சின்னத்தாய்
மலரும் அன்புடன் மானமும் அறிவும்
உலகில் எங்கும் நிலவும் சிறப்பும்
என்றும் பிறப்பால் ஏற்றத் தாழ்வுகள்
இன்றி மாந்தர் இணைந்துவாழ் நிலையும்
காணப் பெரியார் காட்டிய வழியில் 5
பூணத் தகுந்த பொறுமை யோடும்
அகத்தில் எழுந்த ஆர்வத் துடனும்
பகையினை அழிக்கும் படைக்கல னாகக்
கூரிய அறிவினைக் கொண்டு நிற்கையில்,
சேரி வாழ்நர் திகைப்பினால் எடுத்த 10
தீய முடிவைத் திருத்தும் பொறுப்பினைத்
தூய அரசி சுமக்கத் திணிந்தனள்
மாரி யப்பனை மயக்கம் தீர்த்துச்
சீரிய தலைவராம் மாறனார் வருகை
நாளை அதன்பின் நலமே இங்குச் 15
சூழும் என்னும் திணிவுடன் வீட்டில்
நுழைந்த அரசி, நொயினால் பெரிதும்
வருந்தினள் பொலச் சின்னத் தாயவள்
கிடந்தது கண்டு, கிளரந்த அன்பினால்
"நடந்ததென்? தாயே நவில்கென, அரசிபால் 20
தாதை செயலைக் கூறல் தகுமோ?
ஏதும் ஒருபயன் இதனால் விளையுமோ?
என்றே நிஐத்து மறுமொழி இசைத்தல்
இன்றிக் கண்ணீர் இழிந்திட இருந்தவள்
கண்டுளம் பதைத்(து)அவள் கைகளைப் பற்றிக் 25
கொண்(டு)அவள் துயரைக் குறைத்திட எண்ணி,
"அம்மையே எனைஉன் அருமை மகளாய்
எண்ணுவை ஆயின் இயம்புக" என்ற
கள்ள மில்லாக் கனிமொழிக்(கு) இசைந்துதன்
உள்ளம் திறந்தே உரைத்தனள் "மகளே! 30
உன்னருந் தந்தை என்னிடம் இன்று
பன்னாள் தன்னுள் பதுக்கிய ஆசையைச்
சொன்னார் அவர்தம் தூய்மைஇல் ஆசைக்(கு)
இந்நாள் முதல்நான் இணங்க வேண்டுமாம்;
மறுத்தேன் உள்ளம் வாடி நீங்கினார் 35
வெறுத்தே அவர்எனை விரட்டிடின் உன்னைப்
பிரிய நேருமே பேதையேன் அதற்கே
வருந்து கின்றேன் மற்றெனை வருத்தும்
கவலையொன் றில்லை கண்மணி! என்றவள்
கவலையை மாற்றக் கருதிய அரசி 40
"தாயே ஆகி என்னைத் தாங்கும்
தூயவள் நீயில் வீட்டில் தொடர்ந்து
தங்கி யிருக்கத் தக்கது செய்வேன்
இங்கி ருந்துநீ ஏகிட நேர்ந்தால்
உன்னுடன் ஓடி வருவேன்" என்று
சொன்ன வேளையில் துடிப்புடன் வந்த
தந்தையைக் கண்டு, தவிர்க்கவோ? சாடவோ?
என்று நினைந்து நின்ற அரசியை
அருகினில் வருகவென அழைத்து "மகளே!
உறுதுயர் தந்தேன் உனக்கென உரைத்து, 50
நம்மவர்க் கெல்லாம் நல்வழி காட்டும்
செம்மையன் என்றுநான் திடமாய் நம்பிய
அனந்த ராமனே அழிவினைத் தூண்டும்
இழிந்தவன் என்பதை இன்றே அறிந்தேன்;
வன்முறை நாடும் மடவோர் சிலரைத் 55
தன்னிடம் அழைத்துத் தவறிலா தவளாம்
உன்னையும் என்னையும் ஒருங்கே ஒழித்திட
எண்ணியே திட்டம் இயற்றிய வேளையில்
சென்றேன்; அவனே தீமையின் இருப்பிடம்
என்றே கண்டதால் இழிந்தவன் உறவை 60
அறுத்துக் கொண்டேன்; ஆழ நினைந்தே
உரைப்பது கேள்நீ உன்பெருங் கொள்கையே
சிறந்ததாம் உண்மை தெளிந்தேன்" என்றுளம்
திறந்து தந்தை செப்பிடக் கேட்டுக்
கருங்கல் இதுஎனக் கருதிய ஒன்று 65
விரும்புநற் கனிஎன விளங்கிடக் கண்டோர்
கொள்ளும் மகிழ்ச்சியும் குறைவென் பதுபோல்
உள்ளம் எல்லாம் உவகையில் துள்ள
"எந்தையே! நுந்தம் இன்சொல் கேட்டுச்
சிந்தை மகிழ்ந்தேன் தீயரை நீயிர் 70
அறிந்த தாலும் அறிவியக் கத்தின்
சிறந்த கொள்கையைத் தேர்ந்த தாலும்
குற்றமும் குழப்பமும் முற்றும் நீங்கிஇச்
சிற்றூர் இனிமேல் திகழும் ஆயினும்
வீட்டில் குற்றம் விலக்கிய பின்னரே 75
நாட்டைத் திருத்துதல் நன்றென் பதனை
ஏற்பீர் அன்றோ" என்றவள் வினவ
"மாற்றம் இல்லை மகளே! நமது
வீட்டில் சாதி வேற்றுமை இலைஎன
நாட்டுவம் உறுதிநீ நயந்த ஒருவனைத் 80
துணைஎனக் கொள்ளத் துணையாய் இருப்பேன்
எனைநீ நம்புக" என்றவர் இயம்ப
"என்துணை யோடுநான் ஏகுவேன் அய்ய! ஓர்
இன்துணை இன்றிநீர் இருப்பதோ?" என்ற
அறிவினள் கேள்வியின் ஆழம் அறிந்ததால் 85
"அறிவுடை அரசியே! அறிந்தேன் உன்னுளம்
பணிமகள் சின்னத் தாயினை என்றன்
துணைஎனக் கொள்வேன்; துடைப்பேன் அவள்துயர்
அழைக்கஇங்(கு) அவளை என்னலும் அரசி
களிப்புடன் சென்று "கவலை நீங்கி 90
எழுக" எனத் தாயின் இருகைப் பற்றி
உழுவலன் புடனே உயர்ந்த தந்தையின்
முன்னர் நிறுத்தவும், முறையிலாக் கைம்மை
இன்னே ஒழிந்ததென்(று) எண்ணின ளாகத்
திருந்தியப் பெருமாள் எதிரில் உள்ளம் 95
பொருந்தி நின்ற பொற்பினள் தன்னைத்
துணைஎன ஏற்றதைச் சொல்லும் வகையில்
அணிதிகழ் ஆழியை அணிந்தபின், "மகளே!
சின்னத் தாயே இந்நாள் தொடங்கிஉன்
சின்னத் தாய்எனத் திகழ்வாள்" என்றுதம் 100
உள்ளம் கலந்து பெருமாள் உரைத்திடத்
துள்ளும் மகிழ்வின் தொடர்ச்சியாய் அரசி
தூய அன்புடன் தொழுதனள்
தாயின் கால்களில் தலையை வைத்தே
Saturday, June 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment