திகைத்து நின்ற தீயவர்
அடிமையாய்ப் பலரையும் ஆக்கிட எண்ணிக்
கொடியவர் வளர்த்த குற்றமாம் சாதிப்
பிரிவினை பேசி, அறியா மையினால்
பெரியவர் ஒருவரைப் பிழையிலா மாரியின்
தாதையை வீதியில் தாக்கிய அதனால் 5
மோதல் மேலும் மூளலாம் என்ற
எதிர்பார்ப் புடனே இளையரும் முதியரும்
கதிரவன் மறையுமுன் கடமைகள் முடித்துப்
பறவைகள் போலப் பகல்தான் மாய்ந்தபின்
உறையுள் அகத்தே ஒடுங்கினர்; ஆயினும் 10
என்றும் பிறர்நலம் எண்ணி வாழும்
குன்றாச் சிறப்பின் கொள்கைக் குன்றாம்
மாரி யப்பன் வழக்கின் வழாமல்
ஊரின் நடுவண் உள்ள நூலகம்
சென்று மீள்கையில் சிறப்புடை மகளிர் 15
மன்றம் நுழைந்து வளர்மதி அம்மையைக்
கண்டு நாவலூர்க் கண்ணும் ஒருநாள்
தண்டமிழ் உரிமை தழைத்திட வேண்டிக்
கூட்டம் சிறப்புடன் கூட்டவும் இந்த
நாட்டினைச் சூழ்பல கேட்டினைக் களையும் 20
உயர்குறிக் கோளுடன் உழைக்கும் மாறனார்
அவர்களைச் சிறப்புரை நிகழ்த்த அழைக்கவும்
ஒப்பிலா அம்மையின் ஒப்புதல் பெற்றபின்
அப்பணி தொடர்பாய் ஆர்வலர் சிலரைக்
கண்(டு)அவர் உள்ளக் கருத்தும் அறிந்து 25
கொண்டு, மேட்டுக் குடியினர் பிறரைச்
சுரண்டவும் அடிமைத் தொழும்பராய் என்றும்
இருண்ட அறையில் இருத்தி வைக்கவும்
அன்றே எண்ணி ஆக்கிய கோயில்
என்ற அமைப்பின் எதிரே நீண்ட 30
வீதியில் இரவு வேளையில் வந்த
கோதிலா மாரி யப்பனைக் குறித்து
வந்தெதிர் நின்று "மாரி உனது
தந்தை நலமா? தாக்கப் பட்டதாய்த்
தெருவில் பேசினர் தெரிந்து கொண்டேன் 35
ஒருமகன் நீயும் ஊரில் அந்நாள்
இல்லை யாமே? என்று பிறர்க்குத்
தொல்லை விளைப்பதே தொழிலாக் கொண்ட
அனந்த ராமன் ஆர்வம் இலராய்
நினைந்து வினவ, நினைந்த மாரியும் 40
"எந்தை நலமே" என்ற அளவில்
முந்தினன் விடைபெற; மோதலுக் குரியதை
மீண்டும் விதைக்க விரும்பிய இராமன்,
"ஆண்டுகள் பலவாய் ஜாதியை அழிக்கப
பெரியவா ளெல்லாம் பேசியும் பயனிலை; 45
அறியா மையினால் அவனும் இவனும்
ஜாதியைச் சொல்லித் தாக்கிக் கொள்கிறான்
நீதியோ? சொல் என, நெஞ்சகம் மறைத்த
அனந்த ராமனைச் சினந்து நோக்கி,
"நினைந்து சொல்கிறேன் நெஞ்சிற் கொள்க; 50
அறியா மையினை வளர்ப்பதும் சாதிக்
குறிகளைச் சொல்லிக் கோள்மூட் டுவதும்
ஆர்என் பதூஉம் அறிவேன்; அறிந்ததைக்
கூறுவேன் கேண்மின் கொடிய சாதியால்
பிரிந்து தமிழர் பிளவுபட் டென்றும் 55
இருந்தால் மட்டுமே ஏற்றம் நுமக்கென
அறிந்துளீர் ஆதலால் அறிவுடன் தமிழர்
பொருந்திடா திருக்கப் புன்மைச் சாதியை,
மதத்தைக் கடவுளை வளர்த்து வருகிறீர்;
இதனை அறியா(து) இருக்கிறார் எம்மவர்; 60
பெரியார் வந்(து)இப் பேதைமை அகற்றும்
அரிய பணியை ஆற்றிய அதனால்
இன்றைய தமிழின இளைஞர் பல்லோர்
நன்றும் தீதும் நன்கனம் உணர்ந்து
புரட்சி நிகழ்த்தப் புறப்பட் டுள்ளோம்; 65
புரட்சி வெல்வதும் போலிகள் வீழ்வதும்
உறுதியாம்; விரைவில் புதியதோர் உலகம்
நிறுவுவோம்; அங்கு நீயிரோ நும்போல்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
கள்ளர் எவருமோ காலை வைத்திட 70
உடன்படோம் என்பதை உணர்க" என்(று) உரைத்து
நடந்தனன் மாரி; நடுத்தெரு அதனில்
திகைத்து நின்ற தீயவர் மேலும்
பகைத்தீ மூட்டிப் பார்க்கும் விருப்புடன்
விரைந்தனர் வீடு நோக்கி 75
அறந்தனைக் கொல்லும் ஆற்றினை நினைந்தே
Sunday, June 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment