வாழ்வாங்கு வாழ்ந்த வளர்மதி
கவிந்த காரிருள் கடுகி ஓடிடச்
சிவந்துகீழ் வானில் செங்கதிர் பரப்பி
இளங்கதிர் மண்டிலம் எழுந்து பகல்செய
வளங்கெழு நாவலூர் மலர்ந்தது; நாளும்
நல்லதே செய்யும் ஞாயிறு கண்டு 5
புள்ளினம் ஆர்த்து நல்வர(வு) இயம்பின
கழனியை நோக்கிக் கடமை மறவா
உழவர், மாடுகள் ஓட்டிச் சென்றனர்;
வணிகர் தத்தம் பணிகளைத் தொடங்கிட
அணியணி யாய்ச்சென்(று) அங்காடி திறந்தனர்; 10
முனிவில ராக இளையர் பலரும்
நனிதமிழ்க் கல்வியை நாடின ராகிக்
கல்விக் கூடம் கடுகினர்; கல்விச்
செல்வம் வேண்டாச் சிறுமையர் சிலர்தாம்
ஊரைக் கெடுக்கவும் உட்பகை வளர்க்கவும் 15
சீரைத் தொலைக்கவும் தெருக்களில் திரிந்தனர்;
கோவில் திடலில் கூடிச் சிலர்தாம்
நாவில் வந்த நலமிலாச் சொற்களைக்
குறியின்றி வீசிக் கொட்டம் அடித்தனர்;
அறிவினர் தத்தம் கடமை யாற்றினர்; 20
மகளிர் மன்றத் தலைவியாம் வளர்மதி
அகம்நிறை அன்புடன் அரசியின் இல்லம்
புகுந்தனர்; ஆங்கே பொற்புடை அரசி
புகைசேர் ஓவியம் புழுதியும் படிந்தென
நிலத்திற் கிடந்ததால், நெஞ்சு நடுக்குறக் 25
கலக்கம் உற்றுக் கைகளால் பற்றி
எழுகென அரசி எழுந்தனள்; கடலில்
விழுந்தோன், தன்னை மீட்க வந்த
கலத்தினைக் கண்டுளம் களிப்பது போல,
நிலத்திற் கிடந்தவள், நேரில் வந்த 30
வளர்மதி கண்டதும் வாட்டம் விலகிட,
உளம்நிறை காதற்(கு) ஊறு நேர்ந்த்தும்
தந்தையின் செருக்கும் தலைவர் மாறனார்
வந்த்தும், தந்தை மடமை மீதுறத்
தலைவரைப் பழித்துப் தகாதன பேசி 35
அலமரச் செய்த்தும் அத்தை மகனை
அழைத்து வருவேன் அவனை வலிந்து
கழுத்தில் தாலி கட்டவைப் பேன்என
வஞ்சினம் உரைத்துச் சென்றுள தந்தையின்
வஞ்சனை வலையில் மாட்டிய நிலையில் 40
உய்வகை அறியா(து) உழல்வதும் உரைத்து
மெய்வகை அன்பு மேவிய அன்னையை
ஏக்கமும் ஆர்வமும் இருவிழி சேர்த்துப்
பார்க்கும் மகெவனப் பார்த்த அரசியின்
கண்ணீர் மாற்றிக் கனிவுடன் நோக்கி, 45
"எண்ணிய எண்ணியாங்கு எய்திட நெஞ்சில்
திண்ணிய ராதல் சிறப்பென வள்ளுவர்
சொன்னதை மறந்து சோர்ந்திடல் நன்றோ?
மாறனார் இசைவும் மாரியின் உறுதியும்
சீரியோர் துணையும் சேர்ந்து நின்றுஉன் 50
காதலை வாழ்த்திடக் காத்துநிற் கின்றன;
ஆதலால் நுந்தையின் அடக்கு முறைக்கே
அஞ்சி நடுங்குதல் அழகல; நீயும்
நெஞ்சில் துணிவுடன் நிற்க" என உரைத்த
வளர்மதி, மேலும் வகுத்துரை செய்தனர்; 55
"இளமையில் யானோர் ஏந்தலைத் துணையாய்
அடைய விரும்பினேன்; அவரும் விரும்பினர்;
தடைபல நேர்ந்தன; தாழ்த்தப் பட்டவள்
யான்என அறிவாய்; என்னுளம் கவர்ந்தவர்
மேனிலைச் சாதியர்; எம்மிடை விளைந்த 60
காதலை ஏற்கும் கருத்தில ராகித்
தீது சேர்இரு திறத்தினர் தாமும்
அல்லல் விளைத்தனர்; ஒருநாள் கரும்புக்
கொல்லை வழியே கல்லூரி சென்ற
என்னை வளைத்தனர்; இருங்கழி கொண்டே 65
உன்னைத் தொலைத்தோம்என்னக் கூவித்
தலையில் தாக்கித் தள்ளினர்; என்றன்
நிலையினை உணர்ந்தென் நெருங்கிய கேளிர்
இவனால் விளைந்த(து) இவட்(கு) இந் நிலையெனத்
தவறாய் எண்ணியென் தலைவரைச் சூழ்ந்து 70
நையப் புடைத்து நடுத்தெரு எறிந்தனர்;
பையப் புகைந்த சாதிப் பகையெனும்
நெருப்புக் கனன்றது; செருக்களம் ஈதெனத்
தெருக்கள் ஆயின; தீமைகள் பொருதன;
என்னுயிர் கலந்த இறையை வேற்றூர் 75
கொண்டு சென்று கொடுமை விளைத்தனர்.
ஒருத்தியை அவரோ(டு) இணைத்து விட்டால்
திருத்தலாம் என்று திட்டம் வகுத்துச்
சாதி நிலையில் தக்கவள் என்றொரு
பேதையை அவர்முன் பிடித்து நிறுத்தி 80
'மனைவி இவளே மறுப்பில் லாமல்
புனைக தாலி' என்று புகலவும்
தாலியைக் கையில் தாங்கிய அவர்தாம்,
"மாலையிட் டாலுமென் மனைவிநீ இலைஎன்
உள்ளம் கவர்ந்தனள் ஒருத்தி எனைஇக் 85
குள்ள நெஞ்சினர் வெல்லுதல் அரிதே
அவளே எனக்கு மனைவி என்னிலை
தவறெனச் சொல்வையோ சாற்றுக" என்னலும்
"இவர்இது செய்தனர்; எனக்கு நும்நிலை
எவரும் இயம்பிட வில்லை; இங்குளோர் 90
அனைவரும் அறிக அறிவிக் கின்றேன்
நினைப்பருந் தீமை நிகழ்த்திடத் துணிந்த
தீயரே! உங்கள் சிறுமை தீர்த்துத்
தூயராம் இவர்க்குத் துணையா யிருப்பீர்;
அடக்கு முறைக்கும் அச்சுறுத் தற்கும் 95
அடங்குதல் இன்றி அவர்நிலை சொன்னதால்
உண்மை யறிந்தேன் உறுதுயர் தவிர்த்தேன்
நன்மையே என்றும் நாடுக பெரியீர்!"
என்றவள் சொல்லிச் சென்றபின் ஆங்கே
நின்றோர் என்னுளம் நிறைந்தவ ரிடத்து"நீ 100
எண்ணும் வண்ணம் ஏதும் நடைபெறத்
திண்ணமாய் ஒப்போம் செத்தொழிந் தாலும்"
என்றுரைத் தனராம் ! எனைப்பெற் றோரும்
"கொன்றிடு வோம்உன் கொள்கை விடுக" எனகெ
"காதலைக் கொல்லக் கருதுவீ ராயின் 105
சாதலும் நன்றுநான் தளரேன் உறுதியில்
அறிக நீயிர் என(று) அறைந்தேன்; சிலநாள்
நிறைந்தபின் ஒருநாள் நெஞ்சினர் விடுத்த
மடலிற் கண்ட இடம்சென் றடைந்தேன்
உடலின் பிரிந்த உயிரென அவர்தாம் 110
எனைவர வேற்றார்; இணையிலாப் பெரியார்
நினைவினைக் கொன்கையை நெஞ்சில் தேக்கிய
சிலரொடும் பதிவகம் சென்று பதிந்து
நலமுறு துணைஎன நாவலூர் வந்தோம்
உற்றார் எதிர்ப்பும் ஊரார் எதிர்ப்பும் 115
முற்றுப் பெற்றன; முறையாய் இருவரும்
தொடங்கினம் இல்லறம்; தொலைப்போம் என்றவர்
அடங்கினர்; பின்னர் அவர்களும் எம்மை
ஏற்கும் வண்ணமும் போற்றும் வண்ணமும்
மாற்றா உளத்துடன் வாழ்ந்த காலை, 120
அயல்மொழி இந்திவல் லாண்மையை எதிர்த்துப்
புயலென என்னவர் போர்க்களம் புகுந்தார்;
குண்டுகள் துளைத்தன; கொள்கை முழங்கிக்
கண்டவர் கலங்கிடக் களத்திலே வீழ்ந்து
மண்ணுக்கு உடலை வழங்கினர்; உயிரை 125
என்னுள் வைத்தார்; இன்றும் அவர்தாம்
ஏற்றுப் போற்றிய ஈடிலாக் கொள்கையை
ஏற்றுக் கொண்டும் என்னவர் எனக்குத்
தந்த ஒருமகள் தமிழர சியுடன்
சிந்தையில் நினைவைத் தேக்கியும் வாழ்கிறேன்" 130
இன்னணம் வளர்மதி தன்வர லாற்றைச்
சொன்னது கேட்டுத் துயரம் குறைந்து
"தாயே ! எனக்கு தாயிலை அறிவீர்
தாயே போலுந் தகவினால் என்துயர்
நீக்கினீர் நெஞ்சத் தவரைத் துணையென 135
ஆக்குதல் நும்கடன்" என்ற அரசியைத்
தகவுடன் நோக்கித் "தளர்ந்திட வேண்டாம்
அகத்தில் உறுதி அகலப் பெறாமல்
நீயும் மாரியும் நிற்பிரேல் எவர்தரும்
நோயும் துன்பமும் நுமையணு காது" என 140
உரைத்த காலை உளத்தில் அன்பொடும்
நிறைத்த நீர்மோர்க் குவளை இரண்டொடும்
வந்தவள் தன்னை வளர்மதி கண்டு
சிந்தை மகிழ்ந்து "சின்னத் தாயே !
இங்குநீ இருத்தல் ஏற்றதே" என்னலும் 145
பொங்கும் உணர்வுடன் புகன்றனள் அரசி
"அன்னை இலாமலும் அத்தன் இருந்தும்
அன்பு பெறாமலும் அலமரும் என்னைக்
கனிவுடன் காத்துக் கடமையின் வழாமல்
இனியவே செய்யும் இன்றுணை இவர்" என 150
வளர்மதி மகிழ்ந்து மற்றவள் தன்னை
உளமார வாழ்த்தி உறுதுணை ஆகெனச்
சின்னத் தாயும் சிறுநகை செய்து
"கண்ணைப் போலக் காப்பேன்" என்றனள்.
வளர்மதி விடைபெற, அரசி 155
தளர்ச்சி நீங்கித் தளிர்த்தனள் அகத்தே.
Sunday, June 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment