'அறிவாம் அரசியை அகத்தினில் இருத்திய
ஒருவன்' என்று மாரியை அரசி
குறித்துச் சொன்னதேன்? குறையிலா மாரியின்
உளத்தில் அரசிபால் காதல் உளதோ?
விளக்கம் வேண்டின் வினவுதல் நன்றெனத்
திருவிழா நிறைந்தபின் தீதிலா மாறனார்
உரிமை அன்போடு மாரி யப்பனைத்
தனியே அழைத்துத் "தம்பியே! அரசிபால்
இனிய காதல் இயைந்ததோ? அவள்தன்
உள்ளமும் உன்னை உவந்தே ஏற்றதோ?
தெள்ளிதின் எனக்குச் சொல்லுக" என்னலும்
திகைத்தனன் வியந்தனன் திருமாற னார்தம்
முகத்தை நோக்கவும் முடியா னாகி
மாரி யப்பன்; வணங்கி உரைத்தனன்
"சீரிய பெரீயீர் ! செந்தமிழ்த் தலைவ !
ஆரிது சொன்னார்? அறிவர சியார்தம்
கூரிய அறிவினைக் கொள்கைப் பற்றினை
அறிந்து மகிழ்வ(து) அல்லால் அவரை
நெருங்கிடக் காதல் நெஞ்சில் கொண்டிலேன்
மெய்யிது மெய்யிது மேலோர் நும்பால்
பொய்யுரை புகலும் புன்மையன் அல்லேன்"
என்று மாரி யப்பன் இயம்பலும்
"மன்றில் அரசி மொழிந்த வகையினால்
வினவினேன் வேறிலை; விழாவினில் நின்றன்
இனநலக் கருத்தெலாம் இணையி லாததாம்
எந்நிலை உறினும் இந்நிலை வழாமல்
நின்னைப் போலும் நெஞ்சுரம் கொண்ட
இளையர் பலரையும் நின்பால் ஈர்த்து
வலிமை சேர்த்துநம் இயக்கம் வளர்க்க" என
மாரி யப்பனை வாழ்த்திய மாறனார்
நேரினில் அரசியை நெருங்கி, "அரசியே !
அகத்தினில் அறிவாம் அரசியை இருத்திய
பகுத்திறி வாளன் யார்எனப் பகர்க" என,
நலங்கேழ் முறுவலும் நாணமும் காட்டிப்
பொலந்தொடி திருத்தியும் புரிகுழல் முறுக்கியும்
மகிழ்ச்சியால் முகத்தில் மலர்ச்சியைக் காட்டியும்
அகத்தினுள் மாரி யப்பனைத் துணையென
வரித்துக் கொண்ட வகையினை விளம்பினாள்;
சிரித்துக் கொண்டே திருமாற னார்தாம்
"தவறிலை அரசியே ! தவறிலை ஆயினும்
அவன்உனை விரும்புதல் அறிந்துகொண் டனையோ?"
என்றலும் அரசி, "இனும்இலை ஆயினும்
வென்றிடும் உறுதி உண்டு" என விளம்ப,
மாறனார் அரசியை மகிழ்வுடன் நோக்கிக்
கூறினர்; "அரசியே ! கொள்கைக் குன்றென
விளங்கும் மாரி யப்பனை நெருங்கி
உளம்திகழ் காதல் அரசிபால் உண்டோ
என்றேன்; அவனோ, 'இல்லை அரசியின்
குன்றாக் கொள்கைபால் கொண்ட பற்றால்
காதல் இலை' எனக் கழறினன்; ஒருபால்
காதல் தகுமோ? கைக்கிளை முறையோ?
எண்ணித் துணிக" என்னலும் அரசி,
"எண்ணித் துணிந்தே என்துணை அவர்என
ஐய ! இயம்பினேன் அவரை வெல்வேன்
மெய்யிது அவரை வென்றபின் வாழ்க்கைத்
துணைநல விழாவும் தூயவ ! தங்களின்
இணையிலாத் தலைமையில் ஏற்புற நிகழும்"
என்றனள் அரசி; மாறனார்
நன்றுஎன மகிழ்ந்து வாழ்த்தினர் நயந்தே.
Tuesday, April 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment