வேதியர் ஊட்டிய வெறி
உறங்கிக் கிடந்த தமிழரை எழுப்பி
அறிவும் மானமும் அன்புடன் ஊட்டிச்
சாதியும் மதமும் தமிழர்க்(கு) இல்லை
சூதினர் விளைத்தவை தொல்லை தருபவை
விலக்குக அவற்றை விரட்டுக என்றும் 5
நலத்தகை அறிவினால் நந்தமிழ் மொழியால்
ஓரின மாகி உயர்வீர் என்றும்
சீரிலா நெறியில் செலாதீர் என்றும்
அரியன சொல்லி அயரா(து) உழைத்த
பெரியார் வழியில் பீடுற நடந்தும் 10
ஒருபெரும் புரட்சியை விரைவினில் நிகழ்த்தத்
திருமாற னாரின் சீரிய தலைமையை
ஏற்றும் நாவ லூரின் இளைஞரை
மாற்றும் பணியில் வளையா(து) உழைக்கும்
மாரி யப்பனின் வன்மையால் தங்கள் 15
சீரெலாம் விரைவில் சிதையுமோ என்ற
அச்சம் மீதுற அனந்த ராமன்
எச்செயல் செய்தால் இவனை ஒழிக்காலம்
என்பதை எண்ணி இருந்த காலை,
வன்முறைக் கஞ்சா மரபினர் சிலர்தாம் 20
வந்து நின்று வணங்கிச் சாமி!
இந்தக் கொடுமை இன்னுமிவ் வூரில்
நடந்திட லாமோ? நமக்கு நல்லதோ?
வளர்ந்திட லாமோ? மதிப்பற் குரியநம்
முன்னோர் அந்நாள் வகுத்த விதிகளை 25
இந்நாள் ஒருவன், இழிந்த பிறப்பினன்
மாற்ற முயல்வதைப் பார்த்திருப் பதுவோ?
ஏற்ற(து) உரைப்பீர்" என்னலும் இராமன்,
சநாதனம் அழிக்கத் துடிக்கும் தமிழனை
முனைப்புடன் மோதி அழித்திட நினைத்துத் 30
தமிழருள் சிலரே தம்மை அணுகிய
அமைவினை எண்ணி அகத்துள் எழுந்த
மகிழ்ச்சியை மறைத்து, "மற்றுஅக் கொடிய
நிகழ்ச்சிதான் என்ன? நேக்கு விளக்கமாய்
உரைமின் அதனை ஒழிக்கத் தக்கதை 35
உரைப்பேன்" என்னலும், ஒருவன் உரைத்தனன்;
"சேரியில் பிறந்தே ஊரினைக் கெடுக்கும்
மாரியால் தொல்லை மறைதிட வில்லை;
பெரிய சாதிக் கோயில் குளங்களில்,
தெருவில் உள்ள தேநீர்க் கடைகளில், 40
எங்கும் சமத்துவம் என்று சொல்லி
இங்குள சேரியின் இழிந்த பயல்களைத்
தூண்டி விட்டுத் தொல்லை தருகிறான்
தூண்டிலில் சிக்கிய மீன் என எங்கள்
சாதியில் படித்த தறுதலை சிலரும் 45
சூதறி யாமல் தொடவும் தகாத
அந்த மாரியின் அல்வலைப் பட்டதால்
எந்த நேரமும் எடுபிடி போல
அவனுடன் இணைந்தே அலையும் கொடுமையை
எவரிடம் சொல்வோம்? உரிமைக் காவல் 50
எனுமொரு பேரால், இனுமொரு கூட்டம்
இனும்சில நாளில் இங்கு நிகழுமாம்;
அன்றொரு நாள்பகுத் தறிவுக் கூட்டம்
என்றொரு பேரால், எங்கும் நிலைத்த
சாதியை மதத்தைச் சாமியைப் பிராமண 55
நீதயைக் குறித்து நிந்தை செய்தே
அந்தப் பயலும் அவனோ(டு) இணைந்து
வந்த பயல்களும் வாயில் வந்ததை
உளறிச் சென்ற பின்னரே ஊரில்
களரி தொடங்கிக் கலகம் விளைந்தது 60
தாக்கப் பட்டான் தகப்பன் எனினும்
போக்கிலி மாரி புரட்டுத் தனத்தைத்
தொடர்ந்து செய்யத் துணிந்து நிற்கிறான்
கடந்த முறைபோல் காலிகள் மீண்டும்
சாமியை மத்ததைச் சாதியைச் சாடிச் 65
சாமி! பேசுவர்; சாமியே தண்டனை
தரும்என எண்ணிப் பொறுமையாய் இருப்பது
தருமமோ சொல்க" எனச் சொல்வேன் அந்தச்
சிறுமையன் மாரியைப் பெரிய கோவில்
தெருவில் கண்டேன் சிந்தையில் எழுந்த 70
அநுதா பத்தால் 'அப்பன் நலமோ'
எனவே கேட்டேன் என்உயர் பிறப்பையோ
வயசையோ கருதி மதிப்பளிக் காமல்
கயவன் என்னைக் காரணம் இன்றிப்
பேசினன்; ஜாதிப் பிளவும் மோதலும் 75
ஆசையால் நானே ஆக்குவ தாகச்
சொல்லக் கேட்டுத் துடித்தேன் உலகில்
எல்லாம் அறிந்த ஈசனே அவனவன்
பூர்வ ஜென்ம புண்ணிய பாவம்
சேரும் வகையெலாம் ஞான திருஷ்டியால் 80
அறிந்து பிறப்பால் ஆக்கினன் ஜாதிகள்;
தெரிந்தே ஏற்றுச் செய்வினைப் பயனை
அனுபவிக் கின்றோம் அவன்செயல் அல்லால்
மனிதன் செயல்என மடையன் சொன்னால்
ஏற்க லாகுமோ? இன்னும் சொல்வேன் 85
நேற்றவன் என்னைத் தூற்றிய அளவில்
நின்றிருந் தாலும் நெஞ்சில் வேதனை
இன்றெனக்(கு) அதிகம் இருந்திருக் காது
சேரியில் வாழும் சிறுமைய ரேஇவ்
வூரிலும் நாட்டிலும் உயர்ந்தவர் என்றும் 90
அப்பனைத் தாக்கிய ஒருவனைக் காவலர்
தப்ப விட்டதால் தண்டனை அவனே
தருவன் என்றும் தாக்கியோன் ஜாதியை
ஒருநாள் அடியோ(டு) ஒழிப்பன் என்றும்
இன்னும் உங்கள் ஜாதியில் உயர்ந்து 95
நன்னிலை உள்ள நல்லோர் சிலரைப்
பெயரைச் சொல்லிப் பேசினன்; கேட்டென்
வயிறுதான் எரிந்தது; வயதா கியநான்
தனியே அவனைத் தாக்க முடியுமோ?
இனியும் இங்கவன் என்செய் வானோ? 100
தெய்வம் நின்று கொல்லும் என்பர்
பொய்யிலை அதற்குள் இந்தப் புலையன்
ஊரையே அழிப்பன் உண்மை; இதற்குநாம்
ஆரை நோவதாம்? அன்றுஅக் கிழவன்
கருப்புச் சட்டைக் கயவரை வளர்த்ததால் 105
வெறுப்பும் மொதலும் விளைந்தன" என்று
வேதியர் சொன்ன விரிவுரை கேட்ட
சாதி வெறியர், "சாமி நாங்கள்
உப்புச் சேர்த்தே உண்கிறோம்; உணர்ச்சி
செத்திட வில்லை; சிறுமை சேர்க்கும் 110
மாரியும் அவன்வாழ் சேரியும் இன்றே
ஊரில் இலாமல் ஒழிப்போம்; இதனை
நாளையே காண்பீர்; நாங்கள் செய்யும்
சூளுரை ஈது" எனத் தொழுது சென்றிட
நினைந்தது நிகழும் என்றே 115
அனந்த ராமன் அகமகிழ்ந் தனரே.
Monday, June 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment