Friday, June 18, 2010

இயல் - 27

தீயவர் திகைத்தனர்
நிலக்கிழார் பெருமாள் நெஞ்சினைப் பன்னாள்
அலைத்து நின்றஓர் ஆசையின் இலக்காய்
விளங்கிய சின்னத் தாயிடம் பன்முறை
உளம்நிறை விருப்பம் உரைத்திட விழைந்தும்
என்சொல் வாளோ? எதிர்த்துநிற் பாளோ? 5
தன்செய லால்உயர் தகுதியைக் கிறைகும்
வண்ணம் ஊரில் வழக்குரைப் பாளோ?
என்னும் அச்சம் இருந்ததால் நேற்று
வரையில் தயங்கி நின்றவர் இன்று
கரையை வெள்ளம் கடத்தல் போல 10
ஆசை மீதுற அகமெலாம் துள்ள
வீசு தென்றலின் மென்மை சேர்த்துச்
"சின்னத் தாயே! உன்னை விரும்பிப்
பன்னாள் இரவும் பகலும் உழன்றேன்
துணையை இழந்து துவளும் இருவரும் 15
இணைதல் தவறோ? இயம்புக" என்று
சொன்னது கேட்டுத் துணுக்குற் றவளாய்த்
தன்னிலை ஓர்ந்து, தக்கவா(று) எண்ணித்
தெளிந்தபின் தன்னை விழைந்துநின் றார்க்கு
மொழிந்நனள் தன்னிலை முறைமையால் "அய்ய! 20
எள்துணை இழந்தபின் இந்நாள் வரையில்
புன்சொல் எவரும் புகன்றிடா வண்ணம்
வசையின் நீங்கி வாழ்ந்து வருகிறேன்
அசைவுஎன் நெஞ்சை அண்டிய தில்லை.
இன்றுநும் விருப்பம் இயம்பிய பின்னரே 25
நின்றென் நெஞ்சம் நெகிழ்ந்த(து) எனினும்
காதல் மகளின் காதலைத் தீய
சாதி வெறியால் சாய்த்திட முனையும்
நீயிர், தாழ்ந்த நிலையின ளாம்எனைத்
தீய நிளைவுடன் சேர நினைப்பதாய் 30
எண்ணு கின்றேன் உண்மை தானே?
நன்மையோ? அறமோ? நவில்க" என்றனள்.
"மறைவாய் இணைந்து வாழ்ந்திடச் சாதி
முறையொரு தடையோ? இருவரும் விரும்பினால்
ஊர்அறி யாமல் உலகறி யாமல்
சேரலாம் இன்றே தெளிகநீ" என்றவர்
அவள்கைப் பிடிக்க ஆசையாய் அணுகிடத்
தவறெனவிலக்கிச் சாற்றினள் "அய்ய!
வருந்திய நும்உடல் வாட்டம் போக்கிட
விரும்பிஎன் உடலையே விரும்பினீர் யானோ, 40
ஆரும் துணையிலை ஆதலால் ஒருதுணை
சேரும் என்றால் சேரலாம், சேர்வதால்
கைம்மையின் நீங்கிப் பலரும் காணச்
செம்மையாய் வாழலாம் என்று தெளிந்தேன்
செயற்கையாம் சாதிப் பிணைப்பைச் சிதைத்தும் 45
இயற்கையே ஆண்பெண் இணை(வு)என ஏற்றும்
களவை மறந்து கற்புடன் வாழ
உளம்நிறை காதல் உளதேல் உரைக்க"
என்றவள் தெளிவாய் இயம்பிய பின்னர்க்
குன்றிய நெஞ்சுடன் குழப்பம் மீதுற 50
வீட்டின் நீங்கி விரைந்த பெருமாள்
நாட்டம் இன்றி நடந்தனர் தெருவில்,
ஆங்குஅவ் வேளையில் அனந்தன் சிலரொடும்
தீங்கினை விளைக்கத் திட்டமிட் டிருந்தார்
"சேரியில் வாழும் சிறுமையர் எல்லாம் 55
வேறு மதத்தை விரும்பி ஏற்றிட
ஒன்று கூடி உறுதி செய்தனர்
நன்றோ? சொல்வீர் நமக்கெலாம் மேலே
ஈசன் ஒருவன் இருக்கிறான் அவனே
நீசர் என்று நிலத்தில் சிலரைச் 60
சென்ற பிறப்பின் தீவினைப் பயனால்
இங்கு படைத்தனன். ஈசன் படைப்பை
மதிக்க மறுத்து மாரியாம் சேரியன்
எதிர்த்து நிற்கிறான்; இழிந்தவ ரெல்லாம்
வேறு மதத்தில் சேருவ ராயின் 65
கூறுமின் நம்மைக் கும்பிட்டு நிற்பரோ?
படைப்பின் சிறப்பைப் பாழாய்ப் போனவன்
உடைக்க முயன்றால் உலகம் உய்யுமோ?"
இவ்வா(று) அனந்த ராமன் இயம்பலும்
"எவ்வா றேனும் இழிந்தவர் முயற்சியைத் 70
தடுக்க ஒருவழி சாற்றுக" என்று
கடுத்த முகத்துடன் ஒருவன் கழறிய
வேளையில், அய்யர் வீட்டு வாயிலில்
காலை வைத்த பெருமாள் கலங்கிட
ஒருவன் சொன்னான்; "அறிவில் லாத 75
பெருமாள் மகளே பின்னணி இதற்கெலாம்
ஆதலால் அந்த ஆணவக் காரியை
மோதி அழித்து முடித்து விட்டால்
சேரியர் கொட்டம் தீர்ந்திடும்" என்னலும்
ஆரியச் சார்பின் அனந்த ராமன், 80
"நம்மதம் வாழ்ந்தால் நாமும் வாழலாம்
இம்மதம் அழிக்க எண்ணுவோர் தம்மைக்
கொன்றழித் தாலும் குற்றம் இல்லை
அன்று மதுரையில் அரியநம் மதத்தைக்
காத்திட எண்ணா யிரவரைக் கழுவில் 85
ஏற்றிக் கொன்றதால் அன்றோ நம்மதம்
நிலைத்த தென்பதை நீவிர் அறிக.
அலைகடல் துயிலும் அந்தப் பெருமாள்
பொல்லா அரக்கரைப் பூமியில் அழிக்கவே
நல்லவ தாரம் நாட்டினர் இந்தப் 90
பெருமாள் ஊரில் பெருந்தனக் காரனாய்
இருந்தும் மகளைத் தடுத்திடல் இன்றியும்
நம்மதம் காக்கும் நாட்டம் இன்றியும்
பொய்ம்மதம் இங்கு புகுவதை எதிர்க்கும்
முயற்சி இன்றியும் மூடனாய் வாழ்கிறான் 95
செயத்தக் கதனைச் செய்வீர்" என்னலும்
முரடன் ஒருவன், "மூடனாம் அந்தப்
பெருமா ளுடனவன் பெற்ற பெண்ணையும்
ஒன்றாய் ஒழித்தால் ஊர்க்கு நல்லதாம்"
என்றுரை செய்ய, இதுவரை வாயிலில் 100
நின்று கேட்டு நீள்சினம் உளத்தில்
கொண்ட பெருமாள் கூடி யிருந்தோர்
திடுக்கிடும் வண்ணம் திடும்என நுழைந்து,
"கடுத்தது மொழிந்த கயவன் யாரடா?
என்னையும் என்னிரு கண்ணெனத் தக்க 105
பெண்ணையும் ஒழிக்கப் பேதையர் கூடித்
திட்டம் வகுத்துச் செயற்படு வீரோ?
ஒன்றாய் வாழும் ஊரவர் தம்மை
இரண்டாய்ப் பிளக்க எளியரைத் தூண்டும் 110
சூதினர் நீரோ தூயவர்? உயர்ந்த
சாதியர் என்னத் தகுமோ?" என்னலும்
அச்சம் மறைத்தே அனந்த ராமன்
நச்சினர் போல நயவுரை பகரவும்
நரியனார் அனந்த ராமன் என்பதை 115
உரிய வேளையில் உணர்ந்து கொண்ட
பெருமாள், அனந்தன் பேச்சை மறுத்(த்)என்
திருமகள் வாழ்வினில் செம்மை சேர்த்திட
நல்வழி காட்டுவீர் என்றே நம்பினேன்
அல்வழி காட்டி அல்லல் விளைத்தீர் 120
சாதியைக் காப்பதே தக்கதென் றெனக்கு
நீதி சொல்லிச் சாதியில் வேறாம்
ஒருவனை நும்மகள் மணந்ததை ஒப்பிப்
பெருமகிழ் வுற்றீர் ! பேச்சுத் திறத்தால்
தன்னலம் சார்ந்து சாதிக்(கு) ஒன்றெனச் 125
சொன்து நீதியோ? தொடத்தக்கார் என்று
விலக்கப் பட்டவர் ஆயினும் ஊர்க்கு
நலஞ்செய் வோரே நாட்டில் உயர்ந்தோர்
என்பதை உணர்ந்தேன் இனியும் நுமது
புன்மொழி கேட்கும் புன்மையிங் கில்லை 130
ஒருவராய் இருந்து நீயிர்இவ் வூரினை
இருகூறு ஆக்கிடும் இழிசெயல் எதிர்த்து
வென்றி பெறுவேன் விரைந்து" எனத் திரும்பிச்
சென்றனர்; தீயவர் திகைத்தே
நின்றனர் பெருமாள் நெடுமொழி நினைந்தே.

No comments:

Post a Comment