Friday, June 18, 2010

இயல் - 26

புரட்சியின் வாயில்

கழுதூர் வழுதூர் கணியூர் மணியூர்
தொழுதூர் மருதூர் தோகையூர் முதலிய
ஊர்களில் ஒருமத ஒடுக்கு முறையால்
சீரழி வுற்ற சேரியர், பிறமதம்
மேவிய தறிந்து, மேலவர் கொடுமையால் 5
நாவலூர் அகத்தும் நலிந்த சேரியர்
தம்மதம் துறக்கவும் தகவுடை மதமென
இன்னொரு மதத்தில் இணையவும் விரும்பினர்
என்னும் உண்மையைச் சின்னத் தாயவள்,
"அன்னே! அரசி! அறிக" என, அரசியும் 10
தந்தை பெரியார் சாவு கேட்டு
நொந்தது போலும் நோயினள் ஆயினள்,
மாறும் மிடிவை மாரி யப்பனும்
மீறிடல் இன்றி வீழ்ந்து பட்டனன்
என்னும் உண்மை இன்னும் அவளைத் 15
தின்னத் தொடங்கிடத் திகைத்தவள் எழுந்து
மாரி யப்பனை நேரினில் காணச்
சேரியை நோக்கிச் சென்றனள்; மாரியும்
நொந்தவன் ஆதலின், வந்தவள் தன்னைச்
சிந்தையில் மகிழ்ச்சி சிறிதும் இன்றி 20
வருகெனச் சொல்ல, "அறிவியக் கத்தீர் !
பெருமையோ நுமக்கு பிறமதம் சேர்தல்?
கல்லென நீத்துக் காலைக் குத்தும்
முள்ளினை மிதித்தல் முறையோ? சொல்வீர்"
என்னலும் மாரி யப்பன் இயம்பினன்; 25
"இன்னல் உற்ற எம்மவர், இந்து
மதத்தின் நீங்கலும் மற்றவர்க் காக்கவோர்
மதத்தைச் சார்தலும் மாண்பெனக் கொண்டனர்;
மக்கள், சாதியோ மதமோ இன்றி
இப்பெரு நாட்டில் இணைந்து வாழ்தல் 30
இலையாம்; ஆதலின் எம்மவர் முடிவை
உளம்ஒப் பாமலே ஒற்றுமை கருதி
நின்றேன் எனினும் நின்னொடும் கலந்தே
இன்றொரு முடிவை எடுக்க எண்ணினேன்
நன்கனம் எண்ணி நவில்க" என, அரசி, 35
"பொன்மனச் செம்மால் ! புரிந்து கொண்டேன்
நும்நிலை; ஆயினும் நுவல்வேன் கேண்மின்!
செம்மை நெறியெனத் தெளிந்தோம் பெரியார்
சொன்ன நெறியை; தூய்மை இல்லாப்
புன்மை பலவும் தம்மகத் தடக்கிய 40
மதங்களின் நீங்கி வாழ்ந்து நாட்டில்
புதுமை செய்தலே புரட்சியாம்; அதனைச்
செய்து முடிக்கும் திறனும் தெளிவும்
மெய்யாய் நம்மிடம் விளங்குதல் அறிவீர்"
என்றவள் சொல்லி யிருந்த வேளையில் 45
குன்றாச் சிறப்பிற் கொள்கையன் அழகன்
வந்து சேர்ந்தனன்; மாரியை வணங்கி
"அன்பரே ! பலரும் அறியுமோர் செய்திதான்
உண்மையோ? உரைமின்" என்னலும் அரசி,
"உண்மையே; இங்குளோர் ஒருங்கு கூடித் 50
தம்துயர் நீங்கிடத் தக்க தீர்வுஎன
இந்த முடிவை எடுத்தனர்; இவரும்
தனியே நிற்பதோ? சார்வதோ? சொல்க என
எனையே கேட்கிறார் எண்ணிச் சொல்கிறேன்
தமிழர் காப்புக் கூட்டத் திற்கு 55
நமதருந் தலைவர் நாளை வர்கிறார்
மாறனார் இங்கே வருகையில் அவர்பால்
கூறுவம் மதத்தின் மாறுவம் என்று
சொல்வதை; அவர்தம் தூய அறிவால்
சொல்வதை ஏற்றுத் தொடர்வோம் பணிகளை 60
இங்கே அதுவரை இவருடன் அத்தான்
தங்கி யிருப்பீர்" என்று சாற்றிப்
போயினள் அரசி புரட்சியின்
வாயில் ஈதென மனத்தினுள் வைத்தே.

No comments:

Post a Comment