Monday, June 14, 2010

இயல் - 24

சிறுமையர் வைத்த தீ

தலைவர் மாறனார் தமிழர் காப்பு
விழாவில் பேச விருப்பது குறித்து
மாந்த நேயம் வளர்க்கும் நெறியைத்
தேர்ந்து தெளிந்த இளைஞர் சிலருடன்
நள்ளிர வாகியும் உள்ளத் தளர்ச்சி 5
இல்லை யாகி, ஏற்பன பேசிக்
காலையில் காணலாம் என்று கலையும்
வேளையில் அந்த வீதியின் கோடியில்
"தீ தீ அய்யோ தீதீ எந்தப்
பாவீ வைத்தனன் பற்றுதே" என்ற 10
கூக்குரல் கேட்டுக் குலைநடுக் குற்றுத்
தீக்கொழுந் தெழுந்து தெரிந்த திசையினில்
மாரி யப்பனும் மற்றவ் விளைஞரும்
சீறிப் பாய்ந்து சென்றனர்; ஆங்கே
கூரை களில்தீக் கொழுந்துவிட் டெரிந்து 15
வீறுடன் அடுத்த வீடுகள் தாவிப்
பற்றி எரிந்து படர்ந்தது கண்டு,
சுற்றி நின்றவர் துணையுடன் மாரியும்
ஙீடுகள் நுழைந்து விரைந்து விரைந்தே
ஆடுகள் மாடுகள் அகற்றி, வேண்டும் 20
பொருட்களை எடுத்தும் கொடுத்தும் பொறுப்புடன்
தெருவினில் வீசியும் தீயை அணைக்கத்
தண்ணீர் சுமந்து சாடியும் ஓடியும்
பெண்களை, வயதிற் பெரியர் சிறியரைப்
பொல்லா நோய்களாற் புலம்பியோர் தம்மைப் 25
பள்ளியுள் கோயிலுள் பாங்குடன் சேர்த்தும்
சுற்றிச் சுற்றிச் சுழன்று சுழன்று
முற்றும் தீயை அவிக்கும் முனைப்பொடும்
பிறரைக் காத்துப் பேணும் பெட்பொடும்
முறையொடு மாரி முயன்றும், முறையிலார் 30
இட்ட நெருப்பினால் ஏழையர் வாழிடம்
குட்டிச் சுவர்களாய் ஆன கொடுமையைத்
தொண்டுசெய் மாரியும், சுடுகதிர் பரப்பிக்
கொண்டுகீழ் வானில் கொஞ்சம் கொஞ்சமாய்
நிவந்த ஞாயி றோனும் தம்தம் 35
சிவந்த விழிகளால் சினந்து நோக்கினர்;
நிலம்நீர் காற்று வானம் நெருப்பென
உலகம் அறிந்த உயர்பே ரியற்கை
ஆற்றல் அய்ந்தும் மக்களை அழிக்கும்
ஆற்றல் உடையவே; ஆயினும் தீத்தொழில் 40
மாக்களின் கையில் மக்களை அழிக்கும்
தீக்கரு வியெனத் தீயே இருப்பதை
நினைந்து வருந்தி நின்ற மாரியை,
நனைந்த கண்ணராய் நாற்புறம் சூழ்ந்து,
"தீமை எவர்க்கும் செய்திலோம்; நாளெலாம் 45
ஊமையாய் உலவினோம்; உழைத்தோம்; ஆயினும்
இப்பெருந் தீமை இழைத்தவர் யாவர்?
எப்படி அறிவதாம்? எவரைச் சொல்வதாம்?
அனைத்தும் இழந்தோம்; அவலம் சூழ்ந்தது;
நினைத்தால் வெந்து நெஞ்சும் அழியும் 50
இந்நிலை மாற என்செய லாம்?" எனச்
சொன்னவர் தம்மொடு துயரில் மூழ்கிய
மாரி யப்பன் வருத்தம் மறைத்தே
ஆறுதல் கூறி, "அனைவரும் கேண்மின்!
கடுகிச் சென்று காவல் ரிடத்துஇக் 55
கொடுமை கூறிக் குற்றம் பதிந்து
மீள்வேன்; நீயிர் மிகுதுயர் மறந்து
சூழ்நிலைக் கேற்பத் தொடர்பணி யாற்றுக"
என்று கூறி இளைஞர் சிலருடன்
சென்று காவல் நிலையத் தலைவரை 60
நேரில் கண்டு சேரியில் நிகழ்ந்ததைக்
கூறினன்; தலைவர் குற்றம் பதிந்திட
மறுத்தனர்; அத்துடன் "நீயும் உன்னுடன்
பொறுப்பிலாச் சிலரும் வெறுப்பன செய்தே
ஊரில் குழப்பம் உண்டா தற்கும் 65
சேரியில் இரவில் தீப்பிடித் தற்கும்
அடிப்படை யானதாய் அறிகிறேன்; சட்ட
விதிப்படி உன்னைச் சிறையினுள் வீழ்த்த
முடியும் ஆயினும் முதல்முறை யானதால்
விடுகிறேன் செல்க" என விளம்பிய காவல் 70
துறையின் தலைவர்முன் சுடர்முகம் தூக்கி
அறைந்தனன் மாரி; "அய்யா! சட்டம்
வளையு மானால் வலிந்த சான்றுடன்
தளைசெய்(து) என்னைச் சிறையுள் வைக்கலாம்;
எந்தையைக் கொல்ல வந்தவன் இவன்என 75
முந்துநாள் குற்றம் முறையாய்ச் சொன்னோம்;
அன்னோன் விடுத்தே அடக்கமாய் வாழும்
என்னை வீழ்த்திட எண்ணி நிற்கிறீர்;
நன்றநும் கடமை நாடகம்; எம்மவர்
இன்று விழிப்புடன் இருக்கிறார்; எம்மைக் 80
காக்கும் திறனும் காவலர் நுந்தம்
போக்கும் அறிவோம்; போகிறோம்; விரைவில்
விடியல் தோன்றும்; வெளிச்சம் பரவும்;
அடிமைத் தளைகள் அறுபடும்; நாங்கள்
புதிய உலகம் செய்து நும்மனோர் 85
விதியை எழுதுவோம்" என்று வீறுடன்
முழங்கிய மாரியாம் மொய்ம்பினன்
கிளர்ந்து நடந்தனன் கிளைஞர் தொடரவே

No comments:

Post a Comment