உரிமை காத்தும் உயர்அறம் பேணியும்
அறிவு நலத்தால் ஆக்கம் சேர்த்தும்
யாதுமூர் யாவரும் கேளிர் என்னும்
தீதிலாக் கொள்கை தேர்ந்து தெளிந்தும்
எம்மொழி யகத்தும் இல்லா தாகிய 5
செம்மைப் பொருட்குச் சீரிய இலக்கணம்
அகமும் புறமும் ஆயிரு திறத்தால்
வகைபட வரைந்து வான்புகழ் ஈட்டியும்
வாழ்ந்த தமிழகம் ஆரியம் வந்து
சூழ்ந்து பற்றித் தொடர்ந்து நின்றதால் 10
தன்னிலை யழிந்து தாழ்வுற்று நின்றதை
எண்ணி வருந்தி இருந்தே னாக,
ஆரியச் சூழ்ச்சியை அதனால் நேர்ந்த
பாரிய வீழ்ச்சியைப் பன்னலம் இழந்ததை
அறியாத் தமிழர்க்(கு) அறிவும் மானமும் 15
உரிய வழியில் உணர்த்தித் தமிழர்
நலம்பெறப் பெரியார் நாளெல்லாம் உழைத்ததால்
வலம்வரும் ஆரியம் மாய்த்தால் மட்டுமே
வெல்புக ழோடு விளங்கலாம் தீதிலா
நல்லறம் மீண்டும் நாட்டலாம் என்பதை 20
ஏற்றுத் தமிழர் எழுந்த தாகவும்
போற்றத் தகுவதோர் பொதுமை உலகைப்
படைத்த தாகவும் பாழ்த்த ஆரியம்
உடைத்த தாகவும் உறங்கா வேளையில்
கனவு கண்டொரு காப்பிய மாக்கினேன் 25
எனையறிந் தோர்தாம் எளியேன் தகுதி
குறைந்தவன் என்பதை மறந்து கருப்பொருள்
சிறந்த தென்னும் தெளிவுடன் ஏற்றுப்
போற்றிடப் பணிந்து வேண்டுவன்
ஏற்றம் எனக்கிலை இனத்திற் காமே. 30
......தொடரும்
Monday, April 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment