Monday, June 21, 2010

இயல் - 29

சாதி மதங்கள் தகர்ந்தன

நாவ லூரின் நடுவே பரந்து
மேவிய திடலில் விளங்கிய மேடையின்
மருங்கே அரசியும் வளர்மதி யம்மையும்
அருந்தமிழ் மாரியும் அழகனும் ஆர்வலர்
சூழ நின்று தொடரும் இரவில் 5
நாளை விடியற்கு ஏற்பன நவில
இன்னே வருகுவர் ஈடிலா மாறனார்
என்ற விருப்புடன் எதிர்பார்த் தவராய்,
நின்ற வேளையில் நெடும்புகழ் மாறனார்
வந்து சேர வாழ்த்தொலி முழங்கப் 10
பேரூக் கமுடன் பெருமாள் வந்து
மாற னார்க்கு மாலை சூட்ட
வளர்மதி யம்மை வரவேற் புரைத்தனர்;
அழகனும் மாரி யப்பனும் அரசியும்
சுருங்கச் சொல்லிநம் தொல்பழஞ் சிறப்பினை 15
விளங்க உரைத்தபின் வெல்புகழ் மாறனார்
செந்தமிழ் மொழியின் சிறப்பும், சீர்த்தியும்,
அந்தநாள் தமிழர்தம் அறிவும், ஆற்றலும்
உரிமை வாழ்வின் உயர்வும் தமிழினம்
அடிமைப் பட்ட அவலமும் சீர்மிகு 20
வளர்மதி யம்மை, மாரி, அரசி,
அழகன் முதலியோர் அருமையும் உரைத்தபின்
"தாழ்ந்நு நிற்கிறோம் தமிழர்; அதனால்
வீழ்ந்த தமிழக மேன்மை கருதி
ஒல்லும் வகையால் உழைக்க" எனவும் 25
சொல்லித் தம்முரை தூய மாறனார்
நிறைவு செய்தனர்; நெஞ்சில் தங்கிய
உரையினால் மக்கள் உணர்ச்சி பெற்று
மாறனார் வாழ்கென மகிழ்ந்து வாழ்த்துக்
கூறிக் கலைந்தபின் குற்றம் நீங்கிய 30
பெருமாள், மாறனார் தம்மைப் பெரிதும்
விரும்பித் தம்முடன் விருந்திற்(கு) அழைக்கப்
புகழ்திரு மாறனார் பொருளுடன் அரசியைத்
திகைத்து நோக்கத் "திகைத்திட வேண்டாம்
மாற்றம் நிகழ்ந்த வகையினைப் பின்னர் 35
ஏற்புற இசைப்பேன் என்றன் அழைப்பினை
ஏற்பீர்" என்று பெருமாள் இயம்பி,
ஆற்றலன் மாரியை, அழகனை, மதியை
"வருக அனைவரும் மகிழ்வேன்" என்னலும்
பெருகிய களிப்புடன் பெருமாள் இல்லம் 40
சேர்ந்தனர் அனைவரும்; சின்னத் தாயை
"நேர்ந்த துணையிவள் நேற்று முதல்" என
விருந்தினர் தம்மிடம் பெருமாள் விளம்பிடப்
பொருந்திய கைகளால் வணங்கிநின் றவளைக்
கண்டவர் அனைவரும் களிப்பினில் மூழ்கினர். 45
மண்டும் அன்புடன் வந்தவர் தம்மை
விருந்துணச் செய்தபின் விருப்புடன் அவர்முன்
இருந்த பெருமாள், அனந்த ராமனை
நல்லவன் என்றே நம்பி அவனது
இல்லம் சென்றதும் பொல்லா அனந்தன் 50
மாரியை சேர்ந்தோர் வேறொரு மதத்தில்
சேர்வதை தடுக்க, மாரியின் துணையாய்
என்மகள் இருப்பதால் அவளையும் என்னையும்
கொன்றொழித் திடும்வகைக் கொலைஞர் சிலருடன்
திட்டம் வகுத்ததும் தீயவன் உறவை 55
வெட்டி நீங்கி வீடு வந்ததும்
எண்ணிப் பார்த்தபின் ஈடிலாக் கொள்கை
உன்னதே என்றுநான் என்மகளி டத்தில்
உரைத்தும் அறிக" என உரைசால் பெருமாள்
விரித்துரை செய்தது வியப்புடன் கேட்டு 60
மாறனார் அவரை மகிழ்வுடன் வாழ்த்திக்
கூறினர்; அய்ய! குற்றமில் லாத
அறிவியக் கத்தின் அருமை உணர்ந்தெம்
நெறியினை ஏற்றதை நினைந்து மகிழ்கிறோம்
அகவையால், கல்வி அறிவால், தூய 65
புகழ்சேர் வாழ்க்கையால் அன்றி மாந்தர்
பிறப்பால் உயர்வும் தாழ்வும் பேசுதல்
சிறப்பிலை; மாரியைச் சேர்ந்தோர் தம்மை
ஒருமதம் கீழ்என ஒடுக்கி வைத்ததால்
பிறமதம் நாடினர்; அஃதும் பிழையாம் 70
ஆதலால் இன்றே அவர்தமைக் கண்டு
பேதைமை அகலப் பேசிட வேண்டும்"
என்று புறப்பட ஏனையோர் தம்முடன்
"நன்றே அய்ய! நானும் வருவேன்
தூயநும் பணிக்குத் துணையா நிற்பேன் 75
தாயே! துணையே! தடையிலை நீயும்
வருக" என அழைத்துப் பெருகிய மகிழ்வுடன்
பெருமாள் தாமும் பீடுசேர் மாறனார்
தம்மைத் தொடர்ந்தனர்; சான்றோர் அனைவரும்
செம்மை நெறியினைத் தெளிந்தில ராகிய 80
எண்ணிலர் கூடி இருந்தவோர் திடலை
நண்ணின ராகவும் நலமே செய்யப்
போந்தனர் கொல்லோ? புன்மைசெய் மதத்தின்
நீங்குதல் தவறென நிகழ்த்தவோ? என்றே
அய்யுற(வு) உற்ற ஆசிலார் தம்மிடைத் 85
துய்யநல் லரசி தோன்றி மொழிந்தனள்;
"அன்புசால் பெரியீர்! அனைவரும் கேண்மின்
துன்பமே தொடர்ந்ததால் தூய்மையில் மதத்தைத்
துறந்து பிறமதம் தொடர விரும்பிய(து)
அறிந்துநம் தலைவர் அறிவுடன் பொருந்தும் 90
நல்வழி காட்டவும் அல்வழி ஈதுஎனச்
சொல்லவும் வந்துள்ளார்; தூயவ ரோடு
கலந்துரை யாடிக் கருத்தினைப் பகிர்ந்து
நலஞ்சேர் முடிவினை நாடுவம்" என்றலும்
"சார்ந்திம் மதத்தால் தலைமுறை பலவா 95
நேர்ந்த கொடுமைகள் நீயிர் அறிவீர்
கால மெல்லாம் கடுமையாய் உழைத்தும்
கீழோர் என்றே எம்மை மேலோர்
தள்ளி வைத்தும் தாழ்த்தியும் பலப்பல
அல்லல் விளைத்தனர் அதனால் நாங்கள் 100
இம்மதம் நீங்கிட எண்ணி வெறொரு
நன்மதம் சார்ந்திடல் நன்றென நயந்தோம்
பிழையோ?" என்றொரு பெரியவர் வினவப்
"பிழையிலை நுமக்குப் பிறப்பினால் இழிவு
சொல்லும் மதத்தைத் துறத்தல்; ஆயினும் 105
நல்ல மதமென நம்பி வேறொரு
மதத்தை நாடுதல் மாண்பிலை எந்த
விதத்திலும்" என்றே மாறனார் விளம்ப
"இந்த மதத்தின் ஏற்ற தாழ்வுகள்
அந்த மதத்தில் இல்லை" என்றோர் 110
இளைஞர் சொன்னதை ஏற்க மறுத்துத்
தலைவர் மாறனார் சாற்றினர்; தம்பி!
"ஒவ்வொரு மதத்திலும் உள்ளன குறைகள்
வெவ்வே றளவில்; எல்லா மதங்களும்
மக்களை மறந்து மகேசனை நினைத்தலே 115
தக்க தென்று சாற்று கின்றன
மக்களோ? மகேசனோ? அறிவுனோர் மதிக்கத்
தக்கவர் என்பது சாற்றுவன் கேண்மின்
மாயிரு ஞாலம் வாழ்உயிர் வரம்பில
ஆயினும் அவற்றுள் அரிய விலங்கெனத் 120
தக்க மாந்தர்தம் தனிப்பெருஞ் சிறப்புஎன்?
மற்றுள விலங்கின் மாறு பட்டு,
மாண்பயன் தருவன தராதன வகுத்துக்
காண்பன நிகழ்வன கருத்தில் இருத்தி
என்என எதற்கென ஏன்என வினவும் 125
மன்பெருஞ் சிறப்பின் வளர்பகுத் தறிவெனும்
உடைமையே; அதனால் உயர்ந்த மாந்தர்
மடமையின் நீங்கிய மாண்பின ராகிப்
பற்பல புதுமைகள் படைத்தனர்; ஆயினும்
சிற்சில வேளையில் இயற்கையின் சீற்றம் 130
கண்டதால் நடுங்கிக் காரணம் ஒருவன்
உண்டென நம்பி உலகைப் படைத்தவன்
அவனே என்றும் அவனில் லாமல்
இவண்ஓர் அணுவும் இயங்கா தென்றும்ய
வளரும் அறிவு தளரும் நிலையில் 135
சிலர்தாம் தமக்குத் தெரிந்தவா றெல்லாம்
இறைக்கோட் பாடுகள் இயற்றி மதங்களாம்
சிறைக்குள் மக்களைச் சிக்க வைத்தனர்;
இறைவனை நம்புக; எல்லாம் அவன்செய்
முறையென நம்புக; முழுமையாய் நம்புக 140
என்றே உலகின் எல்லா மதங்களும்
அன்றே உரைத்தன; அதனை ஏற்றதால்
ஏனெனும் கேள்வி எழுப்ப மறந்து
மானுடர் அறிவு வளர்ச்சி குன்றிட
ஏற்றத் தாழ்வும் வேற்றுமை பலவும் 145
போற்றத் தகுவன என்னும் பொல்லாக்
கொள்கை வளர்ந்து குறைகள் பெருகி
வல்லோர் எளியரை வதைக்கத் தொடங்கினர்;
மாந்தர் அறிவு மயங்கி மதங்களில்
வீழந்த திறமிது; வீழ்ந்தவர் எழவே 150
பெரியார் அறிவின் பெருமையைப் பேசினர்
அறிக" என மாறனார் அறைதலும் ஆங்கொரு
பெரியவர் வினவினர் "பீழை எமக்குத்
தருவதால் இம்மதச் சார்பி லிருந்து
நீங்கிட நினைந்தோம் நீங்கிய பின்னர் 155
ஈங்கொரு காவல் இன்றி நாங்கள்
வாழ்ந்திடக் கூடுமோ வகைபட மொழிக" என,
ஆழ்ந்து நினைந்தபின் அறிவுசால் மாறனார்
பகர்ந்தனர்; "பெரியீர்! பண்பிலா மதத்தை
இகந்தவர் அனைவரும் இணைவே றிலாத 160
பகுத்தறி வென்னும் பண்புசால் நெறியை
மதித்தே ஏற்று வாழ்ந்திடின் வேறொரு
காவல் எதற்காம்? கழறுக! இம்மதம்
தேவையில் லாமல் நமக்கு விதித்த
சாதியைத் துறந்து மதத்தையும் தவிர்த்தே 165
ஆதியாம் தமிழால் ஆர்ந்த அன்பினால்
ஒன்று படுவோம்; திருமண உறவும்
நன்றே காண்குவம் நமக்குள்" என்று
மாறனார் புதிய வழியினைத் தேர்ந்து
கூறலும் பெருமாள், "கொள்கைக் குன்றாம் 170
மாறனார் அவர்களே! மகிழ்வுடன் தாங்கள்
சாற்றிய புதிய சமுதாய அமைப்பில்
ஏற்றுக் கொள்க என்னையும் சாதியைத்
துறந்தே சின்னத் தாயைத் துணையென
விரும்பி ஏற்றேன்; விழுமிய என்மகள் 175
மாரி யப்பனை மணக்க விரும்பினள்
சேரியன் என்று மறுத்தநான் மாரியை
மருமகன் என்றே மகிழ்வுடன் ஏற்கிறேன்"
என்று வீறுடன் இயம்பிட, ஆங்கு 180
நின்ற அழகன் நெஞ்சம் கலந்து
மொழிந்தனன்; "பெரியீர்! முற்றும் உணர்ந்தீர்!
இழிந்தவர் நமருள் எவரும் இலர்என
அறிந்தனன் ஆதலால் வளர்மதி அம்மையின்
சிறந்தவோர் மகளை விரும்பினேன் அவர்தம் 185
விருப்பமும் அறிய விழைகிறேன்" என்றனன்
வளர்மதி மகள்தான், தாயை வணங்கி
உளம்நிறை விருப்பம் உரைத்தனள்; சாதிப்
பிரிவுகள் தகர்த்துத் திருமண உறவுகள்
விரிவது கண்டு, விம்மிதம் அடைந்து, 190
பெரியார் நெறியே பிழையிலா நெறியென
அறிந்து மகிழ்ந்து ஆங்கிருந் தோர்எலாம்
"எந்த மதமும் எமக்கு வேண்டாம்
இந்தப் புதிய நெறியினை ஏற்கிறோம்"
என்று முழங்க, இன்முகம் காட்டி 195
மாறனார் அவர்தமை வாழ்த்திட, எழுந்த
மாரி யப்பன், "சாதியின் நீங்கி
ஓரினம் ஆயினம்; ஊறுசெய் மதமெனும்
பிடியில் இருந்தும் பெற்றோம் விடுதலை;
மிடிமையில் இருந்தும் விடுதலை பெற்றிட 200
நிகராய் அமைந்த நிகரில் லாத
புகழ்ச்சமு தாயப் புதுமை தன்னை,
உடைமை பொதுவெனும் உயர்ந்த நிலையை
அடைதலும் தக்கதாம்; அதிலும் வெற்றி
பெற்றால் மட்டுமே பெரியார் கொள்கை 205
வெற்றி பெறும்" என விளம்பலும், மாரியின்
தந்தை எழுந்து, "தலைவரே எனக்குச்
சொந்த மான நன்செய் அனைத்தையும்
புதுவதாய் மலர்ந்தநம் பொற்புடைச் சமூகப்
பொதுமை ஆக்கினேன்" என்று புகலவும் 210
தனியார் உடைமை தகர்வது கண்ட
நனிபே ருவகையால் நல்லோ ராகிய
வேறு சிலரும் தத்தம் உடைமையைக்
கூறினர் பொதுவெனக் கூடியோர் அனைவரும்
பெருமகிழ் வெய்திடப் பெருமாள் தாமும் 215
"தருகிறேன் என்னைச் சார்ந்த உடைமை
அனைத்தும்" என்னலும் அகமகிழ் வுற்று
"நினைத்ததன் மேலாய் நிகழ்ந்தது; நேற்று
வரையிலும் சாதி மதமெனும் கொடிய
சிறையி லிருந்து சிறுமைப் பட்டோம்; 220
இன்று விடுதலை எய்தினோம் இனிநாம்
ஒன்று பட்ட உயர்சமு தாயமாய்
வாழ விருக்கிறோம்; மயக்கும் நெறிகளை
வீழச் செய்த விடுதலை புரமென
இந்தச் சேரியை இனிநாம் அழைப்போம் 225
எந்தப் பகைமை எதிர்வந் தாலும்
இணைந்தே வெல்வோம்" என்ற மாறனார்,
நினைந்தே தந்நிலை விளக்கம் நிகழ்த்தினர்
"அறிவுசால் பெரியீர்! ஈங்குளோர் அனைவரும்
பெரியார் நெறியில் பிணைந்தொரு சமூகமாய் 230
ஆனது மகிழ்ச்சியே; அறிவினைப் பரப்பிடும்
நானும் நும்மொடு நண்ணுதற் கேற்ற
தகுதியேன்; அஃதே தக்கதாம் அந்தத்
தகுதியைச் சாற்றுவேன்; சான்றீர்! என்றன்
ஒருமகள் 'தென்றல்' உயர்வினள் அவளும் 235
அருமை மகனாம் 'அந்தணன்' தானும்
பிறப்பினாற் சொலப்படும் சாதியை மறுத்துச்
சிறப்பாம் அறிவுத் திறத்தினர் தம்மைக்
காதல் துணையெனக் கைப்பிடித் துள்ளனர்,
காதலால் யானும் கருத்தொரு மித்துத் 240
தீதிலார் ஒருவரைத் திகழ்துணை யாக
அன்றே ஏற்றுக் கொண்டவன் என்பதை
இன்றுநீர் அறிய இயம்பினேன்; நுமக்கு
நன்னெறி காட்டும் நானும் விரும்பி
அந்நெறி நடப்பவன் அறிவீர்" என்று 245
மாறனார் கூறலும் மகிழ்ச்சியால் அனைவரும்
ஆரவா ரித்தே "அரும்பெருந் தலைவ!
மாரி அழகன் மணவிழாக் குறித்துக்
கூறுக" என்றனர். குற்றமில் பெருமாள்,
"மாறனார் தலைமையில் மணவிழா நாளையே 250
சீருடன் நடைபெறும்; சிறந்த விடுதலை
புரத்தில் வாழும் புதுச்சமு தாயப்
பெருமையர் அனைவரும் வருகென மகிழ்வுடன்
அழைக்கிறேன்" என்றனர் அனைவரும்
களிப்பினில் திளைத்துக் கலைந்துசென் றனரே. 255

No comments:

Post a Comment