நாமே நமக்குக் காவல்
செயற்கையாம் சாதிகள் சிதைப்போம் என்றும்
இயற்கையாம் மொழியால் இணைவோம் என்றும்
மேனாள் விழாவில் விளம்பினன் மாரி;
ஆனால் தீயராம் அறிவிலார் கூடிச்
சாதியைச் சொல்லித் தமிழன் மாரியின்
தாதையை மோதித் தாக்கினர் என்றும்
குருதி சிந்திக் குற்றுயி ராக
மருத்துவ மனையில் மயங்கிய நிலையில்
கிடக்கிறார் என்றும் கேள்வன் ஒருவன்
அடக்க முடியாத் துயருடன் வந்து
கிளத்திடக் கேட்டுத் தளர்ச்சி அடைந்துதன்
உளத்துயர் மேலிட, "உண்மையில் எந்தை
இன்னல் எவர்க்கும் இழைத்தவர் அல்லர்
எந்தைக் கிந்நிலை என்னால் இன்று
வந்ததே" என்ற வருத்தம் வெளிப்பட
"இன்னே செல்வேன்; எந்தையைக் காண்பேன்;
அன்புசால் அழகரே! அருந்தமிழ் ஆர்வலர்
இங்குள இளையரும் முதியரும் எழுச்சி
பொங்கிநிற் கின்றனர்; பொறுப்புடன் நீயிர்
அன்னவர் எழுச்சியை அறிந்தே அவர்தமை
நன்னெறிப் படுத்துக நான்விடை கொள்கிறேன்"
என்ற மாரியின் இருகை பற்றித்
"துன்பம் சூழ்கையில் துணையாய் இருப்பதே
அன்பர்க்(கு) அழகாம்; அரிய பண்புசால்
நண்பர்க்(கு) அழகாம் நானும் வருவேன்
நும்முடன்" என்று நொடியில் புறப்பட,
மாரியும் அழகனும் வந்து சேதி
கூறிய கேள்வனும் குமுறு கின்ற
வருத்தம் செலுத்த வந்தனர்; நாவலூர்
மருத்துவ மனையில் மயங்கிக் கிடந்த
அய்யரை மாரி அன்புடன் நோக்கி
மெய்யெலாம் சோர விதிர்த்து நின்றனன்
வந்த மருத்துவர் மாரியைக் கண்டு,
"தந்தையை உயிர்த்திடத் தக்கவர் குருதி
தேவை; நேரம் செல்லச் செல்ல
ஆவி ஒடுங்கும்; அவர்க்குக் குருதி
வழங்கிட நுமருள் வாய்ப்புளோர் வருக" என,
அழகன் முன்வந்து "அய்யா! நானே
தருவேன் பெறுக" என தக்கவா றாய்ந்தபின்
குருதியை அழகன் கொடுத்தனன்; குருதியில்
சாதியும் இல்லை சமயமும் இல்லை
ஆதலால் மாரியின் அய்யர் உடலில்
ஓடிய அழகனின் உதிரம் விரைவில்
நாடியை உசுப்பி நலஞ்செய் தமையால்
அழுந்த மூடி யிருந்த விழிகள்
திறந்தன; அருகில் சிதைந்த நெஞ்சுடன்
நின்ற மகனை நெகிழ்ந்து நோக்கிக்
குன்றிய குரலால் "குறிச்சிக் கூட்டம்
வெற்றியோ" என்று வினவிய தந்தையின்
பற்றினை அறிந்து பட்ட துயரில்
பாதி குறையப் பாசம் மேலிட
"ஏதும் குறைவிலை எழுச்சியாய்க் கூட்டம்
நிறைந்தது; இங்கே நிகழ்ந்தது என்" என
"மறைந்து நின்று வாலியைச் சாய்த்த
வில்லன் இராமனை விறலோன் என்னும்
புல்லரே இந்தப் புவியில் பலராய்
இருப்பதால் இன்றும் இராமனைப் போற்பலர்
இருப்பதும் அவர்தம் ஏவு கணைகளாய்
நம்மவர் சிலரே நம்போல் வார்க்குத்
துன்பம் செய்தலும் தொடர்கதை யானதால்
ஊரில் உயர்ந்த சாதியர் என்மொரு
பூரியர் சொன்ன பொய்யுரைக் கிணங்கி
அறிவும் மானமும் அறவே இலாத
சிறியர் சிலர்எனைத் தெருவில் மறித்தனர்;
"உன்னை ஒழித்தால் உன்மகன் ஒடுங்குவன்"
என்னச் சொல்லி என்னைத் தாக்கினர்;
சாதியை நிறுத்தத் தகுவழி என்றுஎனை
வீதியில் வீழ்த்தினர்; விளைந்தது வேறாம்;
உன்னை விரும்பும் உயர்ந்தவள் அரசி
என்னைக் கண்டதும், இங்குச் சேர்த்ததும்
காவல் நிலையம் கடுகிச் சென்றதும்,
ஏவப் பட்டோர் ஏவியோர் இவர்எனக்
கூறிக் குற்றம் பதிந்ததும் இன்றுஇவ்
வூரெலாம் பேச்சாய் உளதாம்; சாதி
வெறிகொண் டலையும் வீணரால் தூய
அறிவர சிக்கோ உனக்கோ ஆர்இடர்
நேருமோ என்றே நெஞ்சம் கலங்குவன்
ஆருளர் நமக்கே அருந்துணை?" என்னலும்,
அருகில் வந்த அழகன் அன்புடன்
"பெரியீர்! நிலக்கிழார் பெருமாள் அவர்களின்
தங்கை மகன்யான்; தமிழினப் பற்றால்
உங்கள் மகனிடம் உறவு கொண்டவன்;
என்போல் இளையரும் முதியரும் உணர்வால்
ஒன்றியோர் பலர்உளர் உமக்குத் துணையாய்"
என்றழ கப்பன் இயம்பிடப், பெரியவர்
நன்றியோ டவனை நயந்து நோக்கத்
"தந்தையே! குருதியைத் தந்து நும்முயிர்
தந்தவர் இவரே; தமிழின உணர்வால்
ஒன்றிய இவரெனக்கு உற்ற தமையனார்"
என்று மாரி யப்பன் இயம்பிட,
அகம்நிறை காதலால் அழகனை நோக்கி,
"மகனே! வாழ்க; மாரிஉன் இளவல்
துணையாய் அவற்குத் தூயவ தொடர்க" என,
நனைந்த கண்ணராய்ப் பெரியவர் நவில,
வருந்துணை இவன்என மாரியி வரித்த
அருந்துணை அரசி, மருந்துகள் வாங்கி
வந்தவள், அங்கு மாரி யப்பன்
நின்றது கண்டும் மயக்கம் நீங்கிப்
பெரியவர் மீண்டும் பிறந்தது கண்டும்
சிறியவர் திட்டம் சிதைந்த தாலும்
ஆறுதல் அடைந்து, மாரியை, அழகனை
வேறிடம் அழைத்துச் சென்று விளம்பினள்;
"கொல்ல வந்த கோள்இலார் இவர்இவர்
கொல்லத் தூண்டிய கொடியர் இவர்எனக்
குறித்துச் சொல்லியும் குற்றவா ளிகளை
மறித்துத் தளைத்துச் சிறையில் மாட்டும்
கருத்தே இன்றிக் காவல் துறையினர்
இருத்தல் ஏனோ" என்று வியப்பும்
கவலையும் ஒருங்கே காட்டிட, "அரசி !
கவலை வேண்டா; இவ்வூர்க் காவல்
துறையின் பொறுப்பினர் தூய்மையில் மதத்தின்
நெறியே நாடெலாம் நிலைத்திட நினைக்கும்
அமைப்பின் ஆதர வாளர் ஆவர்;
நமைப்போல் வார்க்கு நல்லது செய்யார்;
அதனால் காவலர் ஆதர வைநாம்
எதிர்பா ராமல் என்றும் விழிப்புடன்
நாமே நமக்குக் காவல் ஆகி
ஏமம் சூழ்தலே ஏற்புடைத்(து) என்று
மாரி சொன்னதை அழகனும் அரசியும்
நேரிதாம் என்றே நெஞ்சிற் கொண்டனர்
மருத்துவ மனையில் மாரியின் தந்தையைக்
கருத்துடன் காத்தனர்; கடந்தன சில நாள்;
முழுநலம் பெற்றே முதியவர்
விழுமிய மகனொடும் வீடுசேர்ந் தனரே
Sunday, June 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment