ஊரைப்பிளக்கும் உரை
'சாதி தருமமே தழைத்திடத் தக்கது
சாதியைக் காதலால் சாய்ப்பது தீது' என
ஆரியம் காட்டும் அழிவுக் கொள்கையே
நேரிதாம் என்று நெஞ்சினில் கொண்டு,
செம்புலப் பெயல்நீர் போல அன்புடை 5
நெஞ்சம் கலந்திடும் செந்தமிழ் நெறியைத்
தீதுஎனச் சொல்லிச் சிறுமை விளைக்கும்
தாதையின் கொடுமையால் தளர்ந்து நின்ற
அரசியின் நெஞ்சத்(து) அவலம், அழகன்
வரவினால் மாறிட மகிழ்ந்தனள்; தூய 10
காதலை மாய்க்கும் கருவிஎன்(று) எண்ணிய
சாதிக் காரனே காதலை வளர்க்கும்
நண்ப னாக மாறி அவளின்
துன்பம் துடைக்கத் துணிந்து நின்றதால்
உவகையும் துணிவும் ஒருங்கே பெற்றுத் 15
தவறுஇலா மாரியை வாழ்க்கைத் தலைவனாய்
அடைதல் எளிதே அறிவியக் கத்தின்
படையினர் தாமும் பக்கம் நிற்கிறார்
ஆதலால் எதிர்ப்பினை அகற்றி விரைவில்
காதல் ஒருவனைக் கூட லாம்எனும் 20
களிப்புடன் தந்தையின் கட்டளை மீறி
வெளிச்செல முனைந்த வேளையில், பெருமாள்,
ஆரியக் கூத்தனின் அழிவுத் திட்டமாம்
கூரிலாக் கருவியைக் காரிருள் நெஞ்சினுள்
கரந்து மகளைக் கனிவுடன் நோக்கி, 25
"அறிந்தேன் மகளே! அறிவினை நல்கும்
நூலகம் செல்கிறாய் செல்க கதிரவன்
வீழும் முன்னம் வீடு திரும்புக
கவலை அகற்றிக் களிப்புடன் செல்க
தவறு செய்யேன் தந்தைசொல் நம்புக 30
சென்று வருக" எனச் சிரித்த முகத்துடன்
நின்று விடுத்தவர் நெஞ்சினில், சீரிய
மாற்றம் விளைந்ததோ? மகள்என் விருப்பம்
போற்றிடும் எண்ணம் புகுந்ததோ? என்று
நினைந்த வண்ணமும் காதல் நினைவில் 35
நனைந்த வண்ணமும் நடந்து சென்று
மாரியைக் கண்டனள்; மகிழ்ச்சியில் திளைத்த
மாரியும் அரசியை வருகெனச் சொல்லி,
அன்னை தந்தை ஆயிரு வர்க்கும்
"என்னை விரும்பும் இன்துணை இவள்" என 40
அறிமுகம் செய்து ஆவின் பாலைப்
பருகுஎனத் தந்து பெருகிய காதலால்
பெற்றோர் இசைவு பெற்றபின் அரசியைக்
கற்புடன் பார்த்துக் கண்ணால் அழைத்து
நாவல் ஆறு நோக்கி நடந்தனன்; 45
காவல் அவன்எனக் கருதிய அரசியும்
தொடர்ந்தனள் அவனைத் தூயவன், "அரசியே!
நடந்த எல்லாம் நவில்க" எனத் தந்தை
அழகனைக் கண்டதும் அவன்இங்கு வந்த்தும்
உளம்நிறை காதலை உயர்ந்தவ னிடத்தில் 50
எடுத்துச் சொன்னதும் ஏற்றுக் கொண்டதும்
கடுத்துப் பேசிக் காதலை மறுத்த
தாதையை எதிர்த்துத் தகவுடை அழகன்,
சாதியை மறந்து காதலை வாழ்த்தலே
நன்றெனச் சொன்னதும் நயம்இல பேசித் 55
தந்தையார் அழகனைச் சாடி விடுத்தபின்
அய்யரைக் கண்டு திரும்பிய தந்தை
மெய்ம்மை அன்பு மேவிடப் பேசி,
"மகளே! சென்று வருக" என விடுத்த
தகவும் அரசி சாற்றிடக் கேட்டு, 60
மாரி மொழிந்தனன்; "நுந்தையின் மாற்றம்
நேரிது என்றுநான் நினைத்திட வில்லை
சாதித் தளையைத் தகர்க்கும் காதலை
மோதி அழிக்க முனைவதும் முனைப்புத்
தளர நேர்ந்தால் சார்ந்து நின்று 65
வளர விடாமல் மாய்ப்பதும் ஆகிய
திறம்எலாம் அய்யரே தீதுநன்(று) அறியா
ஒருவராம் உந்தைக்(கு) உரைத்து, நமக்கெதிர்
இயங்கு மாறு இயக்கி வருகிறார்;
உயங்குதல் வேண்டா; ஒன்றிய நமக்குத் 70
திருமாற னாரும் சீர்சால் இயக்கமும்
உறுதுணை; மேலும் உன்அத் தானும்
என்னைக் கண்டு தன்னிலை விளக்கி
'என்றும் துணையாய் இருப்பேன்' என்றனர்;
நீயே என்துணை யான்உன் துணைஎன 75
ஆயினும்; இதனை அறிந்தனர் பலரும்;
பொறையும் அறிவும் பொருந்தி நின்றிடின்
குறையிலா வெற்றி குறுகும்; சிறிதும்
குழப்பம் இன்றிக் கொண்ட காதலின்
விழுப்பம் எண்ணி விழிப்புடன் இருப்போம்" 80
என்று மாரி இயம்பிட அரசி,
"நன்று பொழுதும் நகர்ந்த(து); எதிர்வரும்
ஞாயிறு மாலை மீண்டும் கூடுவம்
தூயவ ரே" எனத் "தூயவ ளே! நான்
குறிச்சியில் நடைபெறும் கூட்டத் திற்குச் 85
சிறப்புரை ஆற்றச் சென்று, தங்கித்
திங்கள் திரும்புவேன்; திங்கள் மாலை
இங்கே மீண்டும் இருவரும் வருகுவம்"
என்று சொல்லிச் சென்று வருக என,
ஒன்றிய மாரி உரைத்தனன்; அரசியும் 90
எண்ணம் மாரிபால் இருத்தி மண்ணில்
கண்ணைப் பதித்துக் காலால் நடந்தனள்
உள்ளம் அரசிபின் ஓட விட்டு
மெல்ல மாரியும் நடந்தனன்; அவனை
நெருங்கி வந்து நின்ற ஒருவன் 95
சுருங்கிய நோக்குடன், "சொல்லடா தீய
சேரியன் தானே நீ" என வினவச்
"சேரியன் உண்மை தீயவன் அல்லேன்"
என்று மாரி இயம்பக் கேட்டுக்
கன்றிய கயவன் கள்வெறி மீதுற 100
முயர்ந்த சாதியள் ஒருத்தி யுடனெநீ
மறைந்து பேசி மகிழ்தல் தகுமோ?
இழிந்த சாதியன் உயர்ந்த எமக்கெதிர்
எழுந்து மோதிட எண்ணமோ? சொல் என
"யாரினும் இழிந்தவன்? நும்மினும் எனினே 105
வேறுள சிலரின் நீயிர் இழந்தவர்
என்பதும் உண்மை ஏற்பீர் ஆயினும்
என்னிலை பிறப்பால் இழிந்த தென்பதை
ஒப்பிடேன்" என்று மாரி உரைக்கவும்
"எப்படி என்னை இழிந்தவ னாகச் 110
சொல்வாய் உன்னைக் கொல்வேன்" என்று
பல்லைக் கடித்து மாரியைப் பற்றவும்
ஓடி வந்த மாரியின் உறவினன்
சாடினன் அந்தச் சாதி வெறியனைத்
தள்ளாடி நின்றஅச் சழக்கன் தீய 115
கள்ளின் வெறியுடன் கனன்று நோக்கி
"என்னைத் தாக்கி இழிவு செய்தனை
உன்னைக் கொல்லா(து) ஒழியேன் உன்றன்
சேரியும் விரைவில் தீக்கிரை யாகும்
மாரிமேல் ஆணை வைத்தேன்" என்று 120
குழறிச் சென்றனன் கொடியோன் அந்த
மாரி யம்மை அறிவளோ
ஊரைப் பிளக்கும் உரையீ தென்றே.
Thursday, June 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment