வாழ்த்த வந்தேன்
முறைப்பெண் அரசியின் முறைசார் காதல்
விருப்பம் அறிந்து விளக்கம் பெற்றபின்
இருவர் உள்ளமும் இணைவதே காதல்
ஒருதலைக் காதல் உயர்வா காதென
அறிந்தவன் ஆகலின், அழகன் தன்னுளம் 5
செறிந்த காதலைத் தீர்த்தனன்; அரசியின்
உள்ளம் கவர்ந்த ஒருவன், உயர்நெறி
செல்லும் இயல்பினன், செந்தமிழ் ஆர்வலன்,
மன்பதை காக்கும் மரபினில் என்றும்
தன்னலந் துறந்து தளரா(து) உழைப்பவன், 10
ஆதலால் அவனே அம்மான் மகளைக்
காதலால் மணந்து கைப்பிடித் தற்குப்
பெரிதும் தகுதி பெற்றவன்; அவனை
உரிமை உறவுடன் உடனே கண்டு
பேசுதல் நன்றெனப் பெருந்தகை அழகன் 15
மாசிலா மாரி வாழிடம் சேர்ந்தனன்;
ஆங்கவற் கண்ட அழகன், தன்னைப்
பாங்குடன் அறிமுகப் படுத்திக் கொண்டனன்,
அகம்மலி உவகையன் ஆகி மாரியும்
"அகத்தினுள் வருக" என அழைத்துச் சென்று 20
பழமும் பாலும் பண்புடன் அளித்தனன்
அழகன், மாரியை ஆர்வமாய் நோக்கி,
"அன்பரே! நும்மை அறிந்தவர் சொல்ல
முன்பே அறிவேன் ஆயினும் இன்றென்
அம்மான் மகளாம் அரசி வாயிலாய் 25
உம்மை முழுமையாய் உணர்ந்தேன்; என்றன்
நெஞ்சில் அவளை மணக்கும் நினைவு
கொஞ்சம் இருந்தது; கொள்கை வழியால்
நீயிர் இருவரும் நெருங்கி நிற்பதும்
தீயரை எதிர்த்துத் தெளிந்த காதலால் 30
இணைந்திட உறுதி ஏற்றி ருப்பதும்
அறிந்தபின் அரசியை அடையும் ஆசை
துறந்தேன்; அறிவைத் துறந்த மாமனை
மறந்தேன் உண்மைந மகிழ்ந்துநும் காதலை
வாழ்த்திச் செல்லவே வந்தேன்; உம்மை 35
வீழ்த்தஎன் மாமன் விரிக்கிறார் வலையைச்
சூழ்ச்சி எதனையும் தொலைப்பதும் உம்மைக்
காத்து நிற்பதும் கடனாக் கொண்டேன்"
என்றழ கப்பன் இயம்பிடக் கேட்டு
நன்றி சொல்ல, அஞ்சலாள் வந்து 40
கொடுத்த மடலை விரித்து மாரி
படித்தனன்; "பைந்தமிழ் அன்பரீர்! வணக்கம்
பகுத்தறி வாளராம் மக்கள் பலர்க்கும்
வகுத்த உரிமைகள் வாய்த்திடல் நன்றாம்
இயற்கை உரிமைகள் பலவும் இழந்து 45
செயற்கைத் தீமையால் சீரழி வுற்று
வாழுந் தமிழரைக் காத்து வளர்க்கும்
கோளுடன் ஊர்தொறும் கூட்டம் நிகழ்த்துக"
என்ற கட்டளை மடலை ஏந்தி
நின்ற மாரி யப்பனை நெருங்கி 50
"ஆரிஃ(து) அனுப்பினர்?" என்றழ கப்பன்
ஆர்வமாய் வினவ, "அறிவியக் கத்தின்
தலைவராம் மாறனார் தாமிஃ(து) அனுப்பினர்
உலைந்த தமிழரின் உரிமை காக்கவே"
என்று மாரி இயம்பிட, அழகனும் 55
"நன்றே எதிர்வரும் ஞாயி றன்று
குறிச்சியில் கூட்டம் சிறப்புடன் கூட்டுவேன்;
நீவீர் சிறப்புரை நிகழ்த்துக" என்றே
ஆவல் மீதுற அழகன் வேண்டலும்
"நன்று நன்று வருகிறேன் நும்மூர்" 60
என்று மாரி இசைவு நல்கி
உளம்நிறை அன்புடன் ஊர்செல
அழகனை மாரி அனுப்பினன் உவந்தே
Tuesday, June 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment