Friday, June 18, 2010

இயல் - 25

மதம் மாறுவோம்

சீரிய உழைப்பில் செல்வரை, இழிந்த
சேரியர் என்றும், தீண்டத் தகார்இவர்
என்றும் விலக்கி ஊரின் எல்லையில்
கொண்டு வைத்த கொடுமை ஏன்என
ஆய்ந்து காணும் ஆர்வம் இன்றி, 5
ஓய்ந்து தமிழர் உறங்கு தற்கும்
உறங்கியோர் என்றும் உணர்வுறா வண்ணம்
அறங்கள் இவையென அறம்இல் லவற்றைப்
பேசித் தமிழரைப் பிளவு படுத்தவும்
மாசுடை வேத மதநெறி வந்தது; 10
வருணம் நான்கும் வந்து நிலைத்தன;
பெருமை குலையப் பிறப்பால் உயர்வு
தாழ்வினை ஏற்றுத் தமிழர் தாழ்ந்தனர்;
'ஊழ்வினை ஒன்றே உயர்வினை' என்றனர்;
வந்த மதத்தை, மயங்கிய தமிழர் 15
அந்தநாள் ஏற்றதால் அடிமை ஆயினர்;
சாதிகள் பன்னூ றாகித் தமிழர்
மோதிக் கொண்டனர் முட்டிக் கொண்டனர்;
அந்த மதத்தால் அடிமைப் பட்டு
நொந்த தமிழர், நோவுதீர் வழியெனப் 20
பின்னர் வந்த பிறமதம் சார்ந்தனர்;
இன்றும் சாதி ஏற்றத் தாழ்வு
சொல்லும் மதத்தைத் துறந்து பற்பலர்
நல்ல தென்றே பிறமதம் நாடுதல்
அறிந்த சிலர்தாம், அறியா மையினால் 25
வருந்திய நாவலூர்ச் சேரி வாழ்நரைக்
கூட்டி மதம்மாறும் கோரிக்கை வைத்தனர்;
"காட்டில் கழனியில் கடுமை யாக
நாளும் உழைப்பவர் நாமே; எனினும்
சூழும் தொல்லைகள் நமையே சூழ்வதேன்? 30
உழைத்துக் கிடைக்கும் ஊதியம் பெற்றுப்
பிழைக்கும் நிலையிலும் பிறப்பால் நம்மைத்
தீண்டத் தகாத சேரியர் என்றும்
இந்த நிலைமை இறைவன் விருப்பால் 35
வந்தெ தென்றும் வாய்த்த விதியை
என்றும் எவரும் மாற்ற இயலா(து)
என்றும் சொல்லும் இந்து மதத்தை
ஏற்று வாழ்ந்தோம் என்ன கிடைத்தது?
தூற்றலும் தொல்லையும் துயரும் தாமே? 40
சேரிய ருள்சிலர் சிறக்கக் கற்றுநம்
ஊரினுள் நிமிர்ந்தே உலவுதல் கண்டும்,
அன்றுபோல் என்றும் அடிமையாய் இராமல்
இன்றுநாம் விழிப்படைந் தெழுந்தது கண்டும்,
பொறுக்க லாற்றாப் புன்மையர், நேற்று 45
நெருப்பு வைத்ததால் நிற்கிறோம் தெருவில்;
சேரிக் கோயிலுள் சிலையாய் நிற்கும்
மாரிதான் துணையாய் வந்தனள் கொல்லோ?
ஆதலால் சொல்கிறேன் அனைவரும் கேண்மின்
சூது நிறைந்ததும் தொல்லை தருவதும் 50
இந்து மதமே என்பதை உணர்ந்தும்
இந்து மதத்தை இன்றே துறந்தும்
பிறப்பால் உயர்வு தாழ்வு பேசாச்
சிறப்புடை மதத்தில் சேர்வோம்" என்றுஓர்
இளைஞர் ஆங்கே எடுத்துச் சொல்ல, 55
வளைந்த நெஞ்சுடன் வாழ்க்கையைக் கழித்தும்,
என்றும் விடியல் இல்லை இருளில்
ஒன்றி வாழ்தலே ஊழ்வினை என்ற
எண்ணத் துடனும் இருந்தோர் இடையே
உண்மை உரைக்கும் உறுதி யோடு 60
பேசினன் மாரி; "பெரியீர்! கேண்மின்
மாகடை இந்து மதத்தினைத் துறந்து
வேறு மதத்தில் சேர்வோம் என்று
கூறினர்; அந்தக் கொள்கையை மறுக்கிறேன்;
இந்து மதத்தால் இழிவு நமக்கு 65
வந்தது என்பதை மறுக்க வில்லை;
வல்லாண் மையினர் வலியிலார் தமக்குத்
தொல்லை தந்து சுரண்டும் கொடுமை
எந்த மதத்திலும் இருப்பதை நீவிர்
இந்தநே ரத்தில் எண்ணிப் பார்ப்பீர்; 70
ஒருமதம் நமக்கே உறுதுயர் தருமெனப்
பிறமதம் சேர எண்ணுதல் பிழே"
என்று சொன்ன எதிர்ப்புரை கேட்டு
"நன்று தம்பி நவில்க நாமே
எந்த மதமும் சார்தல் இன்றி 75
இந்த உலகில் வாழ இயலுமோ?"
என்று வினவிட, இயலும் இயலும்
என்றனன் மாரி; எங்ஙனம் என்பதை
இயம்பிடுக முன்பலர் எதிர்க்குரல் எழுப்பி,
"நயம்படப் பேசுவை; நாங்கள் உடன்படோம்; 80
இறப்பினும் தீரா இழிவினைச் செய்யும்
சிறப்பிலா மதத்தின் தீர்ந்தபின் நமக்கொரு
காவல் வேண்டும் ஆதலால் பிறமதம்
மேவலே நமக்கு மேன்மை தரும்" எனச்
சொன்னது கேட்டுத் "தொல்லையின் நீங்கிட 85
நன்னெறி அஃதே; நாமெலாம் வேறு
மதத்தில் இணைவோம்; மாற்றம் எந்த
விதத்திலும் சொல்ல வேண்டாம்" என்று
பலரும் ஒருங்கே பகர்ந்தபின் ஆங்கே
நிலவிய சூழலை நெஞ்சினிற் பதித்து, 90
மாரி யப்பனும் வளர்மதி அம்மையும்
சேரி வாழ்நருள் சிந்தனை சிறந்த
இளைஞர் சிலரும் ஏற்க வியலா
விளைவினைக் கண்டு மிகுந்த கவலை
உடையர் ஆகி, ஊரவர் கொண்ட 95
முடிவை மாற்ற முடியா தென்றே
தீமை இதுஎனத் தெரிந்தும்,
ஊமையர் ஆயினும் ஒற்றுமை கருதியே

No comments:

Post a Comment