Tuesday, April 13, 2010

இயல் - 6 உவர்க்கடல் பிறந்த முத்து

உழைத்தல்    இன்றியே    உயர்ந்த    செல்வர்
இளைத்தல்    இன்றி    ஏறிய    மேனியர்
பள்ளிக்    கல்வியில்    பற்றாக்    குறையர்
வள்ளல்    பண்பின்    மாறாப்    பகைவர்
பத்துக்    குடும்பம்    மொத்தமாய்    வாழத்
தக்கதோர்    வளமனை    தமக்கே    உடையவர்
கூரறி(வு)    ஆகிய    ஆறாம்    அறிவைக்
காரிருள்    நெஞ்சினில்    காவல்    வைத்தவர்
மேட்டுக்    குடியினர்    விரித்த    வலையில்
மாட்டிக்    கொண்டு    மகிழ்ந்து    நிற்பவர்
சூத்திரன்    என்று    பார்ப்பனர்    சொல்வதை
ஏற்றுக்    கொண்ட    இழிதகை    யாளர்
எல்லாம்    அவன்செயல்    என்று    கூறி
வல்லாண்    மையினை    வளர்த்துக்    கொள்பவர்
மனைவி    இழந்தவர்;    மறைவாய்    ஒருத்தியை
நினைவில்    இருத்தி    நெருங்கத்    துடிப்பவர்;
தந்நலம்    கருதிச்    சாதியும்    மதமும்
நன்மைய    என்னும்    நயன்இ    லாதவர்
பெருமாள்    அவர்பெயர்    பெருநிலக்    கிழாஅர்
ஒருமகள்    அவளே    உமாஅ    ராணியாம்
உவர்க்கடல்    பிறந்த    ஒளிதிகழ்    முத்தென
அவர்க்கவள்    மகளாம்;    அவளை    அவர்தாம்
அன்று    காலையில்    அழைத்தனர்    அருகே
சென்றனள்;    உள்ளம்    திரிந்து    நோக்கி,
"மகளே !    உன்தாய்    மறைந்தபின்    உன்னைத்
தகவுடன்    வளர்த்தேன்;    தடைசொல்    லாமல்
விரும்பிய    வண்ணம்    மேனிலைக்    கல்வி
பெறும்வகை    செய்தேன்;    பெருகிய    செல்வம்
அனைத்தும்    உனக்கே    என்பதை    நெஞ்சில்
நினைத்து    நடப்பாய்    என்று    நினைத்தேன்
ஆண்டவன்    கொடுத்த    அளப்பரும்    செல்வம்
ஈண்டுனக்(கு)    இருப்பவும்    ஏழைக    ளுடனும்
சாதியில்    தாழ்ந்த    சழுக்க    ருடனும்
வீதியில்    அலைவதேன்?    வீழ்ந்த    உலகைத்
தூக்கி    நிறுத்தும்    தொண்டினை    வேறு
போக்கி    லாதவர்    புரிகென    விடுத்து
வீட்டில்    தங்குக    என்றேன்    இதுவரை
கேட்க    வில்லை;    மகளே !    கேள்நீ
அப்படித்    திரிய    ஒப்பிடேன்    இனியும்
எப்படி    யும்இரு    திங்கள்    கழியுமுன்
திருமணம்    உனக்குச்    செய்துவைத்    திடுவேன்
அறிக நீ"    என்றவர்    அறைந்தது    கேட்டுத்
தந்தையை    நோக்கித்    தலையை    நிமிர்த்தி,
"எந்தையே !    என்உளம்    நொந்திடும்    வண்ணம்
ஒன்றும்    செய்ய    ஒருப்படீர்    அன்றோ?
ஒன்றை    இன்றுநான்    உறுதியாய்ச்    சொல்வேன்
உடலும்    பொருளுமே    உயர்வெனக்    கருதிடும்
விடலை    எவற்கும்    விலையா    வதற்குத்
தெளிந்த    அறிவும்    சிறந்த    கொள்கையும்
உளநான்    என்றும்    உடன்படேன்;    அன்றியும்
ஒருவரைத்    துணையென    உளத்தில்    கொண்டுமற்(று)
ஒருவரைத்    துணையென    இருநிலை    யேற்றல்
முறையோ?    தந்தையே !    உரைமின்"    என்னலும்
கரைதட்    டியபெருங்    கலம்என    அதிர்ந்து
செயலற்    றவராய்த்    திகைத்து    நின்றவர்,
"அயலூர்ப்    படிப்பே    அப்பனை    எதிர்க்கும்
துணிவைத்    தந்ததோ?    சொல்க;    ஒருவனைத்
துணைஎனச்    சொன்னாய்    தொலைக்கிறேன்     யார் அவன்?
இன்னே    சொல்க"    என்றவர்    இரைய,
"என்னை    அறிந்தவர்;    என்உளம்    உணர்ந்தவர்;
பெரியார்    நெறியினர்;    பெரும்புகழ்ப்    பாவலர்
உரிமை    வேட்கை    உடையவர்;    உயர்ந்தவர்
மாரி    யப்பன்    என்னும்    மாண்பினர்
சீரிய    அவரே    என்னுளம்    சேர்ந்த
துணைவர்"    என்றவள்    சொல்லவும்    சினந்து
"துணைவனா?    அவனா?    தொடுதகவு    இல்லான்;
சேரியில்    கிடப்பவன்;    சாதியால்    பணத்தால்
ஊரினில்    உயர்ந்தஎன்    மகள்நீ    ஆயினும்
ஏனோ    அறிவுஉனக்கு    இப்படி    ஆயது?
நானிது    பொறேன்"    என்றவர்,    நயந்து,
"மகளே    என்னை    வதைத்திடேல்    ஊரார்
இகழ்வர்    அதற்குநீ    இடங்கொடேல்"    என்று
வேண்டியும்    மாறி    வெருட்டியும்    தெருட்டியும்
நீண்ட    நேரமாய்    நின்று    புலம்பியும்
மாறா    உளத்திண்    மையளை
வேறாய்    நோக்கி    விரைந்தனர்    வெளியே.

இயல் - 5 அறிவரசியின் உறுதி

மாலை    வேளையில்    நாள்தொறும்    நாவலூர்
நூலகம்    சென்று    நாளிதழ்    பார்த்தபின்
கடியத்தகுவனகடிந்துகருத்தின்ல்
படியத்    தக்க    பயன்தரு    நூல்களை
வேண்டிப்    பெற்று    வீடு    திரும்பி
மூண்ட    விருப்புடன்    நூலகளில்    மூழ்குதல்
மாரி    யப்பனின்    வழக்கமென்(று)    அறிந்தவள்
சீரிய    அரசி    ஆதலால்    மாரியின்
அகத்தினில்    நுழையும்    அழுத்த    மோடுநூல்
அகத்தினுள்    நுழைந்தவள்,    அவன்எதிர்    அமர்ந்தனள்
கதிரவன்    வரவைக்    கருதித்    தாமரை
எதிர்பார்த்    தேங்கி    இருத்தல்    போல
மாரி    யப்பனின்    மலர்விழி    வீச்சை
நேரிட    விரும்பி    நெஞ்சத்    துடிப்புடன்
இருந்தனள்;    செய்தி    இதழ்களைப்    படித்தபின்
விரிந்த    விழிகளால்    வியப்புடன்    அரசியைக்
கண்டனன்    மாரி;    காதல்    குறித்துத்
தண்டமிழ்    மாறனார்    தன்னை    வினவிய
திறத்தினை    எண்ணித்    திகைத்து    நோக்க,
அரசியாள்    நகைமுகம்    அவற்குக்    காட்டி
வணக்கம்    சொன்னாள்;    மாரி    யப்பனும்
வணக்கம்    சொல்லி,    மாற்றிடம்    நாடி
அகன்றனன்;    அரசியும்    அவன்பின்    தொடர்ந்து
நகர்ந்தனள்;    நின்று    நடந்தனன்;    அவள்தான்
அன்பரே !    அன்பரே !    என்றனள்;    அவனும்
என்னையோ?    என்றனன்.    எதிரில்    வந்தவள்
"நேற்று    மாறனார்    நேரில்    தங்களைக்
கேட்டதாய்    அறிந்தேன்    அவர்பாற்    கிளந்ததென்?
சொல்லுக"    என்றனள்.    "தூயவர்    பால்நான்
உள்ளதைச்    சொன்னேன்;    உளத்தில்    காதல்
இல்லை    என்றேன்;    இங்கும்    நேரில்
சொல்கிறேன்     நுந்தம்    தொண்டுளம்    கண்டுநான்
களிப்ப    தல்லால்    காதல்    இல்லை
ஒளிக்க    வில்லை    உண்மை"    என்ற
மறுப்புரை    கேட்டும்    விருப்பம்    அவன்பால்
இருப்பதை    உணர்த்தும்    எண்ணம்    எழுந்ததால்
"அன்பரே !    தங்களை    அறிவேன்;    மாறனார்
என்னிலை    வினவினர்    இடர்ப்பா(டு)    இன்றியே
உரைத்தேன்    அவர்பால்    உமையென்    துணைவராய்
வரித்த    உண்மையை:    மகிழ்ந்து    வாழ்த்தினர்"
என்றனள்:    மாரியாம்    ஏந்தல்    நெஞ்சகம்
குன்றிய    நிலையில்    கூறின்ன்;    "அரசி ! நம்
கொள்கை    நன்றே    குறிக்கோள்    நன்றே
உள்ளமும்    நன்றே    ஆயினும்    உலகில்
தீயவர்    வலிமையிற்    சிறந்து    நிற்பதும்
தூயவர்    அவரால்    தொல்லைப்    படுவதும்
நாளும்    காண்கிறோம்    நாமே;    அதனால்
வீழும்    நெறியை    விலக்குதல்    நன்றாம்;
சாதியும்    மதமும்    சார்ந்தோர்,    காதலை
மோதி    அழித்திட    முதிர்ந்த    வலிவுடன்
வருவர்;    அதனால்    காதலை    மறத்தலே
இருவர்    தமக்கும்    ஏற்பதாம்    மேலும்
எழுத்தில்    மட்டுமே    காதல்    இனிக்கும்
உளுத்துப்    போனஇவ்    வுலகில்    காதலில்
வெல்லுதல்    அரிதே    விலகுதல்    நன்று" எனச்
சொல்லிய    தோன்றலின்    சூழலை    உணர்ந்தவள்
ஆதலின்    அரசி    அதிர்ச்சி    யுறாமல்
காதல்    நெஞ்சொடு    கழறினள்    "காதல!
தூயவர்    என்றும்    தொல்லைப்    படுவர்
தீயவர்    வலிமையில்    சிறந்ததால்    என்றனிர்;
வல்லமை    நம்மிடம்    இல்லையென்    றுரைப்பதோ?
கொள்கை    உரமும்    கூட்டுற    வுந்தாம்
அன்பரே !    தீயரை    அழிக்கும்    வலிமையாம்
நண்பரே !    தங்கள்    அன்பினை    நாடி
வரூஉம்    என்னை    வாட்டுதல்    வேண்டாம்
உரமுடன்    நின்று    வாழ்வில்    ஒன்றுவோம்
பக்குவம்    இலாத    பாலியல்    கவர்ச்சியால்
மிக்கவே    உமைநான்    விரும்பிட    வில்லை
நீயிரும்    பெரியார்    நெறியினர்    ஆதலால்
தூய    காதலைத்    துணிந்து    சொல்கிறேன்
கள்ளம்    இலாத    காதலால்    இருவர்தம்
உள்ளம்    இணைந்தபின்    உருப்படி    இலாத
சாதியும்    மதமும்    தடையென    லாமோ?
மோதி    அவற்றை    முறித்திடல்    அன்றோ
அறிவுளோர்க்(கு)    அழகாம்?    ஆதலால்    அன்ப !
உறுதியாய்    நிற்போம்    ஒன்று    படுவோம்"
என்றனள்    அரசி;    எல்லாம்    கேட்டும்
கன்றிய    உள்ளம்    களிப்புறல்    இன்றி
ஞாயிறு    பிரிந்த    தாமரை    போலவும்
தேய்பிறை    மேலும்    தேய்வது    போலவும்
வாடிப்    பிரிந்தனன்;    அவன்பால்
நாடி    நின்றனள்    நன்மை    விரைந்தே"

இயல் - 4 காதல் வாழ்க

'அறிவாம்    அரசியை    அகத்தினில்    இருத்திய
ஒருவன்'    என்று    மாரியை    அரசி
குறித்துச்    சொன்னதேன்?    குறையிலா    மாரியின்
உளத்தில்    அரசிபால்    காதல்    உளதோ?
விளக்கம்    வேண்டின்    வினவுதல்    நன்றெனத்
திருவிழா    நிறைந்தபின்    தீதிலா    மாறனார்
உரிமை    அன்போடு    மாரி    யப்பனைத்
தனியே    அழைத்துத்    "தம்பியே!    அரசிபால்
இனிய    காதல்    இயைந்ததோ?    அவள்தன்
உள்ளமும்    உன்னை    உவந்தே    ஏற்றதோ?
தெள்ளிதின்    எனக்குச்    சொல்லுக"    என்னலும்
திகைத்தனன்    வியந்தனன்    திருமாற    னார்தம்
முகத்தை    நோக்கவும்    முடியா    னாகி
மாரி    யப்பன்;    வணங்கி    உரைத்தனன்
"சீரிய    பெரீயீர் !    செந்தமிழ்த்    தலைவ !
ஆரிது    சொன்னார்?    அறிவர    சியார்தம்
கூரிய    அறிவினைக்    கொள்கைப்    பற்றினை
அறிந்து    மகிழ்வ(து)    அல்லால்    அவரை
நெருங்கிடக்    காதல்    நெஞ்சில்    கொண்டிலேன்
மெய்யிது    மெய்யிது    மேலோர்    நும்பால்
பொய்யுரை    புகலும்    புன்மையன்    அல்லேன்"
என்று    மாரி     யப்பன்    இயம்பலும்
"மன்றில்    அரசி    மொழிந்த    வகையினால்
வினவினேன்    வேறிலை;    விழாவினில்    நின்றன்
இனநலக்    கருத்தெலாம்    இணையி    லாததாம்
எந்நிலை    உறினும்    இந்நிலை    வழாமல்
நின்னைப்    போலும்    நெஞ்சுரம்    கொண்ட
இளையர்    பலரையும்    நின்பால்    ஈர்த்து
வலிமை    சேர்த்துநம்    இயக்கம்    வளர்க்க" என
மாரி    யப்பனை    வாழ்த்திய    மாறனார்
நேரினில்    அரசியை    நெருங்கி,    "அரசியே !
அகத்தினில்    அறிவாம்    அரசியை    இருத்திய
பகுத்திறி    வாளன்    யார்எனப்    பகர்க" என,
நலங்கேழ்    முறுவலும்    நாணமும்    காட்டிப்
பொலந்தொடி    திருத்தியும்    புரிகுழல்    முறுக்கியும்
மகிழ்ச்சியால்    முகத்தில்    மலர்ச்சியைக்    காட்டியும்
அகத்தினுள்    மாரி    யப்பனைத்    துணையென
வரித்துக்    கொண்ட    வகையினை    விளம்பினாள்;
சிரித்துக்    கொண்டே    திருமாற    னார்தாம்
"தவறிலை    அரசியே !    தவறிலை    ஆயினும்
அவன்உனை    விரும்புதல்    அறிந்துகொண்    டனையோ?"   
என்றலும்    அரசி,    "இனும்இலை    ஆயினும்
வென்றிடும்    உறுதி    உண்டு"    என விளம்ப,
மாறனார்    அரசியை    மகிழ்வுடன்    நோக்கிக்
கூறினர்;    "அரசியே !    கொள்கைக்    குன்றென
விளங்கும்    மாரி    யப்பனை    நெருங்கி
உளம்திகழ்    காதல்    அரசிபால்    உண்டோ
என்றேன்;    அவனோ,    'இல்லை    அரசியின்
குன்றாக்    கொள்கைபால்    கொண்ட    பற்றால்
காதல்    இலை'    எனக் கழறினன்;    ஒருபால்
காதல்    தகுமோ?    கைக்கிளை    முறையோ?
எண்ணித்    துணிக"    என்னலும்    அரசி,
"எண்ணித்    துணிந்தே    என்துணை    அவர்என
ஐய !    இயம்பினேன்    அவரை    வெல்வேன்
மெய்யிது    அவரை    வென்றபின்    வாழ்க்கைத்
துணைநல    விழாவும்    தூயவ !    தங்களின்
இணையிலாத்    தலைமையில்    ஏற்புற    நிகழும்"
என்றனள்    அரசி;    மாறனார்
நன்றுஎன    மகிழ்ந்து    வாழ்த்தினர்    நயந்தே.

விடுதலைபுரம் (காப்பியம்) இயல் - 3 தமிழர் திருவிழா

மன்னா               உலகில்             மகளிர்             ஆடவர்
என்னும்             வேற்றுமை     இயற்கை;       அதன்மேல்
ஆணுக்               குயர்வும்          பெண்ணுக்      கிழிவும்
பேணல்              மடமை             பெரியோர்      உடன்படார்
எனும்பே            ரறம்திகழ்         இன்றமிழ்       நாட்டில்               5

மநுவின்             பெயரால்         வந்து               நுழைந்த
வடவா                ரியத்தை,         மயங்கிய      தமிழர்
மடமை               மீதுற                 வணங்கி       ஏற்றனர்;
ஆணுக்               குயர்வும்          பெண்ணுக்   கிழிவும்
பேணல்              அறமெனப்      பேசிய           மநுவின்            10
நெறியில்           ஆடவர்              மகளிர்க்      கிருந்த
உரிமை               பறித்தே            அடிமை         யாக்கினர்;
தந்தைக்              கடிமை               தலைவற்      கடிமை
மைந்தர்க்           கடிமை               என்றவர்க்     குரிமை
மறுக்கப்              பட்டது;  மநுவை  மீறினால்   15
ஒறுக்கப்             பட்டனர்;  ஒருபாற் கோடிக்
கற்பும்                  கைம்மையும்    காரிகை    யர்க்கெலாம்
பொற்பெனச்     சொல்லிப் பொய்ம்மை  நாட்டினர்;
பவள                    வாயினள்  பன்மலர்க்  கொடியனாள்
துவளும்             இடையினள்  தோகை  மயிலனாள் 20
கனியிதழ்           பிறைநுதல்  கயல்விழி  ஆடவர்க்(கு)
இனியவள்          மனைவிளக்(கு)  என்றெலாம் எழுந்த
புனைந்துரை      யாலும்  புகழுரை  யாலும்
நனைந்து             மயங்கி  நலிந்த  மகளிரின்
உரிமை                 மீட்கவும் உயர்வு நல்கவும்  25
அடிமைத்             தளையை  அறுத்துக்  களையவும்
இத்தமிழ்              நாட்டில்  எழுந்தார்   பெரியார்
முத்து                    லட்சுமி  அம்மையும்   முனைந்தார்
புரட்சிக்                கவிஞரும் போர்க்குரல்  எழுப்பினார்
மருட்சி                 நீங்கி  மங்கையர்   எழுந்தனர்  30
நங்கையர்           கூடி நாவலூர்க் கண்ணும்
மங்கையர்          உரிமை மன்றம் கண்டனர்
மன்றத்                 தலைவர் வளர்மதி அம்மையாம்
ஒன்றிச்               செயல்பட உமாஅ  ராணியாம்
உமாஅ                 ராணி பிறமொழி யாதலால்   35
அமைவாய்        தமிழில் அறிவர  சியெனும்
பெயரால்            அறியப் பெற்றவள்; தமிழர்
உயர்வுக்             காக உவப்புடன்  உழைப்பவள்
மங்கையர்         கூடிப்  பொங்கும்  உணர்வுடன்
திங்கள்                இறுதியில், சிறப்புடன்  ஒருநாள்   40
தமிழர்                  திருவிழாக்  காண விழைந்தனர்
அமைவுறத்       திட்டம்  அளித்தனள்  அரசி
விருப்புடன்       அரசி விளம்பிய  தேற்றுச்
சிறப்புரை           யாற்றத்  திருமாற  னாரும்
சீரிய                     தமிழினம்  சிறக்கும்  வழிசொல    45
மாரி                      யப்பனும்   வருதல்  நலமாம்
என்று                   திட்டம் ஏற்புற  இயற்றினர்
மன்றத்                திடலில்  வகுத்த நாளில்
செந்தமிழ்          ஆர்வலர்  திருவிழாக்  காண
வந்து                   கூடினர்;  வளர்மதி  தலைமை 
உரையினை     முடித்தபின் உணர்ச்சியின் வடிவாய்
அரசி                    எழுந்தே அமைவுற மொழிந்தனள்;
"மன்றத்              தலைவர் வளர்மதி தமக்கும்
செந்தமிழ்க்      காவலர்  திருமாற  னார்க்கும்
அறிவாம்          அரசியை  அகத்தில்  இருத்தி   55
உரிமை              வேட்கையும்   உளத்தில்  கொண்டு
சீருடைக்           கொள்கைச் செம்மலாய்த் திகழும்
மாரி                    யப்பர் தமக்கும் பிறர்க்கும்
வணக்கம்        சொல்லிநான்  வடித்த  கவிதையை
எனக்குத்          தெரிந்தவா றியம்புவேன்  கேளீர்",   60
         (வேறு)
  "பெண்ணுக்கு விடுதலை  வேண்டும் - உரிமை
பேணக்  கருதும்  பெரியீர் உணர்க
மண்ணுக்கும் விடுதலை வேண்டும் - தமிழ்
மறவரே எழுக மாண்பயன்  அறிக

ஆரிய வலைவீச்சி னாலே - நம்
அறிவொடு மானமும் பறிபோன(து) அன்று
சீரிய பகுத்தறி வாலே - நமைச்
சேர்ந்த  காரிருள் விலகிடல்  நன்று

சாதியும் மதமும் துறப்போம் - ஆரியச்
சதியினால் நேர்ந்த பழியினைத் துடைப்போம்
தீதிலாப் புதியராய்ப் பிறப்போம் - பெரியார்
தெளிவுடன் காட்டிய வழியினில் நடப்போம்"
           (வேறு)
இன்னவா(று) அரசி இன்றமிழ்க் கவிதை
சொன்னதைத்  தொடர்ந்து  துய தமிழில்
கூரிய அறிவுக் கொள்ளிட  மான
மாரி யப்பன் வந்து முழங்கினன்.
அற்றைச் சிறப்பும் அயலார் விளைத்த  65
இற்றைச் சிறுமையும் எடுத்துரை செய்தபின்,
"வீழ்ந்த தமிழினம் விழிப்புற் றெழுக
சூழ்ந்த பகையைத் தூளதூ ளாக்குக
அருமைத் தமிழரே அறிவைப் பெருக்குக
உரிமைப் போரை உடனே தொடங்குக     70
ஆற்றல் மறவரே அணிவக்த்  திடுக
வேற்றுமை நமக்குள் வேண்டாம் விலக்குக
ஓரினம் நாமென உணர்க" என உணர்ச்சியால்
மாரி யப்பன்  வகுத்துரை செய்தபின்,
தொன்மைச் சிறப்பைத் தொலைத்து விட்டு   75
நன்மை தீமை நாடி நன்மையைப்
போற்றத் தவறிப் பொல்லாப் பகையின்
ஆற்றற்(கு)  அழிந்தும் அறியா மையெனும்
தீமையில் வீழ்ந்தும்  திகைத்துத் திணறி
ஊமையர் ஆகி ஒடுங்கிய தமிழரின்   80
மடமை நீக்கும் மாண்புறு செயலைக்
கடமையாக்  கொண்டு காவல் செய்த
பெரியார் நெறியில் பிறழாச் சிறப்புடைத்
திருமாறனார்தாம்  சிறப்புரை நிகழ்த்தினர்;
"நான்தமிழ் இனத்தன் நாமெலாம் ஓரினம்  85
தேன்தமிழ் நம்மொழி எனுஞ்சிறப் போடு
வாழும் நம்மிடை  மாற்றார்  வகுத்த
பாழும் சாதிப் பகுப்பெலாம் எதற்காம்?
தகுதிக் குறைவால் தாழ்ந்தவன் என்றும்
மிகுதியால் உயர்ந்தவன் என்றும் விளம்பல்  90
நேரிதே  ஆயினும், நேர்ந்த  பிறப்பே
சீரிய தகுதியாம்  என்றும் மேல்கீழ்ப்
பிறப்பும் முன்னைப் பிறப்பின்  ஊழ்வினைத்
திறத்தால்  நிகழும் என்றும்  கிளத்தல்
ஆரியர்  என்னும்  பூரியர் கருத்தே;        95
கூரறிவு உடையநம்  கொளகைக்  கேற்பதோ?
எண்ணுக  தோழரே? தோழியீர் !  எண்ணுக
உண்மையில்  விடுதலை  உற்றதோ நம்மை?
அருமைப் பெரியீர் ! அறிகநம் தமிழினப்
பெருமை;   என்றும்  பேணுக இனநலம்   100
சென்ற  காலம்  சிறப்பு மிக்கதாம்
இன்று நம்மை இழிவு சூழ்ந்த்தே
ஓங்கி  யிருந்த(து)  உரிமை அந்நாள்
ஏங்கி   நிற்கிறோம்  எதிர்பார்த்(து)  இந்நாள்
இந்நிலை  நம்நிலை  என்பதை  உணர்ந்தவர் 105
நம்மிடைச் சிலரே;  நம்மூட் பலர்தாம்
உண்டு களிப்பதும் உடுத்துக் களிப்பதும்
கண்டு களிப்பதும் காட்சி யளிப்பதும்
மட்டுமே  வாழ்வாய்  மானம்  இழந்து
மொட்டை  மரமெனப்  பட்டழி  கின்றனர்   110
ஆட்சி  இழந்தோம்  அடிமைப் பட்டோம்
மாட்சி  இழந்தோம்  மானமும்  இழந்தோம்
ஓரின  மாயநாம் கூறு பட்டு
வேறுவே  றாக  வெண்திரை  நடிகர்தம்
பின்னே  சென்று  பெரும்பிழை  செய்வதும்  115
இன்னுயிர்  அவர்க்கே ஈவோம்  என்பதும்
நேரிதோ?  சொல்வீர் !  நிகழ்கா  லத்தில்
சீரினை  இழந்து  செந்தமி ழன்னை
வடிக்கும்  கண்ணீர்   துடைக்கவேண்  டாமோ?
துடிக்கும் ஏழையர்  துயரினைப் போக்க  120
ஏற்ற   வழிகளில்  இயங்கவேண்  டாமோ?
மாற்றம்  இங்கு  மலர  வேண்டாமோ?
மகளிரை ஆடவர்  வருத்தி  அடக்குதல்
தகவோ?             உரிமை                தரவேண்        டாமோ?
எண்ணுக!         இன்றே                 அறிவியக்      கத்தில்    125
ஒன்றுக!            பகையை             வென்றிடு      வோம்" எனச்
சீர்சால்              மாறனார்              தெளிவரை    நிகழ்த்தப்
போர்செய        விரும்பும்             பொங்கிய      உணர்வுடன்
சென்றனர்       தமிழர்                    திருவிழா
நன்றே              நிறைந்தது           நாவலூர்        அகத்தென்.  130

Tuesday, April 6, 2010

விடுதலைபுரம் (காப்பியம்) இயல் - 2 நாவலூர்க் காவலன்

வடபுலத் திருந்தும் வடமேற் கிருந்தும்
படையின்றி நுழைந்த பகையெனப் பலவாம்
நெறிகள் மதங்களாய் வந்து நிலைத்தன;
குறிகள் பலவும் கூறப் பட்டன;
பரமன் என்றும் பாவி என்றும் 5
நரகம் என்றும் சொர்க்கம் என்றும்
செல்வர் வாழலும் இல்லார் வாடலும்
தொல்லை வினைகளின் தொடர்ச்சியால் என்றும்
துறப்பால் இறையடி தொடலா மென்றும்
பிறப்பால் மேல்கீழ் பேசலாம் என்றும் 10
வருணம் நான்கு வகுத்தனன் பரமன்
ஒருநான் குள்ளும் உயர்ந்தோர் சிலராம்
ஏனையோ ருள்ளும் இழிந்த சூத்திரர்
ஆனவர் தமக்கும் கீழென அய்ந்தாம்
சாதியும் உண்டு தாழ்ந்தவர் அவர்தாம் 15
வீதியில் நடக்கவும் விதியிலை அதனால்
ஊரின் புறத்தே ஒதுக்கப் பட்ட
சேரியில் வாழலாம் தீயர் அவரைத்
தொட்டால் தீட்டாம் அவர்தம் நிழல்மேல்
பட்டால் தீட்டாம் பார்த்தால் தீட்டெனத் 20
தாழ்த்தப் பட்டனர் தமிழர்; அஃதூஉம்
பாழ்த்த ஊழ்வினைப் பயனெனச் சமயக்
களிப்பில் திளைத்துக் கருத்தினை இழந்து
விழிக்க மறந்து மீளாத் துயிலின்
பிடியில் விழுந்து பெருமை இழந்தனர்; 25
அடிமையாய்ப் பிறந்த(து) ஆண்டவன் செயலென
நம்பினர் தமிழர்; நரிகள் மகிழ்ந்தன
தம்பிழை அறியாத் தமிழர் நலம்பெறத்
தாயென நெஞ்சில் தண்ணருள் கொண்ட
வாய்மைப் பெரியார் வந்து தோன்றி 30
அரியென முழங்கி நரிகளை வெருட்டி
அறிவெனும் ஒளியை அகவிருள் நீங்கப்
பாய்ச்சித் தாழ்த்தப் பட்டவர் துயிலை
நீக்கினர்; அதனால் நிலைமை உணர்ந்து
சேரியில் வாழ்ந்தவர் சிலிர்த்தே எழுந்தனர் 35
பூரியர் திகைத்தனர்; பொய்களை மீண்டும்
விதைத்தனர்; அவைதாம் விளைந்தன; அதனால்
சிதைந்த தமிழர் செம்மை மறந்தே
ஒருவரை யொருவர் தாழ்த்தலும் வீழ்த்தலும்
பெருநிகழ் வாகிய பீழைசேர் வேளையில் 40
தமிழீ ழத்தின் தம்பியைப் போல
எமையார் அடிமைகள் என்றவர்? என்று
சீறிப் பாயும் வீறுடன் நாவலூர்ச்
சேரியில் தோன்றிய மாரி யப்பன்,
பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவன் 45
சொல்வலான் அச்சம் துறந்தவன் தமிழர்
பெருமையும் பீடும் சிறுமை யுற்ற
வரலா றறிந்த மாண்பின்ன் தன்போல்
இளையர் பலர்க்கும் தலைவனாய்த் தமிழில்
புலமையும் கொண்டு புகழால் நிமிர்ந்து 50
நாவ லூரில் நலிந்தவர்
காவலன் ஆயினன் கடமையிற் சிறந்தென்.
......தொடரும்

Monday, April 5, 2010

விடுதலைபுரம் (காப்பியம்) இயல் - 1 சாதி மதத் தளைகள்

ஆறாம்            அறிவை           அறியா           நிலையில்
பாரில்              பற்பல                பாங்கினில்      மாந்தர்
விலங்குக       ளென்றே          விளங்கிய        காலை
இலங்குபே      ரறிவுடன்        ஈடிலாத்           தமிழைப்
பேசியும்          எழுதியும்          பெரும்புகழ்     ஈட்டியும்          5

மாசிலா        நாக                   ரிகத்தை           வளர்த்தும்
கலங்கள்      ஓட்டிக்               கடல்பல          தாண்டி
நிலம்பல     கண்டு                 நீள்புகழ்          நிறுவியும்
பாரினர்       ஏத்தும்               பல்புகழ்          தாங்கிச்
சீருடன்        திகழ்ந்த             செந்தமிழ்        மறவர்,           10
தமிழறம்      மறந்து               தகுதியில்         லாத
சமய நெறிகளைச் சார்ந்து வீழ்ந்ததால்
அயலார் பலர்க்கும் அடிமைப் பட்டுச்
செயல்வகை அறியாச் சிறுமையில் உழலும்
இந்நாள் தமிழக எல்லையுள் இன்றும் 15
கண்முன் பழைமைச் சிறப்புக் காட்டி
ஓங்கித் திகழும் உயர்மலைத் தொடரின்
பாங்கினில் இயற்கை படிந்த தென்னக்
குறும்பலா தேக்குக் கோங்கம் வேங்கை
நறுமலர்ச் சண்பகம் நரந்தம் நாகம் 20
செருந்தி முருக்குத் தேயா நெல்லி
குருந்தம் தணக்குக் கூவிளம் கமுகு
தூங்கும் பனிநீர் தாங்கும் மூங்கில்
ஓங்குயர் இலவம் ஒண்செங் காந்தள்
கரந்தை வெட்சி காஞ்சி வஞ்சி 25
மருந்தெனும் வேம்பு மருதம் வாகை
கருந்துணர் மிளகு தேயிலை குறிஞ்சி
அரும்பொருள் ஏலம் ஆரம் அகிலொடு
பொன்போற் பூக்கும் கொன்றையும் பொலிந்து
பன்மரக் காவெனப் பரந்த பொதிகை 30
மலையில், யானை மான்மிளா குரங்கொடு
புலியும் சிறுத்தையும் நிலைகொண்(டு) உலவும்.
மான்கள் மருளும் மறிகள் உகளும்
ஏன்என மந்திகள் எதிர்நின்று வினவும்;
உயர்வா னிடைமுகில் ஊர்வலம் செல்லும் 35
மயில்கள் கண்டு மகிந்தே ஆடும்;
குன்றின் உச்சியில் குளிர்மரம் சார்ந்த
கொண்டல் மகிழ்ந்து கொட்டிய மழைநீர்
பாறைக ளிடையே பதுங்கிப் பரந்துநல்
ஆறாய் ஓடி அருவியாய் வீழும்; 40
களிறும் பிடியும் கன்றுடன் ஓடைச்
சரிவில் நின்று தண்ணீர் அருந்தும்;
கிளிகள் பறந்து கிக்கிக் கீயென
மழலை பேசி மயக்கஞ் செய்யும்;
சேரன் கடல்நீர் காரென எழுந்து 45
தூறலாய் மலையின் சாரலில் வீழும்;
துன்பம் மாறி இன்பமும் மீண்டும்
துன்பமும் இன்பமும் தொடரும் என்பதைச்
சுள்ளெனும் வெயிலும் தொடரும் தூறலும்
தெள்ளென விளக்கும் திறத்தினை விரும்பியும் 50
நறிய தென்றலை நாடியும் தேடியும்
வறியரும் செல்வரும் வந்து, தங்கி
அருவியில் ஆடி அகமெலாம் குளிரப்
பெருமகிழ் வுடனே பெயர்ந்து மீண்டும்
மீண்டும் பலமுறை விருப்புடன் வருதற்(கு) 55
ஏன்ற சிறப்பினால் இணையிலாப் பொதிகைக்
குன்றில் பிறந்த குணபால் ஓடி
நின்று குளங்களை நிறைக்கும் நாவல்
ஆற்றங் கரையில் அமைந்த சிற்றூர்;
மேற்கே மலையும் கானும் மேவிட 60
ஏனையப் பக்கம் எங்கணும் உயர்ந்து
வானை அளாவும் வாழை கரும்பொடு
நெல்லும் விளைந்து நீள்பயன் தரூஉம்
நல்லூர் ஆகிய நாவலூர் ஆங்கண்.
நிலக்கிழார் சிலர்பலர் நிலம்இலார் எனவும் 65
உலப்பிலாச் செல்வம் உடையவர் சிலர்பலர்
உழைக்க            உடலும் உள்ளமும் மட்டுமே
பிழைக்க            வழியெனப் பெற்றவர் எனவும்
உடையவர்        ஊரில் உயர்ந்தவர் இல்லார்
கடையர்            எனஇரு பாலராய் உடைமைத் 70
திறத்தால்           பிரிந்த பின்னரும் இயற்கைப்
பிறப்பால்         ஆண்டவன் பெயரால் பிரிந்த
சாதிகள்             பலவும் சாத்திரம் பலவும்
சாதிக்(கு)          ஒன்றென நீதிகள் பலவும்
நின்று               நிலைத்தன அதனால் 75
பொன்றாத்       தொல்லைகள் புகுந்தன   ஆங்கே.
                                                                   ......தொடரும்

விடுதலைபுரம் (காப்பியம்) - நூன்முகம்

உரிமை           காத்தும்               உயர்அறம்      பேணியும்
அறிவு            நலத்தால்            ஆக்கம்            சேர்த்தும்
யாதுமூர்         யாவரும்            கேளிர்             என்னும்
தீதிலாக்          கொள்கை           தேர்ந்து            தெளிந்தும்
எம்மொழி      யகத்தும்              இல்லா            தாகிய                5

செம்மைப்      பொருட்குச்         சீரிய                இலக்கணம்
அகமும்         புறமும்              ஆயிரு              திறத்தால்
வகைபட        வரைந்து            வான்புகழ்         ஈட்டியும்
வாழ்ந்த          தமிழகம்           ஆரியம்             வந்து
சூழ்ந்து           பற்றித்              தொடர்ந்து         நின்றதால்         10

தன்னிலை       யழிந்து             தாழ்வுற்று         நின்றதை
எண்ணி          வருந்தி             இருந்தே           னாக,
ஆரியச்           சூழ்ச்சியை       அதனால்           நேர்ந்த
பாரிய            வீழ்ச்சியைப்      பன்னலம்         இழந்ததை
அறியாத்         தமிழர்க்(கு)       அறிவும்           மானமும்           15

உரிய             வழியில்            உணர்த்தித்        தமிழர்
நலம்பெறப்    பெரியார்           நாளெல்லாம்     உழைத்ததால்
வலம்வரும்    ஆரியம்            மாய்த்தால்        மட்டுமே
வெல்புக        ழோடு               விளங்கலாம்     தீதிலா
நல்லறம்        மீண்டும்             நாட்டலாம்       என்பதை             20

ஏற்றுத்           தமிழர்               எழுந்த             தாகவும்
போற்றத்        தகுவதோர்         பொதுமை        உலகைப்
படைத்த         தாகவும்             பாழ்த்த           ஆரியம்
உடைத்த        தாகவும்              உறங்கா         வேளையில்
கனவு            கண்டொரு          காப்பிய         மாக்கினேன்          25

எனையறிந்    தோர்தாம்            எளியேன்       தகுதி
குறைந்தவன்   என்பதை            மறந்து           கருப்பொருள்
சிறந்த            தென்னும்           தெளிவுடன்    ஏற்றுப்
போற்றிடப்     பணிந்து             வேண்டுவன்
ஏற்றம்            எனக்கிலை         இனத்திற்        காமே.                  30


                                                                              ......தொடரும்