Monday, June 7, 2010

இயல் - 14

                   அழகனும்    அம்மானும்

சந்தனப்    பொதிகைக்    குன்றினைச்    சார்ந்ததும்
செந்தமிழ்    வளர்க்கும்    இன்றமிழ்ப்    புலவரைத்
தன்னகத்(து)    அடக்கிய    தருக்குடன்    நிற்பதும்
அன்பகம்    நல்ல    அறிவகம்    ஈதெனப்
பண்புளோர்    உரைக்கும்    பான்மைத்    தாயதும்            5
வண்புகழ்    ஈட்டுநர்    மகிழ்ந்து    வாழ்வதும்
சமயப்    பிரிவும்    சாதிப்    பிரிவும்
அமையப்    பெற்றதே    ஆயினும்    அவற்றால்
ஏற்றத்    தாழ்வும்    இகலும்    இன்றிப்
போற்றத்    தகுமொரு    பொதுமை    கொண்டதும்            10
குடிப்போர்    ஊரின்    குடியலர்    என்றே
அடித்து    விரட்டும்    அறம்நிலைத்    திருப்பதும்
கோவிலில்    ஆடு    கோழிகள்    கோறலும்
தீவினை    வளர்த்துச்    சிறுமை    சேர்க்கும்
ஆட்டமும்    பாட்டும்    ஆண்டவன்    பெயரால்            15
நாட்டலும்    தவிர்த்து    நன்னெறி    காப்பதும்
குறையோ    குற்றமோ    கூடினால்    முறைசெய
அறங்கூ    றவையம்    அமைந்தி    ருப்பதும்
பொருநை    என்னும்    பொதிகை    வராவால்
பெருமை    பெற்றுப்    பெருவளம்    செறிவதும்            20
புரட்சிக்    கவிஞர்    பெயரால்    மன்றம்
நிறுவி    அவர்வழி    நின்று    நெடும்புகழ்
கொண்டது    மாகிய    குறிச்சி    என்னும்
தண்டலை    சூழ்ந்து    தழைத்த    ஊரினில்  
அறிவர்    எனத் தகும்    சித்தர்    அருளிய            25
செறிவுடை    மருத்துவம்    செய்யும்    ஒருவன்;
உடற்பிணி    யோடு    வருவோர்க்(கு)    உற்ற
மடமைப்    பிணியும்    மாற்றும்    மாண்பினன்;
பெற்றோர்    இழந்தவன்;    ஊரினர்    அனைவரும்
உற்றார்    என்றே    உரைக்கும்    உளத்தினன்;            30
புரட்சிக்    கவிஞர்    மன்றத்    தலைமைப்
பொறுப்பினை    ஏற்றுச்    சிறப்பினைப்    பெற்றவன்;
அழக்கப்    பன்எனும்    அருந்தமிழ்ப்    பெயரென்;
பழகுதற்    கினியன்    பலநா    ளாக
முறைப்பெண்    இராணியை    முறையுடன்    மணக்க            35
விருப்பம்    உளத்தே    மிக்க்கொண்    டிருப்பவன்;
ஒருநாள்    நாவலூர்    சென்று    உரிமையால்
பெருமா    ளித்தில்    பேசினன்.    பெருமாள்,
"எங்கை    மகன்நீ    எனினும்    உன்னிலை
இங்குள    தகுதிக்(கு)    ஈடோ?    உனது            40
நாலு    குறுக்கமும்    நாடிப்பார்த்(து)    ஈட்டும்
நாலு    காசும்    என்கால்    தூசே
இந்த    நினைப்பை    ஏந்திக்    கொண்டுநீ
எந்த    நாளும்    இங்கு    வருதல்
ஒழிக" என    வெறுப்புடன்    உரைத்தனர்;    அந்த            45
இழிவினால்    உள்ளம்    இடிந்த    தாயினும்
இவர்தம்    பண்பிது    இராணிதான்    எந்த்த்
தவறும்    இலாதாள்    தக்க    வேளையில்
முறையாய்    அவள்பால்    மூண்ட    காதலை
அறிவிப்    பேன்எனை    அவளும்    விரும்பினால்            50
எதிர்ப்பை    எதிர்ப்பேன்    பொறுப்பேன்    அதுவரை
என்று    திரும்பி    இருந்த    அழகனைச்
சென்று    காணச்    செருக்கினர்    பெருமாள்
குறிச்சியை    அடைந்து    குறுகினர்மருந்தகம்
வெறிச்சென்    றிருந்தது    வெளியிலும்    உள்ளும்            55
ஒருவரும்    இலாமையால்    உண்மை    அறியத்  
தெருவினில்    சென்ற    ஒருவரை    விளித்து,
"மருத்துவர்    எங்கே?    அவர்தம்    மாமன்;
கருக்கினில்    கன்டு    தொலைவில்    உள்ள
ஊர்செல    வேண்டும்    உதவுக"    எனலும்             60
"ஊர்ப்பொது    மன்றில்    ஒருவிழா;    மருத்துவர்
அங்கிருக்    கின்றனர்    அய்ய!    வருக
தங்களை    அவர்பால்    தக்க    வாறு
சேர்ப்பேன்"    என்றவர்ப்    பின்னே    சென்றார்.
ஊர்பொது    மன்றின்    உயர்மே    டையினில்             65
அழகப்    பன்அவைத்    தலைமை    ஏற்று
விழாவினை    நடத்தும்    மேன்மை    கண்டும்
மருமகன்    ஊரார்    மதிக்கும்    வண்ணம்
பெருமை    யுடன்திகழ்    பெற்றி    உணர்ந்தும்
அகத்தின்    ஒருபால்    அரும்பிய    மகிழ்ச்சியை            70
முகத்தில்    தேக்கி    முறுவல்    காட்டிச்
சீருடன்    மருமகன்    திகழ்ந்திடத்    தன்மகள்
சேரியை    விரும்பிய    சிறுமையை    நினைந்து
நிலக்கிழார்    பெருமாள்    மேடையை    நெருங்கிக்
கலக்கமோ(டு)    அங்குக்    காத்து    நின்றவர்           75
மருகன்    சொன்ன    வணக்கம்    ஏற்றபின்
ஒருபால்    மேடையில்    உவகையோ(டு)    அமர்ந்தனர்.
இருபா    லவரும்    இணைந்தும்    தனித்தும்
திருவிழாச்    சார்ந்த    சிறப்பெனச்    சீரிய
ஆடலும்    பாடலும்    அளித்தபின்    மகளிர்          80
கூடி    ஆடினர்    கும்மி    பாடியே:

                          (வேறு)
"கும்மியடி    பெண்ணே    கும்மியடி    நல்ல
கொள்கை    விளங்கிடக்    கும்மியடி
நம்மை    அடிமைப்    படுத்திடும்    தீமைகள்
நாட்டைவிட்    டோடட்டும்    கும்மியடி

ஆணுக்குப்    பெண்கள்    அடிமையென்    றேமநு
ஆக்கி    வைத்தவோர்    அநீதியினைப்
பேணிப்    புரப்பவர்    யாரெனி    னும்அவர்
பேதைய    ராமென்று    கும்மியடி

வந்த    மதத்துடன்    வந்த    வடமொழி
வாலாட்டம்    இன்னுமிங்    கோயவில்லை
செந்தமிழ்    நாட்டினர்    சேர்ந்து    விரைவினில்
தீர்த்திடு    வோமென்று    கும்மியடி

செந்தமிழ்    நாட்டினை    ஆளவே    றோர்மொழி
தேவியில்    லையென்றி    கும்மியடி
எந்த    மொழியினும்    ஏற்றம்    உடையதாம்
எங்கள்    தமிழென்று    கும்மியடி

தில்லியி    லேதமிழ்    நாட்டின்    கடிவாளம்
சிக்கியி    ருப்பது    சிக்கலன்றோ
நல்லுரி    மைபெறத்    தக்க    வழியினை
நாடிடு    வோம்என்று    கும்மியடி

மூடப்    பழக்க    வழக்கம்    அனைத்தையும்
மூளும்    அறிவின்    துணைகொண்டே
ஓட    விரட்டிட    ஆண்களும்    பெண்களுப்
உறுதிகொள்    வோமென்று    கும்மியடி

புரட்சிஎனுஞ்    சொல்லின்    பொருளு    ணர்ந்தேஉயர்
புரட்சிக்    கவிஞர்    வழிநடந்தே
மிரட்சி    அகற்றித்    தமிழ்மாந்    தர்தமை
விழிக்கச்செய்    வோமென்று    கும்மியடி"
                   (வேறு)

கும்மிப்    பாட்டு    ஆட்டமும்    முடிந்தபின்
செம்மை    சான்ற    சிற்றுரை    நிகழ்த்தி
நிறைந்த்து    விழாவென    எழுந்தழ    கப்பன்
நடந்ததை    மறந்து    நற்பண்    புடனே            85
அம்மான்    தம்மை    அழைத்துக்    கொண்டு
தன்மனை    வந்து    பால்பழம்    தந்தபின்
என்னைநும்    வரவு? எனப்    பெருமாள்    இயம்பினர்;
"என்மரு    மகனே!    முன்னர்    ஒருமுறை
பெண்கேட்டு    வந்தாய்;    பேதையேன்    பிழைபட            90
உன்னைப்    பேசி    ஊறு    செய்தேன்
என்மகள்    உன்புகழ்    இன்றெனக்(கு)    உரைத்தனள்
என்பிழை    பொறுத்தும்    இன்பமே    நினைத்துமென்
மகளை    மணந்து    வளமுடன்    வாழ்க" என
அம்மான்    உரைக்கவும்    அழகனாம்    உள்ளச்            95
செம்மையன்    சிறிதே    திகைத்தனன்;    ஆயினும்,
அகத்தில்    அரசிபால்    அரும்பிய    காதல்
சிறந்தே    உளத்தில்    நிறைந்து    நின்றதால்
மலர்ந்த    முகத்துடன்    மாமனை    நோக்கி  
"என்னை    இராணியும்    ஏற்பனள்    ஆயின்            100
பின்னை    ஒருதடை    பேசுதற்(கு)    இலை" என
மருமகன்    சொல்லவும்    மாமனார்    மகிந்து
"வருகிறேன்    விரைவில்    மணநாள்    உரைப்பேன்"
என்று    கூறி    ஏகினர்;    அவர்தம்
அன்றைய    நடத்தையை    அய்யுற்    றதனால்            105
சென்றனன்    மறுநாள்    அரசியைக்
கண்டு    பேசுதல்    நன்றெனக்    கருதியே.

No comments:

Post a Comment