எல்லாம் அவர் செயல்
ஊரில் பலரும் 'சாமி' என்(று) உயர்வாய்ச்
சீருடன் விளிக்கும் சிறப்பெனக்(கு) இருந்தும்
சேரியில் பிறந்த சிறுபயல் இன்(று)என்
நேரில் நின்று நினைத்ததைப் பேசினன்
பகுத்தறி வென்றும் இனநலம் என்றும் 5
வகுப்பு வேற்றுமை வளர்க்கும் வகையில்
நாய்க்கர் பேசி நாசம் விளைத்துப்
போய்ச்சேர்ந் தார்இனிப் பொல்லாங்(கு) இலைஎன
நினைத்த தெல்லாம் நீரில் உப்பினை
நனைத்தது போல நாசமா யிற்றே 10
ஈரோட் டான்ஓர் எட்டடி பாய்ந்தால்
வீறு கொண்டிவன் அவனிலும் விரைவாய்ப்
பாய்கிறான்; அதனால் பாழாய்ப் போன
நாய்கள் எல்லாம் நம்மைப் பார்த்துக்
குரைக்கத் தொடங்கின என்று குமுறிச் 15
சிரைத்த மண்டையின் உச்சியில் சிலிர்த்து
நின்ற குடுமியை நீவிய வாறே
சென்ற இராமனைத் தெருவில் கண்ட
அம்பி யொருவன், "ஆத்தில் நும்மகள்
வந்திருக் கின்றாள் மதுரையி லிருந்து" எனச் 20
சொன்னது கேட்டுச் "சொல்லடா அவளா
என்மகள்? மதுரையில் எவனோ ஒருவனை
ஆம்படை யான்என ஆக்கிய(து) அறிந்தபின்
வேம்பென அவளை வெறுத்து முழுகினேன்
போகிறேன் அவளைப் போக்குவேன்" என்று 25
வேகமாய்ச் சென்று வீட்டில் நுழைந்தனர்
மருகனும் மகளுடன் வரவில்லை என்பதை
உறுதி செய்தபின் உள்ளத் தெளிவுடன்
மகளைக் கண்ட மகிழ்ச்சியை மறைத்து
"மகளே! எனைநீ மதிக்க வில்லை 30
இழிந்த சூத்ரனை மணந்தாய் என்றுளம்
அழிந்தே உன்பால் ஆத்திரம் கொண்டு
பேசுவேன் என்று பேதலிக் காதே
ஆசைநோய் பிடித்த அக்ரகா ரத்துப்
பீடைகள் உனக்குப் பேசிய விலையும் 35
ஆடிய ஆட்டமும் அதனால் நமக்கு
நேர்ந்ததும் நினைந்தால் நின்னை விரும்பிச்
சேர்ந்த ஒருவனைச் சேவித் திடவும்
கோவில் கட்டிக் கும்பிட்டு நிற்கவும்
ஆவல் நெஞ்சில் மேவிடும்; ஆயினும் 40
வீட்டுத் திண்ணையில் வேலை இன்றிச்
சீட்டுக் கச்சேரி தினமும் நடத்திடும்
நம்மவா பேசுவா நாலு விதமாய்
அம்மவோ அதற்கேள அஞ்சுவேன்; ஆதலால்
நினைத்த போதெலாம் நீவா; உன்னை 45
நினைக்கும் போதெலாம் அம்மா வருவள்;
அப்பா நிலையை அறிந்துகொள்; என்சொல்
தப்போ?" என்று தவிப்புடன் கேட்கவும்,
"பொன்னைக் கொடுத்துப் போயழைத் தாலும்
என்னவர் இங்கு வாரார்; அவர்தாம் 50
அக்கிர கார ஆச்சா ரங்களை
எக்கா லத்தும் ஏற்பவர் அல்லர்;
என்னை விரும்பி ஏற்றதும் பிராமணம்
பெண்ணென் பதானால் அல்ல; அறிவு
நெறியாம் மாந்த நேய யுடைய 55
பெருமையர் அதனால், வெறுமையாய் அகவை
கடந்தும் கன்னியாய்க் காலம் கழித்துக்
கிடந்த என்பால் கிளர்ந்த அருளால்
பேசிய அவர்தம் பெருமை அறிந்து
மாசிலா அவர்க்கு மனைவிஆயினேன்; 60
வேதம் ஓதியும் மேனிலை சாற்றியும்
பேதம் மாந்தருள் பேசும் நம்மினும்
உயர்ந்தவ ராம்அவர் உங்களைக் காண
நயந்துநான் புறப்பட, நற்பண் புடணனே
போய்நீ வருகெனப் புத்தாடை நுமக்கும் 65
தாய்க்கும் வாங்கித் தந்தெனை அனுப்பினர்
என்னவர் தாமும் இனியபெற் றோரும்
கண்ணெனப் போற்றி என்னைக் காக்கும்
திறத்திற்(கு) ஈடுஇலை அறிவீர்" என்றுதன்
சிறப்பு நிலையை மகள்தான் செப்பவும் 70
"நல்லது மகளே ! உனது நாயகன்
பொல்லாச் சேரிப் புலையனில் லாமல்
மறவனாய் வாய்த்தது வரையில் சேமமே
குறையில் லாமல் வாழ்வதாய்க் கூறினை
என்னடி நகையிது! இரண்டு சங்கலி! 75
பொன்னோ? இல்லை போலியோ? சொல்" என
"என்னவர் பொன்னர் எனக்கவர் அளித்ததும்
பொன்னே ஈது போலி இலை" என
நகையுடன் "நீயிர் நம்புக" என்று
மகள்தான் உரைக்க மகிழ்ந்தவர், "எல்லாம் 80
அவன்செயல்" என்னலும் "அப்பா! எல்லாம்
அவர்செயல்" என்றவர் தனக்கணி வித்த
ஆழியைத் தருக்குடன் காட்ட, அனந்தன்
போலிச் சினமுடன், போடி! இந்தக்
குறும்புதான் இன்னும் குறைய விலைநீ 85
திரும்புவ தெப்போ? சிலநாள் தங்கிச்
செல்லலாம் இல்லையோ சொல்" என, அங்குநான்
இல்லை யானால் என்னவர் மிகுந்த
அல்லற் படுவர் ஆதலால் காலையில்
செல்வேன்" என்று சொல்லக் கேட்டவர், 90
"நல்லது மகளே; பசித்தது உண்ணச்
செல்கிறேன் என்று, திளைக்க உண்டபின்,
நெடிதாய் ஏப்பம் நீட்டி முழக்கி
அடியே! வாஎன ஆம்படை யாள்தனை
நெருக்கமாய் இருத்தி ஊர்க்கதை எல்லாம் 95
பெருக்கமாய்ப் பேசி ஓய்ந்தபின் மாரியை
ஒழிக்கும் வழியினை ஓர்ந்து
விழிக்கண் மூடினர் விரிப்பினில் வீழ்ந்தே.
Sunday, June 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment