Monday, June 7, 2010

இயல் - 15

               அம்மானுக்கு அறிவுரை
அன்னையை    ஈரைந்(து)    அகவை    நிறையும்
முன்னரே    இழந்தவள்    முதிர்ச்சி    இலாதாள்
பிள்ளைப்    பருவப்    பேதை    அவள்தான்
உள்ளக்    கவலை    உறுதலா    காதென
நாளும்    நாளும்    மகள்நலம்    கருதிப்                                     5
பேணிப்    பேணி    வளர்த்தனர்    பெருமாள்.
கேட்ட    தெல்லாம்    வீட்டில்    நிறைத்தார்
துள்ளித்    திரிந்தவள்    சொன்னதைக்    கேட்டுயர்
பள்ளிக்    கனுப்பினர்    மேலும்    படிக்க
விழைந்தன    ளென்றே    விளைந்த    அன்பினால்            10
கலைக்கல்    லூரிக்(கு)    அனுப்பி    வைத்தனர்;
இன்றும்    மகள்பால்    இயைந்த    அன்பு
குன்றிட    வில்லை    என்பதே    உண்மை;
ஆயினும்    சாதி    அமைப்பால்    தொற்றிய
நோயின்    கடுமை,    நோயிலா    மகள்பால்                         15
கொண்ட    அன்பினும்    கூடுத    லாக
நின்றதால்    மகள்நலம்    நினையா    ராயினர்;
மகளின்    விருப்பை    மதிப்பதோ?    பலரும்
தகவெனச்    சொல்லும்    சாதியைக்    காப்பதோ?
என்ற    வினாவை    எழுப்பிய    பெருமாள்                           20
குன்றிய    அறிவால்    கொள்கைப்    பிணியால்
உயர்ந்த்து    சாதியே    ஒருமகள்    காதலால்
உயர்வு    சிதையும்    உறுதியாய்    என்றே
மாரியைச்    சேரியன்    என்று    மறுத்தயல்
ஊரின்ன்    சாதியால்    உறவின்ன்    ஆகிய                         25
அழகனுக்(கு)    அவளைத்    துணையென    ஆக்குதல்
அழகே    என்னும்    அறமிலா    முடிவை
உறுதிப்    படுத்திய    பின்னர்    இறுதியாய்
அறுதியிட்(டு)    உரைசெய    அழைத்தனர்    மகளை
"மகளே !    உனைஎன்    மருகன்    அழகன்                        30
திகழ்நன்    னாளில்    திருமணம்    செய்திட
ஒப்பினன்;    நேற்றவன்    ஒப்புதல்    பெற்றேன்;
எப்படி    யேனும்உன்    இசைவில்    லாமலும்
நன்மணம்    விரைவில்    நடக்கும்;    அய்யரை
இன்னே    காண்பேன்    ஏற்றநாள்    அறிந்து                    35
விரைவினில்    வருவேன்    வீட்டில்    இரு" என
பெருமாள்    சென்றனர்.    பிழையிலா    அரசியும்
காதல்    இலாமல்    ஒருவரை    ஏற்றுக்  
காதல்கொள்    ஒருவரைக்    கைவிடல்    கூடுமோ?
இயற்கைப்    புணர்ச்சியால்    இயன்ற    காதலைச்            40
செயற்கையாய்    வந்து    சீரழிக்    கின்ற
சாதியைக்    காக்கச்    சாக    விடுதல்
நீதியோ?    என்று    நினைத்துக்    கலங்கி
ஆறுதல்    தந்தெனை    அரவணைப்    பார்தாம்
ஆர்உளர்    என்றவள்    அலமந்த    வேளையில்            45
அம்மான்    பேச்சில்    அய்யற(வு)    உற்ற
செம்மையன்    அழகன்    சேர்ந்தனன்    ஆங்கே
தாயென    அரசியைத்    தாங்கும்    சின்னத்
தாயவள்    கண்டு,    தனியறை    யகத்துள்
வாடிக்    கிடந்த    மலரிடம்,    "அத்தான்            50
தேடி    வந்துளார்    தெளிவு    பெறுக" என
முத்துக்    கள்தமை    முகத்தின்    `அகற்றி
உற்ற    கவலையை    உள்ளத்    தடக்கி
வந்தவள்,    "அத்தான்    வருக" என,    அவள்தான்
நொந்தனள்    போலும்;    நோயினள்    போலும்;            55
நெஞ்சில்    அவலமே    நிறைந்தது    போலும்
வஞ்சி    அவட்கு    வருத்தம்    எதனால்
என்பதை    அறிய    எண்ணின    னாகி
நன்றே    நினைந்து    நயந்து    வினவினள்;
"இராணிஉன்    முகத்தில்    துயரம்    ஏனோ?            60
பேணிய    தந்தை    பிழைசெய்    தனரோ?
நெருநல்    மாமன்    நேரில்    வந்து  
திருமணம்    பேசினர்    விரைவினில்    மணநாள்
சொல்வேன்    என்று    சொல்லி    வந்தனர்  
நல்லதே    என்று    நானுளம்    மகிழ்ந்தேன்            65
முன்னர்    ஒருநாள்    உன்னை    விரும்பிய
என்னைத்    தகுதி    இலான்என்    றிகழ்ந்த(து)
எண்ணிய    என்னுள்    எழுந்த(து)    அய்யம்
உண்மை    அறியவே    வந்தேன்    உரைக்க" என,
                                   
