வருண தருமம் வளைந்தது
எப்படிப் பார்ப்பினும் இழிந்த தாய
ஒப்பில் லாமையே உயர்ந்ததென்(று) உரைக்கும்
வடவா ரியத்தை வணங்கி ஏற்று,
மடமையை நாட்டில் வளர்க்குந் தீயருள்
நிலக்கிழார் பெருமாள் நிகரிலார்; ஆதலால் 5
விலக்கத் தக்கதும் வேண்டத் தகாததும்
தாழ்ந்ததும் ஆகிய சாதித் தீமைதான்
வீழ்ந்திடா வண்ணம் விளங்கிடச் செய்வதே
கடன்எனக் கருதியும் மடமையைப் பிறர்க்கே
உடைமை ஆக்கியும் உவக்குநர் ஆகிய 10
அனந்த ராமனை அடைந்து, மருகனை
நினைத்\\ந்து சென்றதும் அவன்இவண் வந்ததும்
சாதிகள் இல்லை காதலே பெரிதென
நீதி சொன்னதும் நிரலாய்ச் சொல்ல,
"அன்றுநீ வந்து சென்ற பிறகுநின் 15
தங்கை மகனது ஜாதகம் பார்த்து,
நேற்றே நினைத்தேன் நிகழுமிப் படியென
மாற்ற முடியுமோ மகேசன் எழுத்தை?
ஒருமகள் ராணிக்(கு) உயர்ந்த ஜாதகம்
மருமகன் ஜாதகம் பாப ஜாதகம் 20
ஆயுசும் குறைவு அதனால் அவனை
நீயும் வெறுத்து நிற்பதே முறையாம்
பகவான் செயலால் பத்துமா தத்தில்
மகளுக் குரியவன் வருவான் பகவத்
பிரீதி யாகப் பிராமணாள் பதின்மர்க்(கு) 25
உரியவை செய்க" என அய்யர் உரைக்கவும்
"செய்கிறேன் சாமி தீயனை மறந்து
மெய்வகை என்மகள் மீண்டிட என்றன்
பண்ணையில் வேலை பார்ப்பவன்; நாளெல்லாம்
சொன்னதைச் செய்பவன்; தொழுதே நிற்பவன்; 30
மனைவி இழந்தவன்; வயது நாற்பதே;
எனது சாதியன்; என்மகள் கழுத்தில்
அவனைத் தாலி அணியச் செய்தால்
தவறோ சாமி? சாற்றுக" என்றே
பெருமாள் வினவப் பிழைநெறி காட்டும் 35
ஒருவராம் அனந்த ராமன் உரைத்தனர்;
"ஜாதி யில்லை சாமி யில்லை
நீதி யில்லை நியமம் ஏதும்
இல்லை இல்லை என்றும் வேதம்
சொல்வ தெல்லாம் மறுத்தும் நிற்கும் 40
பொல்லா தவர்கள் பூமியில் சிலர்தாம்
செல்வாக் குடனே திரியுமிந் நாளில்
ஜாதி தர்மம் காத்திடத் துடிக்கும்
நீதிமான் சிலரும் நின்போல் உலகில்
இருப்பதால் மட்டுமே இங்கு மழையைத் 45
தருகிறான் பகவான்; தர்ம்மே என்றும்
வெல்லு மாயினும் பொல்லா தாரின்
செல்வாக் கின்று சிறந்து நிற்பதால்
வற்புறுத் தாதே மகளைச் சிலநாள்
விட்டுப் பிடிப்பதே விவேக மாகும்; 50
அறிவிலார் எல்லாம் அறிவியக் கம்என
நெறிமுறை யின்றிப் பிழைபுரி கின்றனர்;
பிழைசெய் பலரும்உன் பெண்ணுக் காகக்
குழுமிப் பெரிய கூட்டமாய் வருவர்;
திட்டம் இன்றிநீ செயல்படின் உன்றன் 55
கட்டளை மீறிக் கயவர் துணையுடன்
ஓடிப் போகவும் கூடும்; பின்னர்
வாடிப் பயனிலை வருந்திப் பயனிலை;
ஆதலால் ஏதும் அறியா தவன்போல்
காதலுக்(கு) எதிராய்க் கபடமாய் நீதான் 60
நாடகம் ஆடுக; நாயினும் இழிந்த
மூடனை உன்மகள் முனிந்திட ஒருவழி
எண்ணி உரைப்பேன் ஏற்றுச் செய்க;
பின்னர் உனக்கொரு பீழை வராது;
மனம்போல் மகளை மணவினைப் படுத்தியும் 65
முனம்போல் ஜாதி முறைமை பேணியும்
வாழலாம் சொன்னதை மனதில் வைக்க
சூழேல் பிறவினை" என்று சொல்லிப்
போஎனப் பெருமாள் போக்கிய பின்னர்
வாஎன வந்த மனைவியை நோக்கி, 70
"மதுரை சென்றனை மகளைப் பார்க்கப்
புதுமை உண்டோ? புகல்க" என்னலும்
"பொல்லாங்(கு) உண்டுநும் புத்திரி ஒருவனைக்
கல்யாணம் செய்தனள் கழிசடை; நீரோ
ஊரா னுக்குப தேசம் செய்து 75
நேரம் போக்கி நிற்கிறீர்; ஜாதி
தருமம் காக்கத் தகுவழி யொன்றைப்
பெருமா ளுக்குப் பெரிதாய்ச் சொன்னீர்;
தரும நியாயம் மறந்து நம்மகள்
மறவன் ஒருவன் மனைவி ஆயினள்; 80
அத்தை என்றெனை அழைக்கிறான் அந்தக்
கட்டையில் போவான் கர்மம் கர்மம்;
பாங்கியில் பெரிய பதவியில் இருக்கிறான்
வாங்கும் பணத்தால் வசதியாய் இருக்கிறான்
பொண்ணுக்(கு) அவனும் பொருத்தமாய் இருக்கிறான் 85
என்ன இருந்தும் இழிந்த சூத்ரன்
அவன்நம் மருகன் ஆனது தகுமோ?
எவரும் நம்மவர் ஏற்பரோ இதனை?
பெற்றவள் சொல்லிப் பிதற்று கின்றேன்
வெற்றிலை மென்று விட்டம் நோக்கி 90
எதுவும் பேசா திருக்கின் றீரே
இதுதான் பதிலோ? இயம்புவீர்" என்ற
ஆம்படை யாளை அமைதிப் படுத்தி,
"ஏன்பதைக் கின்றாய்? ஏற்றநம் சனாதன
தருமத் திற்குத் தாழ்வென எண்ணிப் 95
பொருமு கின்றாய் புரியா தவளே
கோத்திரம் பார்த்துக் குலமும் பார்த்து
சாஸ்திரம் பார்த்து ஜாதகம் பார்த்து
மகளுக் கேற்ற வரனைத் தேடிப்
பகலும் இரவும் பலப்பல ஊர்களில் 100
அலைந்தேன் பலரை அணுகினேன்; நமது
குலத்தினர், மகளைக் கொள்ள வில்லை;
வரதட் சணையும் சீரு மாக
ஒருலட் சம்வரை உம்மிடம் இருந்தால்
பேசுக இன்றேல் பேசா(து) எழுகெனக் 105
கூசுதல் இன்றிக் கூறினர் என்பதும்
ஏலா மையினால் என்செய் வதென
நாளும் எண்ணி நலிந்தோம் என்பதும்
இருபதைத் தாண்டி ஒருபது வயதை
நெருங்கினள் மகள்என நினைந்து நினைந்து 110
வருந்தி நின்றோம் என்பதும் நீதான்
அறிந்தவள் அன்றோ? அறிந்தும் அவள்ஒரு
வரனைத் தானே வரித்துக் கொண்டது
முறையோ என்று முறையிடல் ஏனோ?
வருண தர்மம் வளைந்த தாயினும் 115
மருகன் சூத்ர மறவன் ஆயினும்
பெண்ணை நன்கு பேணுவன் ஆயின்
எண்ணி வருந்த இடமிலை; மேலும்
சூத்ரன் ஒருவனைத் தொடர்ந்து நம்மவள்
வேற்றிடம் சென்றதில் வேதனை யில்லை, 120
ஆத்துக் காரியாய்ச் சூத்ரப் பெண்ணை
ஆக்கி நம்மவன் அக்ரகா ரத்துள்
கொண்டு வருவதே கொடுமை; அதனை
என்றும் நம்மவர் ஏற்றுக் கொள்ளார்;
மறவ னோடு மகள்வா ழட்டும் 125
உறவு சொல்லி உரிமையால் அவனை
வரவழைக் காமல் மாதம் ஒருமுறை
இருவரும் அவ்விடம் இணைந்தே சென்று
வருவோம் கவலையை மாற்றுக" என்றனர்
வருண தருமம் வளர்க்க உழைக்கும் 130
அனந்தன்; அவர்மனை யாட்டியும்
நினைந்தே ஏற்றனள் நேரிதாம் என்றே.
Tuesday, June 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment