கலந்துரையாடல்
இறங்கிய இருளை விரட்டி இருளால்
உறங்கிக் கிடந்தோர் உறக்கம் கலைக்க
எழுந்து வந்த இளங்கதிர் வீச்சால்
எழுந்த மாந்தருள் எண்ணற் றவர்தாம்
ஏற்பன விடுத்(து) ஏ லாதன செய்வதும் 5
ஆற்றல் இலாரை அழிப்பதும் ஒழிப்பதும்
கடமை மறந்து காலங் கழிப்பதும்
மடமையை எங்கும் வளர்ப்பதும் கண்டுளம்
வெந்து கதிரவன் விண்ணின் உச்சியில்
வந்து நின்று வருந்திச் சென்று 10
மேற்கு மலையின் மீ மிசை ஏறித்
தோற்றேன் என்று சொல்லிக் கடலுள்
வீழ்ந்த மாலை வேளையில், தமிழில்
ஆழ்ந்த புலமையும் அறிவு நலமும்
வாய்ந்த மாறனார் மாரியின் இல்லம் 15
போந்தனர்; மாரியும் புகழின் வடிவை
அறிவொளி பாய்ச்சி அகவிருள் நீக்கிடும்
பெரியரைக் கண்டு பெற்றியின் வணங்கி,
அன்னையைத் தந்தையை ஆர்வம் மீதுற
வம்மெனக் கூவி வணங்கச் செய்து, 20
"கூறுமின் அய்ய ! கொள்கைக் குன்றே!
ஊரினில் உற்றார் உறவினர் நலமோ?"
என்ற மாரிக்(கு) ஏற்புற இசைத்தபின்,
"நன்று தம்பி! நான் இன்று பிற்பகல்
வேளையில் அரசியின் வீடு சென்று 25
பீழை விளைக்கும் பெருமாள் கண்டுநும்
மகளை மாரியின் துணையாய் ஆக்குக
புகழே விளையும் பொல்லாங்(கு) இலைஎனக்
கூறிடக் கேட்டுக் கூர்அறி(வு) இல்லார்
கூறிய கொடுமொழி கூறுதற்(கு) இல்லை" 30
என்று மாறனார் இயம்பிடக் கேட்டுப்
பொன்றிய மாரி யப்பன் புகன்றனன்;
"அய்ய! தமிழ்ப்பகை அழிக்கவும் தமிழினம்
உய்யவும் நல்வழி காட்டும் உரவோய்!
எளியேன் பொருட்டு வலியரைக் கண்டு 35
பழியுரை ஏற்றினிர் அழியும்என் நெஞ்சு" என
மாரி வருந்தி உரைத்திட, மாறனார்
கூறினர்: "மாரி! நீ கூறுமா(று) இல்லை;
பெருமாள் என்னும் ஒருவரே நம்மை
மறுப்பவர் எனநீ மயங்கிட வேண்டாம் 40
அவரைப் போன்றே அறியா மையினால்
தவறுவோர் பலர்நம் தமிழனத் துள்ளனர்
மரத்தின் பின்னே மறைந்து நின்று
மறத்தை ஆரியம் மாய்க்குமென் பதையும்
மாய்த்தபின் அஃதே மாண்புறு செயல்என 45
ஆக்குமென் பதையும் ஆரியப் புனைவால்
அறிந்துளோம்; இன்றும் அறமிலாச் சாதிப்
பிரிவெனும் தீமையின் பின்னே நின்று
நமருள் மூடரை நம்முன் நிறுத்தித்
தமிழரைத் தமிழரே தாக்கிடக் கண்டு 50
நகைசெய் ஆரியக் கள்வரே நந்தமிழ்ப்
பகைஎன அறிக; பைந்தமிழ் மறவரை
ஒன்று திரட்டுதல் ஒன்றே அப்பகை
வென்றிடும் வழிஎன விளம்பினர். மேலும்
"அறிவன ராயநாம் ஒருபால்; ஆரிய 55
நெறியைப் போற்றும்நம் இனத்தவர் ஒருபால்;
எனிரு பாலர் இடையே எழுந்த
இனநலப் போர்தான் இங்கு நடப்பதாம்
இருதிறத் தார்நின்(று) எதிர்க்கும் போரில்
இருவரும் வெல்லுதல் இயலா(து); ஆயினும் 60
ஓரின மக்களே உடமிற்றுமிப் போரில்
ஈரணி தாமும் வெற்றி ஈட்டவும்
களத்தில் வராமல் கரந்து நின்று
குழப்பம் செய்பகைக் கூட்டம் வீழ்த்தவும்
அறிவியக் கத்தார் அனைவரும் செய்தற்(கு) 65
உரியதே செய்கிறேன் உயர்கடன் ஈது" என
மாறனார் உரைக்கவும் மாரியின் அன்னையார்
சீருடன் வழங்கிய தேனமு தோடு
சிறுமலைப் பழமும் தேன்குழல் முறுக்கும்
மறுத்தல் இன்றி விருப்புடன் உண்டபின் 70
வெல்சுவை நீரும் விரும்பிப் பருகிச்
செல்லலாம் ஊர்க்கெனத் திருமாற னார்தாம்
எழுந்திட, "அய்ய! இரவினில் இங்கொரு
கலந்துரை யாடலில் கலந்திட வேண்டும்"
என்ற மாரி யப்பனின் விருப்பம் 75
நன்றென மாறனார் இசைவு நல்கினர்.
இரவினில் மாரியின் இல்முன் பலரும்
உறவினர் போல உவந்து கூடினர்.
மகளிர் பலருடன் வளர்மதி அம்மையும்
அகம்மலி மகிழ்வுடன் அங்கு வந்தனர்; 80
வந்தோர் தம்மை மகிழ்வுடன் நோக்கிச்
செந்தமிழ்த் தலைவராம் சீரிய மாறனார்,
"அன்னையீர் 1 பெரியீர்! அனைவரும் வம்மின்
என்னை அறிந்தோர் அறியா தார்எனும்
பலரும் வந்துளீர் பன்னா ளாக 85
வளரும் அய்யம் உளதெனில் மறைத்தல்
வேண்டாம் வினவுக" என்றலும் வளர்மதி,
"தீண்டா மையெனும் தீமை நாட்டில்
அரும்பிய தெப்படி? அழித்தல்எப் படி?" எனப்
பெரும்புகழ் மாறனார் பேச லுற்றார்; 90
"வந்த வடவர் மயக்கும் நெறிகளால்
இந்த நிலத்தில் இறைவன் படைப்பில்
பிறப்பால் நாங்கள் பிறர்க்கெலாம் மேலாம்
சிறப்புடை வேந்தரும் சிறியர் என்றனர்;
வேதியர் கூற்றை வேந்தரும் மாந்தரும் 95
தீதுண ராமல் சிறப்பென ஏற்றனர்;
மறுத்து நின்றவர் ஒறுக்கப் பட்டனர்;
ஒறுக்கப் பட்டவர் ஒடுக்கப் பட்டனர்;
ஒடுக்கப் பட்டவர் ஊரினுள் நுழைவது
தடுக்கப் பட்டனர் தாழ்த்தப் பட்டனர்; 100
நால்வரு ணத்துளும் கீழவர் அவர்என
மேல்வரு ணத்தார் விளம்பி, அவர்களைத்
தொட்டால் தீட்டு ஒட்டும் என்றனர்;
கெட்ட தமிழரும் கேட்டுக் கொண்டனர்;
ஆண்ட வேந்தரும் ஆரியர்க்(கு) அழிந்ததால் 105
தீண்டாமை வந்த(து) இத் தீமை ஒழிந்திடத்
தாழ்ந்தவர் எனத்தமைத் தள்ளி வைத்து
வீழ்த்திய நெறிகளை விட்டு விலகியும்
பள்ளர் பறையர் எனப்பல பிரிவாய்
உள்ளவர் முதற்கண் ஒன்று பட்டும் 110
நின்றால் மட்டுமே நேற்றையத் தீமையை
வென்றுமேம் படலாம்" என்று மாறனார்
எடுத்துரை செய்தபின் எழுந்தோர் இளைஞர்
தொடுத்தனர் ஒருவினாத் "தூயவ ! ஒழுக்கம்
தழைத்து நிலைக்கோர் மதத்தைச் சார்தலே 115
விழுப்பம் அன்றோ? விளம்புக" என்னலும்
"ஒருவர்க் கொருவர் உயர்வு தாழ்வு
கருதுதல் இன்றியும் காழ்ப்பு நீங்கியும்
பிறர்நலம் பேணியும் தன்னலம் துறந்தும்
சிறப்புடன் வாழ்தலே ஒழுக்கம் ஆகும்; 120
இந்தநல் ஒழுக்கம் ஏற்று வாழ
எந்த மதத்தையும் ஏற்றல் தேவையோ?
ஒருமதம் சார்ந்தோர் பிறமதத் தவரைக்
குறையுடை யோர்எனக் கூறலே ஒழுக்கமாய்ப்
போற்றி நிற்பர்; அந்தப் புன்மையை 125
ஏற்றதொரு மதத்தில் இணைவதேன்?" என்றனர்
"கடவுள் இலையோ? கழறுக" என்றே
உடல்தளர் பெரியவர் ஒருவர் வினவ
"இல்லாத ஒன்றை இல்லை என்று
சொல்லுதல் தக்கதே துயர்பட வேண்டா 130
மாந்தர் அறிவு வளரா நிலையில்
மாந்தர் அறிவுக்(கு) எட்டா வகையில்
இடியும் மின்னலும் எரியும் வெள்ளமும்
திடும்எனத் தோன்றித் தீங்கு விளைத்தலை
ஏன்என்(று) அறிந்திட இயலா மாந்தர் 135
வானில் தமக்கு மேலாய் ஒருவன்
இருந்திடல் வேண்டும் அவனே இத்தகு
பெருந்துயர் செய்கிறான் எனப்பே தைமையால்
அஞ்சிக் கடவுளை ஆக்கிக் கொண்டனர்;
நஞ்சினும் கொடியர் நாட்செல நாட்செல 140
அறியா மாந்தரை அடக்கிடக் கற்பனைக்
குறியாம் கடவுளைக் கொண்டனர் துணையெனக்
கற்பனைப் பொருளைக் கட்புலன் கடந்து
நிற்கும் பொருள்என நினைத்தனர்; தூய
அறிவினர் நாங்கள் இலைஎன அறைகிறோம் 145
அறிக" என மாறனார் தெளிவுடன் சொல்லப்
பெரியரும் இளையரும் பெரிதும் மகிழ்ந்தனர்
அறிவு வேட்கையால் ஆர்வம் மிகுதியால்
வேறு பலரும் பல்வகை வினவ
மாறனார் விளக்கம் மகிழ்வுடன் உரைக்கக் 150
கலந்துரை யாடல் நிறைந்த்து பலரும்
கலைந்து சென்றபின் கனிவுடன் மாறனார்
"அரசியின் துன்பம் அகன்றிட வளர்மதி!
உரைசால் சிறப்பின் உறுதுணை யாகுக" என,
உடன்பட்(டு) அவளும் விடைபெற மாரியின் 155
கடன்ஈ(து) என்று கருத்துடன் மொழிந்தபின்
உறங்கச் சென்றனர் தமிழர்
உறக்கம் நீங்கிட உழைப்பவர் தாமே
Friday, June 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment