ஆறாம் அறிவை அறியா நிலையில்
பாரில் பற்பல பாங்கினில் மாந்தர்
விலங்குக ளென்றே விளங்கிய காலை
இலங்குபே ரறிவுடன் ஈடிலாத் தமிழைப்
பேசியும் எழுதியும் பெரும்புகழ் ஈட்டியும் 5
மாசிலா நாக ரிகத்தை வளர்த்தும்
கலங்கள் ஓட்டிக் கடல்பல தாண்டி
நிலம்பல கண்டு நீள்புகழ் நிறுவியும்
பாரினர் ஏத்தும் பல்புகழ் தாங்கிச்
சீருடன் திகழ்ந்த செந்தமிழ் மறவர், 10
தமிழறம் மறந்து தகுதியில் லாத
சமய நெறிகளைச் சார்ந்து வீழ்ந்ததால்
அயலார் பலர்க்கும் அடிமைப் பட்டுச்
செயல்வகை அறியாச் சிறுமையில் உழலும்
இந்நாள் தமிழக எல்லையுள் இன்றும் 15
கண்முன் பழைமைச் சிறப்புக் காட்டி
ஓங்கித் திகழும் உயர்மலைத் தொடரின்
பாங்கினில் இயற்கை படிந்த தென்னக்
குறும்பலா தேக்குக் கோங்கம் வேங்கை
நறுமலர்ச் சண்பகம் நரந்தம் நாகம் 20
செருந்தி முருக்குத் தேயா நெல்லி
குருந்தம் தணக்குக் கூவிளம் கமுகு
தூங்கும் பனிநீர் தாங்கும் மூங்கில்
ஓங்குயர் இலவம் ஒண்செங் காந்தள்
கரந்தை வெட்சி காஞ்சி வஞ்சி 25
மருந்தெனும் வேம்பு மருதம் வாகை
கருந்துணர் மிளகு தேயிலை குறிஞ்சி
அரும்பொருள் ஏலம் ஆரம் அகிலொடு
பொன்போற் பூக்கும் கொன்றையும் பொலிந்து
பன்மரக் காவெனப் பரந்த பொதிகை 30
மலையில், யானை மான்மிளா குரங்கொடு
புலியும் சிறுத்தையும் நிலைகொண்(டு) உலவும்.
மான்கள் மருளும் மறிகள் உகளும்
ஏன்என மந்திகள் எதிர்நின்று வினவும்;
உயர்வா னிடைமுகில் ஊர்வலம் செல்லும் 35
மயில்கள் கண்டு மகிந்தே ஆடும்;
குன்றின் உச்சியில் குளிர்மரம் சார்ந்த
கொண்டல் மகிழ்ந்து கொட்டிய மழைநீர்
பாறைக ளிடையே பதுங்கிப் பரந்துநல்
ஆறாய் ஓடி அருவியாய் வீழும்; 40
களிறும் பிடியும் கன்றுடன் ஓடைச்
சரிவில் நின்று தண்ணீர் அருந்தும்;
கிளிகள் பறந்து கிக்கிக் கீயென
மழலை பேசி மயக்கஞ் செய்யும்;
சேரன் கடல்நீர் காரென எழுந்து 45
தூறலாய் மலையின் சாரலில் வீழும்;
துன்பம் மாறி இன்பமும் மீண்டும்
துன்பமும் இன்பமும் தொடரும் என்பதைச்
சுள்ளெனும் வெயிலும் தொடரும் தூறலும்
தெள்ளென விளக்கும் திறத்தினை விரும்பியும் 50
நறிய தென்றலை நாடியும் தேடியும்
வறியரும் செல்வரும் வந்து, தங்கி
அருவியில் ஆடி அகமெலாம் குளிரப்
பெருமகிழ் வுடனே பெயர்ந்து மீண்டும்
மீண்டும் பலமுறை விருப்புடன் வருதற்(கு) 55
ஏன்ற சிறப்பினால் இணையிலாப் பொதிகைக்
குன்றில் பிறந்த குணபால் ஓடி
நின்று குளங்களை நிறைக்கும் நாவல்
ஆற்றங் கரையில் அமைந்த சிற்றூர்;
மேற்கே மலையும் கானும் மேவிட 60
ஏனையப் பக்கம் எங்கணும் உயர்ந்து
வானை அளாவும் வாழை கரும்பொடு
நெல்லும் விளைந்து நீள்பயன் தரூஉம்
நல்லூர் ஆகிய நாவலூர் ஆங்கண்.
நிலக்கிழார் சிலர்பலர் நிலம்இலார் எனவும் 65
உலப்பிலாச் செல்வம் உடையவர் சிலர்பலர்
உழைக்க உடலும் உள்ளமும் மட்டுமே
பிழைக்க வழியெனப் பெற்றவர் எனவும்
உடையவர் ஊரில் உயர்ந்தவர் இல்லார்
கடையர் எனஇரு பாலராய் உடைமைத் 70
திறத்தால் பிரிந்த பின்னரும் இயற்கைப்
பிறப்பால் ஆண்டவன் பெயரால் பிரிந்த
சாதிகள் பலவும் சாத்திரம் பலவும்
சாதிக்(கு) ஒன்றென நீதிகள் பலவும்
நின்று நிலைத்தன அதனால் 75
பொன்றாத் தொல்லைகள் புகுந்தன ஆங்கே.
......தொடரும்
Monday, April 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment