Tuesday, April 13, 2010

இயல் - 6 உவர்க்கடல் பிறந்த முத்து

உழைத்தல்    இன்றியே    உயர்ந்த    செல்வர்
இளைத்தல்    இன்றி    ஏறிய    மேனியர்
பள்ளிக்    கல்வியில்    பற்றாக்    குறையர்
வள்ளல்    பண்பின்    மாறாப்    பகைவர்
பத்துக்    குடும்பம்    மொத்தமாய்    வாழத்
தக்கதோர்    வளமனை    தமக்கே    உடையவர்
கூரறி(வு)    ஆகிய    ஆறாம்    அறிவைக்
காரிருள்    நெஞ்சினில்    காவல்    வைத்தவர்
மேட்டுக்    குடியினர்    விரித்த    வலையில்
மாட்டிக்    கொண்டு    மகிழ்ந்து    நிற்பவர்
சூத்திரன்    என்று    பார்ப்பனர்    சொல்வதை
ஏற்றுக்    கொண்ட    இழிதகை    யாளர்
எல்லாம்    அவன்செயல்    என்று    கூறி
வல்லாண்    மையினை    வளர்த்துக்    கொள்பவர்
மனைவி    இழந்தவர்;    மறைவாய்    ஒருத்தியை
நினைவில்    இருத்தி    நெருங்கத்    துடிப்பவர்;
தந்நலம்    கருதிச்    சாதியும்    மதமும்
நன்மைய    என்னும்    நயன்இ    லாதவர்
பெருமாள்    அவர்பெயர்    பெருநிலக்    கிழாஅர்
ஒருமகள்    அவளே    உமாஅ    ராணியாம்
உவர்க்கடல்    பிறந்த    ஒளிதிகழ்    முத்தென
அவர்க்கவள்    மகளாம்;    அவளை    அவர்தாம்
அன்று    காலையில்    அழைத்தனர்    அருகே
சென்றனள்;    உள்ளம்    திரிந்து    நோக்கி,
"மகளே !    உன்தாய்    மறைந்தபின்    உன்னைத்
தகவுடன்    வளர்த்தேன்;    தடைசொல்    லாமல்
விரும்பிய    வண்ணம்    மேனிலைக்    கல்வி
பெறும்வகை    செய்தேன்;    பெருகிய    செல்வம்
அனைத்தும்    உனக்கே    என்பதை    நெஞ்சில்
நினைத்து    நடப்பாய்    என்று    நினைத்தேன்
ஆண்டவன்    கொடுத்த    அளப்பரும்    செல்வம்
ஈண்டுனக்(கு)    இருப்பவும்    ஏழைக    ளுடனும்
சாதியில்    தாழ்ந்த    சழுக்க    ருடனும்
வீதியில்    அலைவதேன்?    வீழ்ந்த    உலகைத்
தூக்கி    நிறுத்தும்    தொண்டினை    வேறு
போக்கி    லாதவர்    புரிகென    விடுத்து
வீட்டில்    தங்குக    என்றேன்    இதுவரை
கேட்க    வில்லை;    மகளே !    கேள்நீ
அப்படித்    திரிய    ஒப்பிடேன்    இனியும்
எப்படி    யும்இரு    திங்கள்    கழியுமுன்
திருமணம்    உனக்குச்    செய்துவைத்    திடுவேன்
அறிக நீ"    என்றவர்    அறைந்தது    கேட்டுத்
தந்தையை    நோக்கித்    தலையை    நிமிர்த்தி,
"எந்தையே !    என்உளம்    நொந்திடும்    வண்ணம்
ஒன்றும்    செய்ய    ஒருப்படீர்    அன்றோ?
ஒன்றை    இன்றுநான்    உறுதியாய்ச்    சொல்வேன்
உடலும்    பொருளுமே    உயர்வெனக்    கருதிடும்
விடலை    எவற்கும்    விலையா    வதற்குத்
தெளிந்த    அறிவும்    சிறந்த    கொள்கையும்
உளநான்    என்றும்    உடன்படேன்;    அன்றியும்
ஒருவரைத்    துணையென    உளத்தில்    கொண்டுமற்(று)
ஒருவரைத்    துணையென    இருநிலை    யேற்றல்
முறையோ?    தந்தையே !    உரைமின்"    என்னலும்
கரைதட்    டியபெருங்    கலம்என    அதிர்ந்து
செயலற்    றவராய்த்    திகைத்து    நின்றவர்,
"அயலூர்ப்    படிப்பே    அப்பனை    எதிர்க்கும்
துணிவைத்    தந்ததோ?    சொல்க;    ஒருவனைத்
துணைஎனச்    சொன்னாய்    தொலைக்கிறேன்     யார் அவன்?
இன்னே    சொல்க"    என்றவர்    இரைய,
"என்னை    அறிந்தவர்;    என்உளம்    உணர்ந்தவர்;
பெரியார்    நெறியினர்;    பெரும்புகழ்ப்    பாவலர்
உரிமை    வேட்கை    உடையவர்;    உயர்ந்தவர்
மாரி    யப்பன்    என்னும்    மாண்பினர்
சீரிய    அவரே    என்னுளம்    சேர்ந்த
துணைவர்"    என்றவள்    சொல்லவும்    சினந்து
"துணைவனா?    அவனா?    தொடுதகவு    இல்லான்;
சேரியில்    கிடப்பவன்;    சாதியால்    பணத்தால்
ஊரினில்    உயர்ந்தஎன்    மகள்நீ    ஆயினும்
ஏனோ    அறிவுஉனக்கு    இப்படி    ஆயது?
நானிது    பொறேன்"    என்றவர்,    நயந்து,
"மகளே    என்னை    வதைத்திடேல்    ஊரார்
இகழ்வர்    அதற்குநீ    இடங்கொடேல்"    என்று
வேண்டியும்    மாறி    வெருட்டியும்    தெருட்டியும்
நீண்ட    நேரமாய்    நின்று    புலம்பியும்
மாறா    உளத்திண்    மையளை
வேறாய்    நோக்கி    விரைந்தனர்    வெளியே.

No comments:

Post a Comment