருமாள், 115
"சென்றுன் கடமைகள் செய்"என்(று) அனுப்பினர்.
மாறனார், அரசியின் மாண்புகள் தம்மைக்
கூறிப் புகழ்ந்திடக் கொண்ட எரிச்சலால்,
"இதற்கோ வந்தீர்? இவளின் மதியால்
எதிர்க்கிறாள் என்னை இதுவோ மாண்பு?" 120
என்றனர் பெருமாள் "எதனால் எதிர்க்கிறாள்?
நன்றெனில் சொல்க" என மாறனார் நயந்திட,
"சொல்வதிற் கில்லை சொல்க நீவீர்என்
இல்லம் வந்ததேன்?" என்றெதிர் வினவ,
"அய்ய ! அமர்க - ஆறுக சினமே 125
மெய்யாய் நும்நலம் விரும்பியே வந்தேன்
நும்மகள் அறிவின் நுட்பமும் திட்பமும்
செம்மையாய் அறிவேன் சிறப்புடன் அவள்தான்
வாழ்ந்திட விழைகுவன்; மற்றுஅவள் காதலால்
சூழ்ந்தன பகையும் தொல்லையும் என்று 130
சிலர்சொலக் கேட்டுத் தெளிந்ததை சொல்லி
நலஞ்செய விரும்பியே நானிங்கு வந்தேன்
என்ன குழப்பம் என்னிடம் சொல்க" எனச்
"சொன்னால் குழப்பம் தொலைத்திடக் கூடுமோ?
சொல்கிறேன் எனமகள் தொடுதக(வு) இலாத 135
புல்லிய ராம்கீழ்ப் புலையருள் ஒருவனைக்
காதலன் என்கிறாள் கணவன் என்கிறாள்
சாதியில் உயர்வு தாழ்விலை என்கிறாள்
பன்றி யுடன்பசு ஒன்றிட லாமோ?
என்றும் காக்கை யுடன்குயில் இணையுமோ? 140
நரியைப் பரிதான் நாடுமோ உயர்ந்த
கரிதான் கழுதையைக் காத லிக்குமோ?
என்மகள் அந்த இழிந்த பிறவியைத்
தன்துணை என்றால் சாதிஎன் னாவது?
சொல்க" எனப் பெருமாள் துடிப்புடன் கேட்க, 145
"நல்ல(து) அய்ய! நான் சொல்வது கேளிர்!
பன்றியும் பசுவும் ஒன்றுவ தில்லை
என்றும் காக்கை குயில்இணை(வு) இல்லை;
நரியைப் பரிதான் நாடுவ தில்லை
கரியும் கழுதையைக் காதலிக் காது 150
முற்றிலும் உண்மைநீர் மொழிந்த எல்லாம்
கற்றவர் ஏற்கும் கருத்தே; ஆயினும்
பன்றியும் பன்றியும் பசுவும் பசுவும்
ஒன்றுதல் உண்டாம் உயர்வுதாழ்(வு) இல்லை
மக்களில் மட்டும் உயர்வும் தாழ்வும் 155
தக்கதோ? சாற்றுக சாதிதான் பிறப்பால்
பேசுதல் முறையோ? பேணுதல் முறையோ?
ஆசு போற்றுதல் அறிவோ? அறமோ?
சேரியின் உள்ளும்இத் தெருவின் அகத்தும்
ஊரிலும் உலகிலும் உலவிடும் மக்கள் 160
அனைவரும் ஓரினம் அன்றோ? செய்யும்
வினையால் அன்றோ வேற்றுமை விளைவது?
நும்மகள் அரசியும் அவள்சொலும் அன்பனும்
நன்கனம் கற்றவர்; நலம்செய் கல்வியால்
ஒருகுலம் அன்றோ? ஒன்றுதல் தீதோ? 165
இருவரும் வாழ்வில் இணைந்திட இசைதலே
அவர்க்கும் நுமக்கும் ஆக்கம் தருவதாம்
எவர்க்கும் அஞ்சேல் என்உரை ஏற்பீர்"
என்று மாறனார் எடுத்து மொழிந்திட,
"நன்று நன்றுநும் ஆடகம் நன்று 170
தீது செய்யும்அச் சேரிப் பயல்உமைத்
தூது போம்எனத் துரத்தினன் கொல்" எனப்
பெருமாள் சினந்து பேசலும் வந்த
அருமையள் அரசி, "அப்பா! இவர்சீர்
அறியா மையினால் சிறுமை செய்கிறீர் 175
அறிவிப் பேன்" என, "அறிவேன் அறிவேன்
இல்லை சாதி என்றது மேயிவர்
பொல்லா தார்எனப் புரிந்து கொண்டேன்
உள்ளே போநீ; உம்மைத் தானே!
தள்ளிக் கதவைச் சாத்து முன்னர்ப் 180
போம்" எனச் சொல்லப் புலம்பிய அரசியைத்
தாய்என நோக்கித் தண்டமிழ் மாறனார்
அகன்றனர் அவ்விடம்; நெஞ்சில்
புகைந்த நெருப்புடன் புரட்சியை நினைந்தே
Wednesday, May 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment