குறிச்சியின் எழுச்சி.
ஞாயி றன்று மாரி யப்பன்
காலையில் எழுந்து கடமை உணர்வுடன்
இயக்கம் சார்ந்த இளைஞர் பலரையும்
மயக்கமில் தலைவியாம் வளர்மதி தம்மையும்
ஊர்பொது மன்றில் ஒருங்கு திரட்டிச் 5
"சீர்த்திரு மாறனார் ஆணையை ஏற்றுக்
குன்றுசூழ் குறிச்சிக் கூட்டத் திற்கென
இன்று செல்கிறேன் என்று சொல்லி,
வணங்கத் தக்க வளர்மதி அம்மையை
வணங்கி அவர்தம் வாழ்த்துப் பெற்றுச் 10
சுணங்க லின்றித் தூய மாரியன்
குறிச்சி செல்லக் குறித்து விரைந்தனன்
குறிச்சியில் அழகன் கொள்கை மறவனைக்
கண்டு மகிழ்ந்து கனிவுடன் அழைத்துச்
சென்று விருப்புடன் தேநீர் வழங்கி 15
மேடையில் இருத்தி மாரியின் மேன்மையைக்
கூடியோர் அறியக் கூறத் தொடங்கினன்;
"மானமிகு பெரியீர்! வணக்கம். நமக்கெலாம்
மானமும் அறிவும் வாய்த்திட வேண்டியும்
இனப்பகை அடக்கியும் எழுச்சியைத் தூண்டியும் 20
நினைப்பருந் தொண்டு நிகழ்த்திய பெரியார்
நெறியினைப் பரப்பும் நீள்புகழ் அறிஞராம்
திருமாற னாரின் திருந்திய தலைமையை
ஏற்றே உயர்அறி(வு) இயக்கம் சார்ந்துநாம்
போற்றும் வகையில் பொதுப்பணி யாற்றும் 25
மாண்பினை உடையராம் மாரி யப்பனை
வேண்டினன் வருக என விருப்புடன் வந்தனர்
தாயக மண்ணில் தன்மா னத்துடன்
தூய வாழ்க்கை தொடதற் கியலாச்
சூழலில் பல்வகைத் தொல்லைகள் தொடர 30
வாழும் நமக்கு மாண்உயர் நெறிதனை
வகைபட மொழிகென மாரி யப்பன்
அவர்களை வேண்டுவன் அன்புடன்" என்னலும்,
தந்தை பெரியார் வாழ்க! எனும் முழக்கம்
உந்தலால் மாரி உரைசெயத் தொடங்கினன்; 35
"அறிவுச் செல்வராம் அழகரே! குறிச்சிப்
பெரியீர்! வணக்கம். பெருமைக் குரிய
தந்தை பெரியாரே தமிழ்ப்பா ஙேந்தராய்
வந்தார் எனத்தகு மாண்புடன், பெரியார்
எண்ணிச் சொன்ன பொன்மொழி அனைத்தையும் 40
அன்னைத் தமிழில் அணிநலம் சேர்த்துப்
பாக்களாய் வடித்துப் பாழ்பட்டு நின்ற
மாக்களை அறிவும் மானமும் உடையராய்
ஆக்கிட முனைந்த அறிஞர்; தமிழரைத்
தாக்கிட முனைந்த தறுக்கரைச் சாய்த்தவர்; 45
செந்தமிழ் இளைஞரைச் செதுக்கிய சிற்பி;
இந்திவல் லாண்மையை எதிர்த்து நின்றவர்;
ஆரியம் பரப்பிய அறமிலா நெறிகளை
வேருடன் வீழ்த்திட வீறுகொண் டெழுந்தவர்;
சாதியும் மதங்களும் தமிழ்நெறி இலையெனக் 50
கோதிலாத் தமிழ்நெறிக் குடும்ப விளக்கினை
ஏற்றிக் காட்டிய ஏந்தல்; உரிமை
போற்றுவோர் போற்றப் புரட்சிக் கவியைப்
பேச வைத்துப் பெருமை சேர்த்தவர்;
மாசிலா அழகின் சிரிப்பை வடித்தவர்; 55
பழந்தமிழ் நலத்தைப் பாண்டியன் பரிசாய்
வழங்கிய செந்தமிழ் வள்ளல்; நாட்டில்
நிலவிடும் மடமைநோய் நீக்கிட அறி(வு)எனும்
தலையாய மருந்தினைத் தந்த மருத்துவர்;
பொருந்தா மணத்துடன் புத்திளம் பூவையர் 60
வருந்தச் சுமத்திய மாண்பிலாக் கைம்மை
என்னும் விலங்குகள் இற்றுப் போம்படிப்
பெண்களின் உரிமை பேசிய பெருமையர்;
வந்தவர் ஆளுமை மாய்த்திட இங்குச்
செந்தமிழ் இயக்கம் கண்ட சிறப்பினர்; 65
புதியதோர் உலகம் செய்வதும் கெட்ட
போரிடும் உலகை வேருடன் சாய்ப்பதும்
குறியெனக் கொண்டு குறையிலாத் தமிழில்
அறிவுசால் கவிதைகள் ஆக்கிய அண்ணல்;
இற்றைக் கவிஞர் பலர்க்(கு)இன மானம் 70
கற்றுக் கொடுத்த கவிதை வேந்தர்;
பொருளை உணர்ந்து பொதுவுடைமை பாடிய
புரட்சிக் கவிஞர்; புதுமைப் பாவலர்;
அந்தக் கவிஞர் பெயரால் அமைந்த
மன்றத் தவர்தாம், மயங்கிய தமிழர் 75
விழிப்புறத் தக்கவை விளக்கி உரைக்கென
அழைத்தனர் சொல்வேன்; அறிவுசால் பெரியீர்!
கேளிர் யாவரும்; பிறப்பால் கீழ்மேல்
சூழுதல் தீதெனும் தூய தமிழறம்,
பிறப்பால் வேற்றுமை பேசு கின்ற 80
சிறப்பிலா மதத்தால் சிதைந்ததாம்; இன்று
மேலும் தீமை விளைத்துத் தமிழரைக்
கீழாம் நிலையிற் கிடத்து தற்கும்
ஆற்றி(வு) உடையோர் ஓரினம் என்ற
பேரறம் அழித்துப் பிளவினைச் செய்யவும் 85
திட்ட மிட்டுத் தீயவர் கூட்டம்
வட்டம் அடித்து வருவதை அறிவீர்;
எந்தம் மதமே இணையி லாததும்
இந்த நாட்டிற்(கு) உரியதும் என்பர்;
வருணமும் சாதியும் வாழ்ந்திட விரும்பினும் 90
சரிநிகர் சமமெனத் தத்துவம் பேசுவர்;
மதவா தத்தால் மோதலை வளர்த்தபின்
எதுவும் அறியார் போல இயங்குவர்;
முத்தமிழ்ச் சிறப்பை மூடி மறைத்துச்
செத்த மொழிக்கே சிறப்புத் தேடுவர்; 95
இறைவனைப் போற்றிட இன்றமிழ்க் குரிமை
தருவதை மறுத்துச் சாத்திரம் பேசுவர்;
தொன்மைப் புனைவை உண்மை என்பர்;
உண்மைச் சிறப்பை ஒதுக்கித் தள்ளுவர்
இத்தகு தீயர் இன்றமிழ் நாட்டில் 100
சுற்றி வருவதைப் பற்றிஎண் ணாமல்
நம்மவர் வாழ்வதால் நலங்களை இழந்தோம்
செம்மை இகந்தவர் திளைக்க லாயினர்
பெரியார் தொண்டினால் வந்த பெருமைகள்
சிறியோர் செயலால் சிதைய லாயின 105
மொழியால் தமிழர் இணைந்திடா வாறு
இழிசெய லாளர் இடர்விளைக் கின்றனர்
இந்த நிலைமையால் செந்தமிழ் நாட்டில்
இந்திவல் லாண்மையும் இசையெனில் தெலுங்கும்
தென்றமிழ் இடத்தில் வடமொழி இரைச்சல் 110
நின்று தொடர்வதும் நினையல் வேண்டும்;
தாயை மதிக்கிறோம்; ஆனால் பேசும்
தாய்மொழி மதியாத் தகைமையர் ஆயினம்
பெருஞ்சீர்க் கல்வியில், பேச்சில் எழுத்தில்
விரும்புவம் ஆங்கிலம்; வேறெவர் நாட்டிலும் 115
புன்மை இதுபோல் புகுந்த(து) உண்டோ?
நன்மையோ பெரியீர்! நற்றமிழ் உரிமை
காத்திட முனைதல்நம் கடனே யன்றோ?
தாய்மொழி உரிமை, தாய்மண் உரிமை
ஆய்ந்தும் அறிந்தும் அவற்றினை மீட்டிடத் 120
தக்கன செய்தால் தன்மா னத்துடன்
மிக்கபல் நலங்களும் மேலிட வாழலாம்
பொருளியல் வளங்கள் பொருந்தினும் அடிமை
இருளகன் றாலே ஏற்றமாம்; இதனை
அறிந்து மொழியால் இணைந்தால் மட்டுமே 125
சிறந்த மேனிலை பொருந்தும் அதற்கென
ஆர்த்திட வேண்டும் ஆட்சி யாளர்
ஆணவம் காட்டி அடக்கிட முனைந்தால்
ஆணவம் தொலைக்க அணிவகுத் தெழுந்துநம்
முழுவலி காட்டுவோம்; மூங்கையாய் அவரைத் 130
தொழுதகை மாற்றித் தொடங்கும் அறப்போர்
கொடியவர், என்றும் அடிமையர் விரும்பும்
விடுதலை அதனை விருப்புடன் தாரார்
என்பதை உணர்ந்த ஈழத் தமிழர்
தந்நலஞ் சார்ந்த சாதி சமயப் 135
பிரிவினை தகர்த்துப் பெரும்புகழ்த் தமிழின
உரிமை காத்திட ஓரணி திரண்டனர்
இன்றமிழ் இளைஞரே! பெரியீர்! அவர்தம்
வென்றியை நினைந்து வீறுகொண் டெழுவீர்
நாளை உலகில் நாமும் இங்கு 140
வாழலாம் உரிமை மாண்புடன் மகிழ்ந்து" என
அறிவியக் கத்தின் மாரி யப்பன்
உரிமையின் பெருமை உரைத்திடக் கேட்ட
இளைஞர் பலரும் எழுச்சி பெற்றனர்
தளர்ந்த முதியரும் தளர்ச்சி நீங்கினர் 145
"ஆண்ட தமிழினம் அடிமைப் பட்டு
மாண்டது போதும் மீண்டும் தாயகம்
அனைத்துநல் உரிமையும் அடையும் நோக்கில்
நினைத்(து) அறப்போரைத் தொடர்ந்து நிகழ்த்தலே
தக்க தென்றும் சாதி மதங்களை 150
ஒக்கத் தகர்ப்பதே உகந்த தென்றும்
ஓரின மாக உயர்தமிழ் மொழியால்
சேருதல் ஒன்றே தீய பகைவரை
வெல்லும் வழியாம் வெறுஞ்சொல் நீக்கி
ஒல்லும் வகையால் உரிமைப் போரைத் 155
தொடங்குவோம் நல்வழி சொல்வீர்" என்று
மடங்கல் அன்ன மாரி யப்பனைச்
சூழ்ந்து வேண்டினர்; தூய மாரியும்
ஆய்ந்து நெறிமுறை அறிவித்(து) அழகன்
விருப்புடன் அழைக்கவும் விரைந்தவன் 160
இருப்பிடம் சேர்ந்தனன் எழுச்சியை நினைந்தே
Saturday, June 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment