மாலை வேளையில் நாள்தொறும் நாவலூர்
நூலகம் சென்று நாளிதழ் பார்த்தபின்
கடியத்தகுவனகடிந்துகருத்தின்ல்
படியத் தக்க பயன்தரு நூல்களை
வேண்டிப் பெற்று வீடு திரும்பி
மூண்ட விருப்புடன் நூலகளில் மூழ்குதல்
மாரி யப்பனின் வழக்கமென்(று) அறிந்தவள்
சீரிய அரசி ஆதலால் மாரியின்
அகத்தினில் நுழையும் அழுத்த மோடுநூல்
அகத்தினுள் நுழைந்தவள், அவன்எதிர் அமர்ந்தனள்
கதிரவன் வரவைக் கருதித் தாமரை
எதிர்பார்த் தேங்கி இருத்தல் போல
மாரி யப்பனின் மலர்விழி வீச்சை
நேரிட விரும்பி நெஞ்சத் துடிப்புடன்
இருந்தனள்; செய்தி இதழ்களைப் படித்தபின்
விரிந்த விழிகளால் வியப்புடன் அரசியைக்
கண்டனன் மாரி; காதல் குறித்துத்
தண்டமிழ் மாறனார் தன்னை வினவிய
திறத்தினை எண்ணித் திகைத்து நோக்க,
அரசியாள் நகைமுகம் அவற்குக் காட்டி
வணக்கம் சொன்னாள்; மாரி யப்பனும்
வணக்கம் சொல்லி, மாற்றிடம் நாடி
அகன்றனன்; அரசியும் அவன்பின் தொடர்ந்து
நகர்ந்தனள்; நின்று நடந்தனன்; அவள்தான்
அன்பரே ! அன்பரே ! என்றனள்; அவனும்
என்னையோ? என்றனன். எதிரில் வந்தவள்
"நேற்று மாறனார் நேரில் தங்களைக்
கேட்டதாய் அறிந்தேன் அவர்பாற் கிளந்ததென்?
சொல்லுக" என்றனள். "தூயவர் பால்நான்
உள்ளதைச் சொன்னேன்; உளத்தில் காதல்
இல்லை என்றேன்; இங்கும் நேரில்
சொல்கிறேன் நுந்தம் தொண்டுளம் கண்டுநான்
களிப்ப தல்லால் காதல் இல்லை
ஒளிக்க வில்லை உண்மை" என்ற
மறுப்புரை கேட்டும் விருப்பம் அவன்பால்
இருப்பதை உணர்த்தும் எண்ணம் எழுந்ததால்
"அன்பரே ! தங்களை அறிவேன்; மாறனார்
என்னிலை வினவினர் இடர்ப்பா(டு) இன்றியே
உரைத்தேன் அவர்பால் உமையென் துணைவராய்
வரித்த உண்மையை: மகிழ்ந்து வாழ்த்தினர்"
என்றனள்: மாரியாம் ஏந்தல் நெஞ்சகம்
குன்றிய நிலையில் கூறின்ன்; "அரசி ! நம்
கொள்கை நன்றே குறிக்கோள் நன்றே
உள்ளமும் நன்றே ஆயினும் உலகில்
தீயவர் வலிமையிற் சிறந்து நிற்பதும்
தூயவர் அவரால் தொல்லைப் படுவதும்
நாளும் காண்கிறோம் நாமே; அதனால்
வீழும் நெறியை விலக்குதல் நன்றாம்;
சாதியும் மதமும் சார்ந்தோர், காதலை
மோதி அழித்திட முதிர்ந்த வலிவுடன்
வருவர்; அதனால் காதலை மறத்தலே
இருவர் தமக்கும் ஏற்பதாம் மேலும்
எழுத்தில் மட்டுமே காதல் இனிக்கும்
உளுத்துப் போனஇவ் வுலகில் காதலில்
வெல்லுதல் அரிதே விலகுதல் நன்று" எனச்
சொல்லிய தோன்றலின் சூழலை உணர்ந்தவள்
ஆதலின் அரசி அதிர்ச்சி யுறாமல்
காதல் நெஞ்சொடு கழறினள் "காதல!
தூயவர் என்றும் தொல்லைப் படுவர்
தீயவர் வலிமையில் சிறந்ததால் என்றனிர்;
வல்லமை நம்மிடம் இல்லையென் றுரைப்பதோ?
கொள்கை உரமும் கூட்டுற வுந்தாம்
அன்பரே ! தீயரை அழிக்கும் வலிமையாம்
நண்பரே ! தங்கள் அன்பினை நாடி
வரூஉம் என்னை வாட்டுதல் வேண்டாம்
உரமுடன் நின்று வாழ்வில் ஒன்றுவோம்
பக்குவம் இலாத பாலியல் கவர்ச்சியால்
மிக்கவே உமைநான் விரும்பிட வில்லை
நீயிரும் பெரியார் நெறியினர் ஆதலால்
தூய காதலைத் துணிந்து சொல்கிறேன்
கள்ளம் இலாத காதலால் இருவர்தம்
உள்ளம் இணைந்தபின் உருப்படி இலாத
சாதியும் மதமும் தடையென லாமோ?
மோதி அவற்றை முறித்திடல் அன்றோ
அறிவுளோர்க்(கு) அழகாம்? ஆதலால் அன்ப !
உறுதியாய் நிற்போம் ஒன்று படுவோம்"
என்றனள் அரசி; எல்லாம் கேட்டும்
கன்றிய உள்ளம் களிப்புறல் இன்றி
ஞாயிறு பிரிந்த தாமரை போலவும்
தேய்பிறை மேலும் தேய்வது போலவும்
வாடிப் பிரிந்தனன்; அவன்பால்
நாடி நின்றனள் நன்மை விரைந்தே"
Tuesday, April 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment