வடபுலத் திருந்தும் வடமேற் கிருந்தும்
படையின்றி நுழைந்த பகையெனப் பலவாம்
நெறிகள் மதங்களாய் வந்து நிலைத்தன;
குறிகள் பலவும் கூறப் பட்டன;
பரமன் என்றும் பாவி என்றும் 5
நரகம் என்றும் சொர்க்கம் என்றும்
செல்வர் வாழலும் இல்லார் வாடலும்
தொல்லை வினைகளின் தொடர்ச்சியால் என்றும்
துறப்பால் இறையடி தொடலா மென்றும்
பிறப்பால் மேல்கீழ் பேசலாம் என்றும் 10
வருணம் நான்கு வகுத்தனன் பரமன்
ஒருநான் குள்ளும் உயர்ந்தோர் சிலராம்
ஏனையோ ருள்ளும் இழிந்த சூத்திரர்
ஆனவர் தமக்கும் கீழென அய்ந்தாம்
சாதியும் உண்டு தாழ்ந்தவர் அவர்தாம் 15
வீதியில் நடக்கவும் விதியிலை அதனால்
ஊரின் புறத்தே ஒதுக்கப் பட்ட
சேரியில் வாழலாம் தீயர் அவரைத்
தொட்டால் தீட்டாம் அவர்தம் நிழல்மேல்
பட்டால் தீட்டாம் பார்த்தால் தீட்டெனத் 20
தாழ்த்தப் பட்டனர் தமிழர்; அஃதூஉம்
பாழ்த்த ஊழ்வினைப் பயனெனச் சமயக்
களிப்பில் திளைத்துக் கருத்தினை இழந்து
விழிக்க மறந்து மீளாத் துயிலின்
பிடியில் விழுந்து பெருமை இழந்தனர்; 25
அடிமையாய்ப் பிறந்த(து) ஆண்டவன் செயலென
நம்பினர் தமிழர்; நரிகள் மகிழ்ந்தன
தம்பிழை அறியாத் தமிழர் நலம்பெறத்
தாயென நெஞ்சில் தண்ணருள் கொண்ட
வாய்மைப் பெரியார் வந்து தோன்றி 30
அரியென முழங்கி நரிகளை வெருட்டி
அறிவெனும் ஒளியை அகவிருள் நீங்கப்
பாய்ச்சித் தாழ்த்தப் பட்டவர் துயிலை
நீக்கினர்; அதனால் நிலைமை உணர்ந்து
சேரியில் வாழ்ந்தவர் சிலிர்த்தே எழுந்தனர் 35
பூரியர் திகைத்தனர்; பொய்களை மீண்டும்
விதைத்தனர்; அவைதாம் விளைந்தன; அதனால்
சிதைந்த தமிழர் செம்மை மறந்தே
ஒருவரை யொருவர் தாழ்த்தலும் வீழ்த்தலும்
பெருநிகழ் வாகிய பீழைசேர் வேளையில் 40
தமிழீ ழத்தின் தம்பியைப் போல
எமையார் அடிமைகள் என்றவர்? என்று
சீறிப் பாயும் வீறுடன் நாவலூர்ச்
சேரியில் தோன்றிய மாரி யப்பன்,
பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவன் 45
சொல்வலான் அச்சம் துறந்தவன் தமிழர்
பெருமையும் பீடும் சிறுமை யுற்ற
வரலா றறிந்த மாண்பின்ன் தன்போல்
இளையர் பலர்க்கும் தலைவனாய்த் தமிழில்
புலமையும் கொண்டு புகழால் நிமிர்ந்து 50
நாவ லூரில் நலிந்தவர்
காவலன் ஆயினன் கடமையிற் சிறந்தென்.
......தொடரும்
Tuesday, April 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment