Tuesday, June 22, 2010

இயல் - 30

விடுதலைபுரம் தோற்றம்

பேரொளிப் பகலவன், பெரியார் போலக்
காரிருள் நீக்கிடக் காலை மலர்ந்தது
சேரியர் என்னும் சிறுமையின் நீங்கிச்
சீரியர் ஆகிய சிறப்பினர் அனைவரும்
முந்திய இரவில் மூதறி வாளராம் 5
சிந்தனை சிறந்த திருமாற னார்தம்
அறிவுரை ஏற்று, அவலமே விளைத்த
நெறியாம் சாதி மதங்களின் நீங்கிய
திறத்தினை எண்ணியும் அதனால் சேர்ந்த
சிறப்பினை நினைந்தும், சிந்தை மகிழ்ந்து, 10
விடுதலை புரத்தின் விரிந்த திடலில்
நடைபெற விருக்கும் நன்மண விழாவினை
எண்ணிக் களிப்புடன் இருந்த வேளையில்,
முன்னாள் நிலக்கிழார், முகத்தில் பொலிவொடும்
வந்து நின்று மற்றையோர் துணையுடன் 15
பந்தல் அமைக்கும் பணியினைத் தொடங்கினர்;
நண்பகற் பொழுது நண்ணு முன்னம்
எண்ணிய வாறே எல்லாச் சிறப்பும்
உடைய பந்தலும் ஒலிபெருக் கிகளும்
திடலில் அமைத்துத் திரும்பினர் பெருமாள்; 20
மேலை வானில் ஞாயிறு படூஉம்
மாலைப் பொழுதும் வந்தது; மகிழ்வின்
எல்லை கண்டவர் இவர்தாம் என்று
சொல்லத் தக்க துடிப்புடன் திடலில்
இருவேறு பாலருள் இளையரும் முதியரும் 25
திருவிழாச் சிறப்பினைச் சிந்தையில் தேக்கி
வந்து கூடினர்; மாத்தமிழ்க் கவிஞன்
செந்தமிழ்த் தலைவரின் சிறப்பினைச் சொன்ன,
"தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும் 30
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்" என்னும் பாடல்
செவிகளை நிறைக்கச் சிலிர்த்து நின்றோர்
அனைவரும் பெரியார் ஆற்றிய தொண்டினை 35
நினைவில் நிறுத்தி நெஞ்சக மெல்லாம்
பொங்கி நின்ற போதில், ஓர்இளைஞர்
மேடை ஏறி விழிப்பினை நல்கும்
பாடலை இசையுடன் பாங்குறப் பாடினர்

(வேறு)
மடமையை நீக்கிடும் வழியொன் றிருக்குது
வாருஙுகள் தோழர்களே! - நம்மை
வாட்டிடும் தொல்லைகள் தீர்த்திட ஒன்றாய்ச்
சேருங்கள் தோழர்களே (மடமையை)

பகுத்திறி வாளராம் பெரியார் காட்டிய
பாதையிலே செல்லுவோம் - மூடப்
பழக்க வழக்கங்கள் தீமைகள் அனைத்தையும்
பகுத்தறிவால் வெல்லுவோம் (மடமையை)

சாதி மதங்களால் சாமிக ளால்வந்த
தாழ்வு நிலை பாரீர் ! - அந்தத்
தாழ்வை அகற்றிடச் சாதி மதங்களைத்
தகர்த்தெறி வோம்வாரீர் (மடமையை)

ஒருசமு தாயமாய்ப் பகுத்தறி வாளர்கள்
ஒன்று திரண்டிடுவோம் - வாய்க்கும்
திருமண உறவுகளால் நம்சமூகத்தைச்
சீர்பெற நிறுத்திடுவோம் (மடமையை)

(வேறு)

பண்ணிசைப் பாடலைக் கேட்டோர் பலரும் 40
எண்ணம் விரிந்துநல் எழுச்சி பெற்று
நின்ற போதில் நிகரில் மாறனார்
அங்கு வந்தனர்; ஆர்த்தனர் அனைவரும்;
மேடையில் வரிசையாய் விளங்கிய இருக்கையில்
ஆடவர் மகளிர் அனைவரும் வியக்க 45
அரசியும் மாரியும் அமர்ந்தனர் ஒருபால்;
அழகனும் தமிழும் அமர்ந்தனர் மறுபால்;
அவர்தம் நடுவே மாறனார் அமரவும்,
"இவர்தம் மணவிழாத் தலைமை ஏற்றுச்
சிறப்புச் செய்கெனச் சீர்சால் விடுதலை 50
புரத்தினர் சார்பில் புகழினோய்! தங்களை
வேண்டு கின்றேன்" என்றோர் இளைஞர்
மூண்டநல் லன்புடன் மொழியவும், வளர்மதி
வரவேற் புரைக்கும் வாய்ப்பினை ஏற்றே
உரையாற் றியபின், ஒப்பில் மாறனார், 55
"அன்பும் அறிவும் ஆர்ந்த பெரியீர்!
இன்ப வாழ்வினை ஏற்க விருக்கும்
அரசியும் மாரியும் அழகனும் தமிழும்
உரைசால் வாழ்க்கை ஒப்பந்தம் ஏற்றபின்
நிறைவாய் வாழ்த்துரை நிகழ்த்துவேன்" என்று 60
குறையிலா மாரியைக் குளிர்ந்து நோக்கி,
"என்னைத் தொடர்ந்தே இயம்புக" என்னலும்
"அன்புசால் பெரியீர்! அன்னையீர்! வணக்கம்.
விடுதலை புரத்தின் வேலு, வள்ளியாம்
கெடுதல் இலாதார் கெழுதகை அன்பின் 65
ஒருமகன் மாரி யப்பனா கியநான்
பெருமகிழ் வுடனும் பெருவிருப் புடனும்
களங்கம் அகன்ற கருத்தினர் ஆகிய
விளங்கு புகழினர் விடுதலை புரத்தின்
பெருமாள் இலக்குமி ஆகியோர் பெற்ற 70
ஒருமகள் உமாஅ ராணி என்றும்
அறிவர சியெனும் அருந்தமிழ்ப் பெயரிலும்
அறியப் படுவோ ராகிய தங்களை
வாழ்க்கைத் துணையாய் ஏற்றும் வாய்த்த
வாழ்வில் ஏற்படும் வருத்தம் மகிழ்வெனும் 75
எல்லா வற்றிலும் இணைப்பங் கேற்றும்
இல்லறக் கடமையை இயற்றியும் இனிய
நண்பர்க ளாக நாட்டினர் போற்றப்
பண்புடன் திகழ்வோம் என்றுநல் லுறுதியை
ஏற்கிறேன்" என்றனன் மாரி; அரசியும் 80
"ஏற்கிறேன் யானும் எழுச்சிக் கவிஞராம்
மாரி யப்பனை மகிழ்வுடன் எனது
சீரிய துணைவராய்" என்றபின் இருவரும்
மாலை மாற்றிட, மகிழ்வுடன் அவையோர்
ஆரவா ரித்தே அவர்தமை வாழ்த்தினர்; 85
"அழகனும் தூய்தமிழ் அரசியும் தொடர்ந்து
மொழிவர் உறுதி மொழி" யென மாறனார்
உரைத்தலும் வாழ்க்கை ஒப்பந்த உறுதியை
உரைத்தனர் இருவரும்; உவகை மீதுற
வாழ்த்தினர் அவையோர்; மாறனார் மகிழ்ந்து 90
வாழ்த்துரை நிகழ்த்தினர்; "மானமிகு பெரியீர்!
பிறப்பினால் வருவதாம் என்று பேசிய
சிறப்பிலாச் சாதியும் சிறுமைசெய் மதமும்
புறக்கணித் தெழுந்து புதுச்சமு தாயமாய்த்
திரண்டு பலப்பல திறத்தினர் ஒன்றாய் 95
நேற்றே இணைந்தனம்; நிகரிலா வெற்றியை
ஈட்டினம் இன்றே இவர்தம் மணத்தால்;
சாதிசேர் உலகைத் தனியிர்ட் டறையென
ஓதினர் புரட்சிப் பாவலர்; நாமெலாம்
இருளின் நீங்கி ஒளிசேர் உலகை 100
அறிவின் துணையால் அடைந்தனம்; அறிவே
துணையென வாழ்வைத் தொடர்வோ மாயின்
இணையிலாச் சிறப்பினை எய்துநல் திண்ணம்;
மடமை விலகும் மானம் நிலைக்கும்;
அடிமைத் தளையும் அகலும்; அறிவைப் 105
போற்றா திருந்ததால் பொய்யர் நம்மிடை
வேற்றுமை பலவும் விளைத்தனர்; அறிவிலர்
அன்று படைத்த ஆண்டவன், விண்ணில்
நின்றே இந்த நீணிலம் முழுதும்
ஆள்வன் என்றனர்; அவனே ஏற்றத் 110
தாழ்வினைச் செய்தவன் என்றும் சாற்றினர்
பகுத்தறி வில்லாப் பலரும், பொய்யர்
உரைத்தவை எல்லாம் உண்மை என்றே
நம்பி வீழ்ந்து நலிந்த நிலையில்,
தந்தை பெரியார் தமிழின வீழ்ச்சியின் 115
அடிப்படை யதனை ஆராய்ந் தறிந்து
படிப்படி யாகப் பகுத்தறி வென்னும்
ஒளியைத் தமிழர் உணர்வில் புகுத்திநல்
வழியைக் காட்டினர் வாட்டம் மறைந்தது;
தமிழனத் துள்ளும் தந்நலம் விரும்பும் 120
சிறுமையர் சிலரால் தீயவர் ஆளுமை
இன்னும் தொடரும் இழிநிலை அறிந்து
வன்முறை யாளரை வகைபட எதிர்த்துநல்
அறிவினைப் பரப்பும் அரும்பணி யதனைச்
செறிவாய்ச் செய்வோம்; செந்தமிழ் மொழியே 125
எல்லா நிலையிலும் இன்றமி ழகத்தின்
எல்லையுட் சிறந்த இடத்தினைப் பெற்றிட
ஒல்லும் வகையால் உழைத்திடல் நன்றாம்
இல்லந் தோறும் குழந்தைகட் கென்றும்
தூய்தமிழ்ப் பெயரே சூட்டுக! மலர்விழி 130
வாய்மைச் செல்வி, வளர்மதி, தாமரை,
கனிமொழி, முத்து, கவின்தமி ழரசி,
இனிமை, தென்றல், எழிற்பூங் கொடியெனச்
செல்வன், அழகன், செந்தமி ழரசன்,
வள்ளுவன், இறையன், வளவன், பாரி 135
நன்னன், இளங்கோ, நாவுக் கரசென
எண்ணறு தமிழ்ப்பெயர் இருக்கவும் பிறமொழிப்
பெயர்சூட் டுவதால் பெருமையோ? பெரியீர்!
அயல்மொழிக் கென்றும் அடிமை ஆயினம்
என்பதைக் காட்டும் இழிநிலை யன்றோ 140
நம்மிடைப் பிறமொழி நாட்டுதல்? மேலும்
உரையில் எழுத்தில் பிறமொழி கலத்தலும்
முறையிலை என்பதும் அறிக" எனச் சொல்லி
"அரசியும் மாரியும் அழகனும் தமிழும்
நிறைவுறப் பெரியார் நெறியினில் வளங்கள் 145
எல்லாம் பெற்றுப் பல்லாண்டு வாழ்க" என
நல்லறி வாளராம் நயத்தகு மாறனார்
வாழ்த்திய ஞான்று, வளர்மதி யம்மை
சேர்த்தனர் ஒருமடல் திருமாற னாரிடம்;
மடலை விரித்து நோக்கினர் மாறனார்; 150
திடலில் இருந்தோர் திகைத்தனர்; அவர்தம்
திகைப்பினை நீக்கும் திறத்துடன், "பெரியீர்!
திகைத்திடல் வேண்டா மகிழ்ச்சியே கொள்வீர்!
இந்து மதத்தினர் அல்லர் என்றும்
எந்த மதமும் எமக்கிலை என்றும் 155
நேற்று விலகினோம்; வேற்று மதங்களை
ஏற்றோர் தாமும் எண்ணிப் பார்த்தபின்
தகவிலாத் தத்தம் மதங்களைத் துறந்து
நிகரில் லாதநம் நெறியினை ஏற்றுச்
சீருடைப் புதிய சமுதா யத்தில் 160
சேர விருப்பம் தெரிவித் துள்ளனர்"
என்று மாறனார் இயம்பிடக் கேட்டு,
நன்று நன்றென அவையினர் நவில,
விரும்பியோர் தம்மை மேடைக் கழைத்துப்
"பெருந்துயர் விளைத்த பிணியாம் என்று 165
சாதி மதங்களைத் தவிர்த்துநாம் இங்கே
ஓதிய நெறியில் ஒன்றிட வந்த
இனியரை வாழ்த்தி நம்முடன் இணைப்போம்!
இனியும் வருவோர் எவரா னாலும்
வருக" எனச் சொல்லி மாறனார் தொடர்ந்து 170
பெருகிய மகிழ்வுடன் பேசினர்; "பெரியீர்!
புதிய விடுதலை புரத்தில் நாம்சில
விதிகளை ஏற்போம்; மேல்கீழ்ச் சாதிகள்
நம்மிடை இல்லை; நம்மைப் பிரிக்கும்
எம்மதச் சார்பும் ஏற்ப தில்லை; 175
மக்க ளிடையே மடமை வளரத்
தக்க செயல்களைத் தவிர்ப்போம்; நமது
நெறியினர் அலாத நெறியின ரோடு
அறவே மணவினைத் தொடர்புகள் அற்ப்போம்;
தனியார் உடைமை இனியிங் கில்லை 180
எனவோர் விதியும் இயற்றி அனைத்தும்
பொதுமை ஆக்கி விடுதலை புரத்தில்
புதுமை செய்தொரு புரட்சி விதையை
ஊன்றினம்; வேறுள ஊர்களில் தானும்
தோன்றிஇப் புரட்சி தொடரு மாயின் 185
ஆங்குள மக்களும் அவலக் கவலை
நீங்கி இன்புறூஉம் நிலைமை காணலாம்
உடைமை பொதுவெனும் உயர்பேர் அறத்தான்
விடுதலை புரத்தில் விளைந்ததால் இங்கினி
வறுமை அகன்று வளமையே தங்கும் 190
சிறுமை நீங்கிச் சிறப்பே நிலவும்;
எல்லா இளையரும் இன்றி யமையாக்
கல்வி கற்றலும் கற்ற பின்னர்
உடல்வலு வுள்ளோர் அனைவரும் உழைத்தலும்
கடனாம்; எவரும் கடமை மறந்தால் 195
உரிய தண்டம் உளதாம்; இதனை
அறிந்தே உழைப்பவர் அனைவரும் அவர்தம்
உழைப்பிற் கேற்ற ஊதியம் பெற்றுச்
சிறக்க வாழலாம் தெளிக" எனச் சொல்லி
மீட்டும் ஒருமுறை விளைபுகழ் மணவினை 200
ஏற்றோர் தம்மை இசைபெற வாழ்த்தித்
தலைவர் மாறனார் தகவுடன் அமரவும்
அலையெழும் கடலென அகமகிழ் பெருமாள்,
பலர்க்கும் நன்றி பகர்ந்தபின் நிறைவாய்
விளக்கி உரைத்தனர்; "விடுதலை புரத்தீர்! 205
நல்ல தமிழினம் நாமெலாம்; நம்மிடை
இல்லை வேற்றுமை; இழிந்த தாய
சாதியும் மதமும் தனியார் உடைமையும்
தீதென விலக்கினம்; தீயவர் நம்முடைச்
சாதிஎன்? மதம்என்? சாற்றுக! என்றால் 210
சாதியும் இல்லை மதங்களும் எமக்கிலை
கெடுதலைச் செய்யும் சாதி மதங்களின்
விடுதலை பெற்றுநல் அறிவினர் ஆயினம்
என்னலாம்; பின்னரும் இணைந்த நம்மை
இன்னர் எனப்பிறர்க்(கு இயம்பிட வேண்டின் 215
பெரியார் நெறியில் பீடுற நடக்கும்
'பெரியார்' என்னும் பிழையிலாப் பிரிவினர்
என்றே இயம்புவம்" என்றனர்; பகையை
வென்று வாகை சூடிய வீறுடன்
நன்றிது நன்றென முழங்கி 220
நின்றனர் பெரியார் நிலையினர் தாமே
முற்றும்

No comments:

Post a Comment