                                           (வேறு)

"என்னை    விரும்பினீர்    பிழையிலை    என்விருப்பம்
இன்னொருவர்    பாலிருக்க    எந்தைஅஃ(து)    ஏலாமல்
என்னை    உமக்களித்தால்    ஏற்பீரோ?    ஏற்பிரேல்
முன்னைத்    தமிழறந்தான்    முற்றாய்    அழியாதோ?

என்சாதி    உயர்ந்த்துவாம்    என்னுளம்    கவர்ந்தவர்
தன்சாதி    தாழ்ந்ததாம்    தந்தை    உரைக்கின்றார்
புன்சாதி    காப்பதற்கே    நெஞ்சம்    பொருந்திநிற்கும்
என்காதல்    மாய்க்கின்றார்    இக்கொடுமை    ஏற்பீரோ?

உயர்ந்த    பகுத்தறிவும்    இனநலமும்    பேணுகின்ற
உயர்ந்தவரைப்    பிறப்பாலே    தாழ்ந்தவர்தாம்    என்கிறார்
உயர்காதல்    வீழ்த்திடவே    உமைக்கருவி    ஆக்குகிறார்
உயர்வோநீர்    ஒத்துழைத்தல்?    உண்மை    உரைப்பீரோ?

காதலை    அழிப்பரேல்    காதலொடு    நான்அழிவேன்
காதலொடு    நான்அழியக்    கருவிஎன    ஆவீரோ?
சாதிகளை    வாழவைக்கும்    தந்நலத்தார்,    தகுதியுள்ள
காதலை    வீழ்த்துகின்ற    கயமையினை    ஏற்பீரோ?"
                                           
                                                     (வேறு)

இன்னவா(று)    அரசி    தன்னிலை    விளக்கிச்            70
சொன்னது    கேட்டுத்    தூயவன்    சொன்னான்;
"அன்றுனை    விரும்பினேன்;    அறமெனக்    கருதினேன்;
இன்றுநீ    உன்னிலை    இயம்பிய    பின்னரும்
உன்னை    விரும்புவ    தாக    உரைத்திடும்
இன்னாச்    சிறுமை    என்பால்    இல்லை;            75
மகளைப்    போற்றலும்    மகளின்    மேலாய்த்
தகுதியைப்    போற்றலும்    தகுதியின்    உயர்வெனச்
சாதியைப்    போற்றலும்    சாதியைச்    சொல்லிக்  
காதலைக்    கோறலும்    காதலைக்    கொல்ல
எம்முடி    வேனும்    ஏற்கத்    துடிக்கிறார்            80
அம்மான்    என்பதை    அறிந்தேன்;    யானோ
செந்தமிழ்    அறமுணர்    திறத்தினேன்    ஆதலால்
எந்த    நிலையிலும்    இயற்கையின்    இயன்ற
உன்பெருங்    காதற்(கு)    ஊறு    செய்யேன்;
என்னரும்    மாம    னிடத்தும்    உன்னிலைக்கு             85
ஆதர    வாகப்    பேசுவேன்;    அவர்உன்
காதலை    மறுத்துக்    கடுஞ்சொற்    கூறிடின்
அவரை    எதிர்ப்பேன்;    அவருடன்    நிற்கும்  
எவரையும்    எதிர்ப்பேன்;    இருவீர்    தமையும்
இணைப்பேன்    உறுதி;    இனியவ    ளேநீ             90
துணையெனக்    கண்ட    தூயவர்    யாவர்?
விரும்பினால்    சொல்க" என,    விரைந்த    காற்றினால்
கருமுகில்    விலகிய    கதிரொளி    நிலவென
விளங்கிய    முகத்தினள்    விருப்பம்    மீதுற,
"உளங்கவர்    தலைவர்இவ்    வூரினர்;    தமிழின             95
நலமே    விரும்பியும்,    நலம்பெறத்    தடையென
நிலவும்    சாதி    மதங்களைச்    சாடியும்
அறிவு    புகட்டி    அரும்பணி    யாற்றிடும்
திருமாற    னாரொடு    சேர்ந்து    பழகியும்
வாழ்ந்து    வருபவர்;    மடமை    யாளரால்                       100
தாழ்ந்த    பிறப்பெனச்    சாற்றப்    படுபவர்
மாரி    யப்பன்    அவர்பெயர்"    என்னலும்
"மாரி    யப்பனோ!    மகிழ்ச்சி;    அவர்தமை
நேரில்    அறிந்திலேன்;    நிறைகுடம்    என அவர்
சீரினைப்    பிறர்சொலத்    தெளிவாய்    அறிந்துளேன்;            105
அறிவியக்    கத்தின்    அருந்துணை    ஆய
இருஙரும்    வாழ்வில்    இணைதல்    ஏற்றதே;
மாரி    யப்பனை    மாலையிற்    கண்டு
கூறுவன்    வாழ்த்(து) எனக்    கூறினன்    அழகன்.
திரும்பி    வந்த    பெருமாள்,    மருகனை            110
விரும்பி    நோக்கி,    விருப்புடன்    மகளையும்
கண்டு,    நெஞ்சில்    கலக்கமும்    மகிழ்வும்
கொண்டு    மகளைக்    கூர்ந்து    நோக்கி,
"அன்புறு    பகளே    அத்தா    னுக்குத்
தண்பண்    டங்களும்    தீஞ்சுவை    நீரும்            115
தந்தனையோ?"    எனத்    தருவேன்    என்று
சென்றனள்,    "மருக !    திருமண    நாளை
அறிந்திட    விரும்பி    அய்யரைக்    காண
விரைந்தேன்    அவர்தாம்    வீட்டில்    இல்லை.
வந்ததும்    சென்று    மணநாள்    அறிந்து           120
வந்து    சொல்வேன்    மற்றது    வரையில்
இருந்து    செல்க"    என இயம்பி,    "இராணிபால்
கலந்துரை    யாடினை;    கருத்தால்    இசைந்து
மகிழ்தன    ளோ? என,    வந்த    மகளும்
"மகிழ்ந்தேன்,    அத்தான்    வருகையால்"    என்றனள்.          125
"எனக்கும்    மகிழ்ச்சியே    இன்று    வராவிடின்
நினைப்பருந்    தீமை    நிகழ்ந்தே    இருக்கும்"
என்றழ    கப்பன்    இயம்பிடக்    கேட்டு
"நன்றே    நடக்க    நானிருக்    குங்கால்
தீமை    என்" எனத்    திகைத்தே    வினவ,          130
"மாமா!    சொல்வேன்    மகளும்    விரும்பினால்
மறுப்பிலை    அவளை    மணக்க    என்றேன்;
விருப்பம்    மகட்கும்    இருப்பது    போலச்
சுருக்கமாய்ச்    சொன்னீர்;    சொன்ன(து)    உண்மையொ?
விரும்பினேன்    இராணியை;    வேறொரு    வரையிவள்         135
விரும்புதல்    இன்று    விளம்பிடக்    கேட்டேன்
ஒருமகள்    விருப்பமே    உயர்வெனக்    கொண்டு
திருமணம்    நிகழ்த்திச்    சிறப்பினைப்    பெறுக;
மறுப்பிரேல்    தீமை    வந்தே    தீரும்"
இன்னவாறு    அழகன்    இயம்பிடக்    கேட்டவர்,        140
"என்னடா    சொல்கிறாய்?    இழிந்த    பிறப்பினன்,
சேரியன்,    அந்த்த்    தீயவ    னுக்கோ
ஊரினில்    தகுதியால்    உயர்ந்த    என்னை
மாமனாய்    ஆக    வழியுரைக்    கின்றாய்?
மாம    னிடத்தில்    மானம்    உள்ள        145
மருகன்    பேச்சோ?    மடையன்    பேச்சோ?
தருகிறேன்    பெண்ணைத்    தகுதிக்    குறைவும்
பெரிதலை    என்றும்    சாதியே    பெரிதெனக்
கருதியும்    உன்னைக்    கண்டு    பேசினேன்
உனக்கு    விருப்பம்    இல்லையேல்    உரைக்க;         150
எனக்கு    தெரியும்    எல்லாம்;    எனக்கே
அறிவுரை    சொல்வையோ?    ஆணவ    மோ? என
நெறிமுறை    பிறழ்ந்து    நீடு    பேசலும்
"சேரியன்    என்றும்    தீயவன்    என்றும்
கூறுதல்    முறையோ?    கூறுக"    என்றவன்        155
மொழிந்தது    கேட்க    விழைந்தில    ராகி
"ஒழிகநீ    எனக்கும்    உனக்கும்    இன்றுடன்
அறுந்தது    உறவு" என    அறைந்தது    கேட்டுத்
"திருந்திட    மாட்டீர்;    நுமைத்திருத்    தாமல்
இருந்திட    மாட்டார்    அறிவியக்    கத்தார்;        160
திருந்திய    நும்மை    இராணியின்    திருமண
விழாவிற்    காண்பேன்    இராணி! நீ
அழாதே"    என்றவன்    அகன்றனன்    விரைந்தே.

No comments:

Post a Comment