சேரியின் நடுவிலோர் மாரி கோயில்
மாரி கோயிலின் வடபால் ஓங்கித்
தழைத்த வேம்பு தருநிழல் ஆங்கண்
உழைத்துக் களைத்தவர் ஒன்று கூடி
நாட்டு நடப்பின் நன்மையும் தீமையும் 5
மேட்டுக் குடியினர் விளைக்கும் கொடுமையும்
ஒருவருக் கொருவர் உரைக்கக் கேட்டும்
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தும்
இருந்த வேளையில் இளைஞன் ஒருவன்
நெருங்கி வந்து "நிலக்கிழார் தெருவில்ஓர் 10
தேநீர் விடுதிஉள் செல்ல விரும்பினேன்
போ நீ வெளியே புலையா; உள்ளே
வந்தால் உதைப்போம் என்றனர்; ஊமையாய்
வந்தேன்" என்றான்; வயதில் முதிர்ந்த
பெரியவர் ஒருவர் பேச லுற்றார் 15
"தெரியுமா சேதி திங்கட் கிழமை
பேரியூர் செல்லப் பேருந்(து) ஏறி
ஓரிடத்(து) அமர்ந்தேன்; உயர்சா தியர்எனை,
ஏ!ஏ! புலையா எழுந்துநில் எம்முன்
ஓ!ஓ! அமர்ந்து வருவையோ என்றனர்; 20
உந்து வண்டி உயர்சா தியர்க்கெனத்
தந்த வண்டியோ சாற்றுக என்றேன்;
இழிந்தநீ எம்மை எதிர்த்தோ பேசினை
ஒழிந்துபோ என்றெனை ஊர்ப்புறத்(து) இறக்கினர்
ஏலா மையுடன் எஞ்சிய தொலைவைக் 25
காலால் நடந்தே கடந்தேன்" என்றார்
பெரியவர் கூற்றைக் கேட்டதும் இளையர்
எரியெனக் கனன்றனர்; இன்னொரு பெரியவர்
"கேண்மின் இந்தக் கேட்டினை ஒருநாள்
ஆண்துணை இன்றிதம் அய்யணன் மகள்தான் 30
கரும்பு வயலின் வரம்பினில் புல்லொடு
திரும்பி வருகையில் பெருங்குடிப் பிறந்தவோர்
வெறும்பயல் அவளை விரட்டிச் சென்று
கரும்புக் காட்டினுள் கைப்பிடித்(து) இழுத்தஇக்
கொடுமை நிலைப்பதோ கூறுவீர்" என்றனர் 35
"கொடுமையே; அதுபோல் நம்குடிப் பிறந்த
மாரி, நிலக்கிழார் மகளை வளைக்கப்
போரில் இறங்குதல் பொருத்தமோ சொல்வீர்"
என்றொரு பெரியவர் எதிர்வினாத் தொடுக்க
நன்றே எனவும் நாசமே எனவும் 40
சூறு பட்ட(து) அக்கூட்டம்; இதனால்
வேறு பட்டனர் சேரியர் என்னும்
கேட்டினை அஞ்சிய கிழவர் ஒருவர்
கூட்டத்(து) இடைவளர் குழப்பம் அடக்கி
மாரியை அழைத்து வருகவென ஏவினர்; 45
மாரியும் தந்தையும் வந்தனர்; மாரியைப்
பெரியவர் வினவினர்; "பெருநிலக் கிழார்தம்
வருகையின் நோக்கமும் வந்துனைச் சினந்ததும்
ஏன்என எமக்(கு)உரை" என்றலும் மாரி
"யான்உரைக் கின்றேன் யாவும் உண்மை 50
நிலக்கிழார் மகளும் நிறையக் கற்றவள்
குலத்தின் செருக்கோ குன்றாச் செல்வச்
செழிப்பின் செருக்கோ சிறிதும் இலாதாள்
உழைப்பின் பெருமை உணர்ந்தவள் ஊரில்ஓர்
மன்றம் கண்டு வளர்ப்பவள் என்பதை 55
நன்றே அறிவீர் நங்கை அவள்எனை
மணப்பேன் என்றனள் மறுத்தேன் உலகம்
இணக்கம் தராதென இயம்பினேன் அவளோ
துணையெனில் நீயிரே துணையாம் வேறு
நினைவிலை என்றனள்; நிலக்கிழா ரிடமும் 60
உறுதியாய் உரைத்தனள் போலும்; அதனால்
பெருநிலக் கிழார்எனைப் பேசினர்; ஊரின்
நீங்குக என்றும் நீங்கா விடின்உயிர்
வாங்குவேன் என்றும் வஞ்சினம் கூறினர்;
என்பால் பிழையோ? இயம்புக பெரியீர்! 65
அன்பால் என்னை அடைய விரும்பும்
பெண்பால் பிழையோ? பெருநிலக் கிழாரின்
பண்பில் பிழையோ? பகர்ந்திடு வீர்எனச்
சொன்ன மாரியின் தூய்மையை உணர்ந்தே,
"உன்னையும் அந்தப் பெண்ணையும் எங்கட்(கு) 70
என்ன நேரினும் இணைத்து வைப்போம்
சொன்ன உறுதியில் சோர்ந்திடோம் தூயவர்
உன்னை ஊர்விட்(டு) ஓடச் சொன்னவர்
கண்முன் இருவரும் கணவன் மனைவியாய்
வாழச் செய்து மற்றவர் செருக்கெலாம் 75
வீழச் செய்வோம்" என்றனர் வீறுடன்;
இளையரும் முதியரும் எழுச்சிப் பெற்றுக்
கலைந்து சென்றனர்; ஆயிரம் கண்ணுடை
மாரி யம்மை வறிதே
சேரிக் கோயிலுள் சிறையிருந் தனளே. 80
Thursday, May 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment